பதிவு செய்த நாள்
26 மே2017
23:52

புதுடில்லி : வலைதளம் மூலம் புதுமையான தொழில்களில் ஈடுபடும், ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் பல்வேறு சலுகைகளுக்கான வரம்பு, ஐந்து ஆண்டுகளில் இருந்து, ஏழு ஆண்டுகளாக உயர்த்தப்பட்டு உள்ளது.
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம், ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களுக்கான வரையறையில், சில மாற்றங்களை செய்துள்ளது.
அது தொடர்பாக வெளியிடப் பட்டுள்ள அறிக்கை: புதுமையான கண்டுபிடிப்புகள்; பொருட்கள் அல்லது சேவைகளை மேம்படுத்துதல்; சொத்துகளை உருவாக்குதல்; அதிகளவில் வேலைவாய்ப்புகளை வழங்கக் கூடிய வர்த்தகம் அல்லது சேவைகள் ஆகியவற்றில் ஈடுபடுபவை, ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள் வகையறாவுக்குள் அடங்கும். கடந்த, 2016ல் அறிமுகப்படுத்தப்பட்ட, ‘ஸ்டார்ட் அப் இந்தியா ஆக் ஷன் பிளான்’ திட்டத்தின் கீழ், ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள், பதிவு செய்த நாளில் இருந்து, ஐந்து ஆண்டுகள் வரை, பல்வேறு சலுகைகள் பெற தகுதி உடையவை என, தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த சலுகை, தற்போது, 7 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இந்த காலவரைக்குள், ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனத்தின் ஆண்டு விற்றுமுதல், 25 கோடி ரூபாய்க்கு குறைவாக இருந்தால் மட்டுமே, சலுகைகள் கிடைக்கும். உயிரி தொழிற்நுட்பத் துறையைச் சேர்ந்த, ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள், சலுகைகளை பெறுவதற்கான கால வரம்பு, 10 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டு உள்ளது. அறிவியல், உயிரி தொழிற்நுட்பம் உள்ளிட்ட துறைகளின் மூத்த அதிகாரிகளை கொண்ட குழு, ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனத்திற்கான தகுதியை ஆராய்ந்து, சான்றிதழ் வழங்கும். இதற்கு, வலைதளம் அல்லது ‘மொபைல் ஆப்’ மூலம், ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள் விண்ணப்பித்து, சான்றிதழ் பெற்று, வரிச்சலுகைகளை கோரலாம்.
உரிய ஆவணங்களை அளிக்காமலோ அல்லது தவறான தகவல்களை அளித்தோ சான்றிதழ் பெற்றது தெரிய வந்தால், அந்நிறுவனத்தின் சான்றிதழ் செல்லாது என அறிவித்து, சலுகைகள் ரத்து செய்யப்படும். இந்த சலுகைகளுக்காக, ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள், தொழில் கூட்டமைப்புகள் அல்லது ‘இன்குபேட்டர்’ எனப்படும், வளர்ப்பகங்கள் இடமிருந்து, எவ்விதமான பரிந்துரை கடிதங்களையும் சமர்ப்பிக்க தேவையில்லை.
புதிய தொழில்களை சுலபமாக துவக்கவும், தொழில்முனைவோரை ஊக்குவிக்கவும், ‘ஸ்டார்ட் அப்’ விதிமுறைகள் தளர்த்தப்பட்டு உள்ளன. குறிப்பாக, வேலை தேடுவோருக்கு பதிலாக, வேலையை உருவாக்குவோர் உள்ள நாடாக, இந்தியாவை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில், இந்த மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களுக்கு, முதல் மூன்று ஆண்டுகளுக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இச்சலுகை, ஐந்து ஆண்டுகளாக உயரும். இந்நிறுவனங்களில், நிதி நிறுவனங்கள் செய்யும் முதலீடுகள் மீதான வரி நீக்கப்பட்டு உள்ளது; தனிநபர் முதலீடுகள் மீதான வருவாய்க்கு, மூலதன ஆதாய வரியில் இருந்து, விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|