பதிவு செய்த நாள்
29 மே2017
05:08

அவசரமாக பணம் தேவைப்படும் சூழலில், கையில் பணம் இல்லாத நிலையில், பலவிதமான கடன் வசதிகளை நாடலாம். தங்கத்தை அடமானம் வைத்து கடன் பெறலாம்; வைப்பு நிதி போன்ற சில முதலீடுகள் மீதும் கடன் பெறலாம். இதே போல ஆயுள் காப்பீடு பாலிசிகள் மீதும் கடன் பெறும் வாய்ப்பு இருக்கிறது.எல்லா வகையான பாலிசிகள் மீதும் கடன் பெற முடியாது. கடன் பெறுவதற்கான தகுதி உள்ள பாலிசிகள் மீது மட்டுமே கடன் பெறலாம். ‘டெர்ம் இன்சூரன்ஸ்’ வகை பாலிசிகள் மீது கடன் சாத்தியமில்லை.
காப்பீடு மற்றும் முதலீடு அம்சம் கொண்ட எண்டோமென்ட் மற்றும் மணிபேக் வகை பாலிசிகளில் இது சாத்தியம். யூலிப்கள் மீது கடன் வழங்க அனுமதி இல்லை.பாலிசி எடுத்தவுடன் கடன் பெறுவதும் சாத்தியமில்லை. குறிப்பிட்ட காலம் காத்திருக்க வேண்டும். பாலிசிக்கு சரண்டர் மதிப்பு உண்டாகியிருக்க வேண்டும். பொதுவாக, வழக்கமான பாலிசிகளில் 2 முதல் 3 ஆண்டு பிரீமியம்கள் செலுத்திய பிறகே குறைந்தபட்ச சரண்டர் மதிப்பு உண்டாகும். ஆரம்பத்தில் இது மொத்த பிரீமியத்தில், 30 சதவீதமாக இருக்கும். அதன் பின் ஆண்டுதோறும் அதிகரிக்கும்.
சரண்டர் மதிப்பிற்கு எதிராகவே கடன் வழங்கப்படும். பொதுவாக இந்த மதிப்பில் 70 சதவீதம் வரை கடன் பெறலாம். குறைந்த பட்ச உத்திரவாத சரண்டர் மதிப்பு மற்றும் விசேஷ சரண்டர் மதிப்பு என, இரண்டு வகை உள்ளன. பாலிசி மீதான கடனுக்கு, 8 முதல் 10 சதவீத வட்டி வசூலிக்கப்படும். ஆண்டுதோறும் வட்டியேனும் கட்டி வர வேண்டும். பாலிசி காலம் வரை கடனை வைத்திருக்கலாம். அசல் தொகையை செலுத்தலாம் அல்லது பாலிசி தொகையில் கழித்துக் கொள்ளவும் செய்யலாம்.
பாலிசி அமலில் இருக்கும் வரை பணம் கட்டத் தவறினாலும், அசல் மற்றும் வட்டியை விட பாலிசி மதிப்பு அதிகமாக இருந்தால், கடன் தொடரும். இல்லை எனில் பாலிசி முன்கூட்டியே முடிக்கப்பட்டு கடன் தொகை எடுத்துக்கொள்ளப்படும்.தவிர்க்க இயலாத சூழ்நிலையில் மட்டுமே இந்த வாய்ப்பை பயன்படுத்தலாம் என, வல்லுனர்கள் கருதுகின்றனர். அதிலும் மற்ற கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகமாக உள்ள நிலையில் மட்டுமே நாட வேண்டும். ஆயுள் காப்பீடு என்பது நீண்ட கால பாதுகாப்பு அளிப்பது என்பதை மனதில் கொள்ள வேண்டும். கடன் தொகை என்பது சரண்டர் மதிப்பின் ஒரு பகுதி என்பதால், இறுதியில் பெறும் பலனும் குறைவாகவே இருக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|