பதிவு செய்த நாள்
29 மே2017
05:10

மற்றவர்கள் செய்வதை பார்த்து, அதே போல செய்ய வேண்டும் எனும் நிர்ப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ளும் நிதி அழுத்தம், பொருளாதார நோக்கில் பாதிப்பை உண்டாக்கும்.
கோடை விடுமுறையை குதுாகலமாக கழித்தவர்கள், தங்கள் பயண அனுபவத்தை நண்பர்களிடமும், சகாக்களிடம் உற்சாகமாக பகிர்ந்து கொள்வது இயல்பானது தான். அதிலும் குறிப்பாக சிறுவர், சிறுமியர் தாங்களின் சுற்றுலா அனுபவத்தை கண்கள் விரிய, பெருமிதத்துடன் தங்களுக்குள் பேசிக்கொள்ளலாம். அனுபவங்களை பகிர்ந்து கொள்வது என்பது வழக்கமானது தான் என்றாலும், இதனால் ஏற்படக்கூடிய தாக்கம், ஒருவரின் நிதி வாழ்க்கையையும் பாதிக்கிறது என்பதை அறிய வேண்டும். மற்றவர்கள் சென்று வந்த இடங்களுக்கு நாமும் செல்ல வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை இவை உருவாக்குகின்றன.இணையம் உள்ளிட்ட வசதிகளால் பயணங்களை திட்டமிடுவதும் எளிதாகி இருக்கிறது. பயண அனுபவங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதும் சுலபமாக உள்ளது.
சுற்றுலா போட்டி
சுற்றுலா அனுபவங்களை ஆர்வமாக பகிர்ந்து கொள்வதோடு, யார் சிறந்த இடத்திற்கு சுற்றுலா சென்று வந்தது என, பெருமிதம் கொள்வதிலும் பிள்ளைகள் மத்தியில் போட்டி நிலவுகிறது. இந்த போட்டிக்கு பெரியவர்களும் விதிவிலக்கல்ல. எனினும், இந்த போட்டியை தீவிரமாக எடுத்துக் கொண்டு, மற்றவர்கள் சென்று வந்தது போன்ற இடங்களுக்கு நாமும் ஆடம்பர சுற்றுலா செல்ல வேண்டும் எனும் எண்ணம் பலருக்கு உண்டாக வாய்ப்புள்ளது. இந்த ஆண்டு தவறவிட்டாலும், அடுத்த ஆண்டு பெரிய அளவில் சுற்றுலா சென்று வரவேண்டும் என, அவர்கள் நினைக்கலாம்.சுற்றுலா என்றில்லை, டி.டீ.எச்., சேவை, மொபைல்போன், ஆடைகள், கல்வி, ரெஸ்டாரென்ட்கள், சொகுசு கார் என, மேலும் பல விஷயங்களில் மற்றவர்கள் செய்வதை பார்த்து செய்யும் பழக்கம் பரவலாக இருக்கிறது. இத்தகைய நிர்ப்பந்தத்தை அலட்சியம் செய்ய முடியாமல் நிறைவேற்ற முற்படும் போது, அவை நிதி அழுத்தமாக மாறிவிடுவதாக நிதி வல்லுனர்கள் கருதுகின்றனர்.
சொகுசு கார் விருப்பம்
மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்ப்பது தவிர்க்க இயலாதது என்றாலும், இதனடிப்படையில் வாழ்க்கைத் தேவைகளும் அமையும் போது நிதி அழுத்தம் ஏற்படுகிறது. சொந்தமாக கார் வைத்திருப்பவர் சிறிய காரில் திருப்தி அடையாமல், அலுவலக சகா போல ஆடம்பரமான பெரிய கார் வாங்க நினைத்தால் அவரது பட்ஜெட்டில் துண்டு விழலாம். அதே போலவே, டி.டீ.எச்., சேவையில் திருப்தி கொள்ளாமல், நண்பர்களை பார்த்து இணைய ஸ்டீரிமிங் சேவைக்கு சந்தா செலுத்தினாலும் கூடுதல் செலவாகும்.
ஆடம்பரமான ரெஸ்டாரென்ட் களை நாடுவது, சொகுசு அம்சங்கள் கொண்ட வீடு வாங்க நினைப்பது என, மற்றவர்களை பார்த்து ஏற்படும் நிர்ப்பந்தம் பல விதங்களில் பாதிக்கிறது.வீடு மற்றும் அலுவலகம் என, இரண்டு இடங்களிலுமே இத்தகைய தாக்கம் ஏற்படலாம். ஆனால், மற்றவர்கள் வாழ்க்கை முறையை பார்க்கும் ஒருவர், அதன் பின்னே இருக்கும் நிஜத்தை அறிந்து கொள்ள முயற்சிப்பதில்லை. ஆடம்பர சுற்றுலாவுக்கு சென்று வந்தவர் அதற்காக தனிநபர் கடன் வாங்கியிருக்கலாம்.
எப்படி தவிர்ப்பது?
மற்றவர்கள் வாழ்க்கை முறை தாக்கத்தின் காரணமாக, நிதி முடிவுகள் அமையாமல் இருக்க நிதி வல்லுனர்கள் சில யோசனைகளை முன் வைக்கின்றனர். செலவு செய்யும் போது ஆடம்பரத்தை பார்க்காமல், அதனால் ஏற்படும் அனுபவத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்கின்றனர். 50,000 ரூபாய் செலவு செய்து, அக்கம்பக்கத்தினர் வியக்க பிறந்தநாள் விழா கொண்டாடுவதை விட, பல ஆண்டுகள் கழித்தும், பிள்ளைகள் நினைத்து மகிழக்கூடிய வகையில், அந்த கொண்டாட்டம் அமைவதே சிறந்ததாக இருக்கும்.
அதே போல மற்றவர்களை எட்டிப்பிடிக்க வேண்டும் என நினைக்காமல் இருக்க வேண்டும் என்கின்றனர். மாறாக குடும்பத்தின் தேவை அறிந்து, அவற்றை நிறைவேற்றிக் கொள்ள முயற்சிக்க வேண்டும். செலவுகளை மேற்கொள்ளும் போது பட்ஜெட்டை மனதில் கொள்ள வேண்டும். சமூக ஊடகங்களில் பகிரப்படும் புகைப்படம் மற்றும் தகவல்கள் தாக்கம் செலுத்தவும் அனுமதிக்க கூடாது. தேவையில்லாத செலவுகளை ஏற்படுத்தக்கூடிய நிகழ்வுகள் மற்றும் அழைப்புகளை நிராகரிக்கும் பக்குவம் வேண்டும். மற்றவர்கள் போல வாழ்வதை விட, ஒருவர் தான் விரும்பும் வகையில் வாழ்வதற்கான வழிகளை தேடினால், அவரது நிதி வாழ்க்கையும் சிறப்பாக அமையும்.
நிதி அழுத்தம் பாதிக்காமல் இருக்க...
* தேவை மற்றும் விருப்பங்களுக்கான வேறுபாட்டை அறிய வேண்டும்.
* ஆடம்பரத்தை விட, அனுபவமே முக்கியம் என உணர வேண்டும்.
* வாழ்க்கைத் தேவைகள் நிதி நிலை மற்றும் இலக்குகளுக்கு ஏற்ப அமைய வேண்டும்.
* சமூக ஊடக கருத்துக்கள் அடிப்படையில் வாழ்க்கைத் தேவைகள் அமையக்கூடாது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|