பதிவு செய்த நாள்
29 மே2017
05:04

‘டிஜிட்டல் தங்கம்’ என்றும், ‘எதிர்கால நாணயம்’ என்றும் சொல்லப்படும் பிட்காயின் பற்றி பேசுவதற்கு, இரண்டு காரணங்கள் சமீபத்தில் ஏற்பட்டுவிட்டன. ஒன்று, ‘வான்னாக்ரை’ என்ற பிணைத்தொகை கோரும் வைரஸ், சில நாட்களுக்கு முன், உலகெங்குமுள்ள பல கணினிகளைத் தாக்கியது. கணினிகளை விடுவிக்க, ‘ஹேக்கர்’கள் கோரியது, பிட்காயின்களை தான்.
இரண்டாவது, இந்தியாவில் பிட்காயின் போன்ற டிஜிட்டல் கரன்சிகளைத் தடை செய்யலாமா; நெறிப்படுத்தலாமா; சுயக்கட்டுப்பாடுடன் இயங்க அனுமதிக்கலாமா... என, மத்திய அரசு பொதுமக்களிடம் கருத்து கேட்டுள்ளது. இந்தியாவில் டிஜிட்டல் நாணயங்கள் சட்டப்பூர்வமானவை அல்ல. ஆனால், அது சட்டவிரோதமானவையும் அல்ல; யாரும் பயன்படுத்தக்கூடாது என்ற நேரடி கட்டுப்பாடு இல்லை. ‘எச்சரிக்கையுடன் இருங்கள்’ என்பது மட்டுமே, ஆர்.பி.ஐ., அறிவுரை.
இந்த குழப்பத்தையே வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு, மூன்று பிட்காயின் பரிவர்த்தனை இணையதளங்கள் தோன்றிவிட்டன. சமீபத்தில், பிட்காயின் ஒன்றின் விலை, 2,400 டாலரை (சுமார் ரூ.2 லட்சத்துக்கு மேல்) தொட்டவுடன், ‘ஐயோ! நாம் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பை தவறவிட்டு விட்டோமோ’ என, பல அப்பாவி பொதுமக்களும் பிட்காயினில் முதலீடு செய்வதா – வேண்டாமா என, பரிதவிக்கின்றனர்.
ஜப்பான் அனுமதி
இவர்களுடைய ஆசையில் நெய்யை ஊற்றுவது போல், வேறு சில சம்பவங்களும் நடைபெற்றுள்ளன. ஏப்ரல் மாதம் முதல், பிட்காயினில் முதலீடு செய்ய ஜப்பான் அனுமதி வழங்கியுள்ளது. அமெரிக்காவில் பல வர்த்தக நிறுவனங்களும், இ – காமர்ஸ் வலைதளங்களும் பிட்காயின்களை ஏற்கின்றன. போதும் போதாதற்கு, பிட்காயினைச் சுற்றி, ஏராளமான, ‘உடோபிய’ கற்பனைகள். புகழ்பெற்ற தொழில்நுட்ப பெரிய தலைகளின் சாட்சியங்கள்.இந்திய அரசு கருத்து கேட்கத் துவங்கியவுடன், விவாதம் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. தடை செய்யலாமா என்று மட்டும் கேட்காமல், நெறிப்படுத்தலாமா என்ற கேள்வி எழுவதேன்... இதற்கு பின்னே இருக்கும் அர்த்தம் என்ன... இன்று வரை உலகெங்கும் உருவாக்கப்பட்டுள்ள எந்த ஒரு கரன்சியையும், அதன் ஆரம்பம் முதல் முடிவு வரை, நகரும் பயணத்தைக் கண்டுபிடிக்க முடியாது.
பணமதிப்பு நீக்க நடவடிக்கை என்பதே, கறுப்புப் பணம் உருவாவதைத் தடுக்க எடுக்கப்பட்டது தானே! பணத்தாள்கள் எங்கோ போய் பதுங்கிக் கொள்கின்றன; மறைக்கப்படுகின்றன என்பது தானே குற்றச்சாட்டு. இந்த தொல்லை டிஜிட்டல் கரன்சியில் சாத்தியமில்லை. ஒவ்வொரு பிட்காயினும், யாரிடம் இருக்கிறது என்பது வெளிப்படையாகத் தெரியும். அதன் ஒவ்வொரு கைமாறுதலும் எண்ணற்ற நபர்களால் பதிவு செய்யப்படுகிறது. இங்கே மறைக்க வாய்ப்பே இல்லை. ஒவ்வொரு நாட்டுக்கும் தவிர்க்க முடியாத தலையெழுத்து பிட்காயின். ஒருசில முதலீட்டாளர்கள், அரசின் எச்சரிக்கைகளையும் மீறி முதலீடு செய்கின்றனர். அதில் ஏற்படும் விலை ஏற்ற இறக்கங்கள், சமூகத்துக்குள் ஏற்படுத்தும் பொருளாதார பாதிப்புகள் மிகப்பெரியவை.
சிறு முதலீட்டாளர்கள் முதற்கொண்டு, பலரும் பிட்காயின் ஜோதியில் கலக்க விரும்புகின்றனர். அவர்களுடைய தொகைக்கு எந்தவிதமான பாதுகாப்போ, வருவாய்க்கான உத்தரவாதமோ இல்லாத ஊகவணிகமாகவே டிஜிட்டல் கரன்சி உள்ளது. இந்நிலையில், இதை தடை செய்வதைவிட, ஏதேனும் ஒருவகையில் நெறிப்படுத்த வேண்டிய தேவை அரசுகளுக்கு. அதனால் தான், ஜப்பான் பிட்காயினைச் ‘சொத்து’ (Asset) என்று வரையறை செய்தது, ‘நாணய’மாகப் பயன்படுத்தச் சொல்லவில்லை. மேலும், இந்தச் சொத்துக்கு மூலதன ஆதாய வரியையும் விதித்துள்ளது.
எப்படி நெறிப்படுத்தவது? பிட்காயினை நேராக பார்க்க முடியாது; தொட முடியாது; பயன்படுத்த முடியாது என்பதனால், அதற்கு நேரடியான கட்டுப்பாடுகளை விதிக்க வாய்ப்பில்லை. ஆனால், நிஜ ரூபாய் உலகத்துக்கும், ‘டிஜிட்டல்’ நாணய உலகத்துக்கும் வாயிலாகச் செயல்படுபவை பிட்காயின் எக்ஸ்சேஞ்சுகள், வலைதளங்கள் ஆகியவை. இவற்றுக்கான கட்டுப்பாட்டு நெறிகளை மத்திய ரிசர்வ் வங்கி கொண்டு வரலாம். போதிய நிதி ஆதாரங்களை வைத்திருப்பது, முதலீட்டாளர்களின் வங்கிக் கணக்கு, ஆதார் எண், பான் எண் ஆகியவற்றைப் பெற்று கோப்புகளைப் பராமரிப்பது, சந்தேகத்துக்குரிய முதலீடுகளைத் தடுப்பது, கணினி நெட்வொர்க்குகளை ஹேக்கர்களின் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பாக வைத்திருப்பது போன்ற செயல்களை வலியுறுத்தலாம். அதாவது, இப்போதிருக்கும் பங்குச் சந்தைகளைப் போல், பிட்காயின் சந்தையையும் கட்டுப்படுத்தலாம்.
ஆனால், இதில் உள்ள ஒரே சிக்கல். பிட்காயின் சந்தை என்பது ஒருமுகப்பட்டது அல்ல. பிட்காயின் என்பது ஒரு டிஜிட்டல் கரன்சி மட்டுமே. அதுபோல், எண்ணற்ற கரன்சிகள் புழக்கத்துக்கு வந்துவிட்டன. ஒவ்வொருவரும் வெவ்வேறு எக்ஸ்சேஞ்சுகள் மூலம், பரிவர்த்தனைகளில் ஈடுபடுகின்றனர். இந்தச் சூழ்நிலையில் தான், சுயக்கட்டுப்பாடு என்ற விஷயம் கவனம் பெறுகிறது. அதாவது, டிஜிட்டல் நாணயங்களில் பணம் போடுபவர்களும், வலைதளங்களும், எக்ஸ்சேஞ்சுகளும் தமக்குள்ளேயே சுயக்கட்டுப்பாட்டு நெறிகளை உருவாக்கிக் கொள்ள வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என, குரல் எழுப்பப்படுகிறது.
ஏற்பரா இந்தியர்கள்?
பிட்காயின் என்பதே வழக்கமான வங்கியியல் நடைமுறைகளுக்கும் அரசாங்கங்களின் நெறிமுறைகளுக்கும் சட்டத்திட்டங்களுக்கும் வெளியே உருவான சர்வதேச நாணயம். சொல்லப் போனால், பரஸ்பர அவநம்பிக்கையில் (Mutual Mistrust) இயங்கும் நாணயம் இது. இதில் எல்லாருமே சந்தேகத்துக்குரியவர்கள். நம்பிக்கை, நேர்மை, வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை இதில் சம்பந்தப்பட்ட தொழில்நுட்ப வல்லுனர்களே உருவாக்கிக் கொள்ள வேண்டியது தான். தவறுகளும் குறைகளும் கண்டுபிடிக்கப்படுவது போல், தீர்வுகளும் கண்டுபிடிக்கப்படும். இதில் அரசு நேரடியாக தலையிடாமல், ஒரு குறிப்பிட்ட நிலையை அடையும் வரை, காத்திருக்க வேண்டும் என, கருதுகின்றனர், ‘டிஜிட்டல்’ நாணய ஆர்வலர்கள். அதற்குள் ஏராளமான அப்பாவிகள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இழந்துவிட்டால் என்ன செய்வது என்ற அச்சம் எழாமலில்லை.
ரூபாய் தாள்களில் உள்ள தொகை என்பது வெறும் எண் தான். அந்த எண்ணுக்கு, மதிப்பும் உத்தரவாதமும் வலுவான அங்கீகாரமும் தருவது, மத்திய ரிசர்வ் வங்கியும் இந்திய அரசும் தான். இத்தகைய சட்ட ரீதியான அந்தஸ்துக்கு வெளியே இருப்பவை, டிஜிட்டல் நாணயங்கள். மேலை நாடுகளைப் போலல்லாமல், பாதுகாப்பான முதலீடுகளை விரும்புபவர்கள் இந்தியர்கள். அரசு எத்தகைய நெறிமுறைகளை ஏற்படுத்தித் தந்தாலும், இந்தியாவில் டிஜிட்டல் நாணயங்களை ஏற்பவர்களின் எண்ணிக்கை சொற்பமாகவே இருக்கும்.!ஆர்.வெங்கடேஷ், பத்திரிகையாளர்
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|