பதிவு செய்த நாள்
05 ஜூன்2017
07:48

நாட்டின் மிகப்பெரிய வரிச்சீர்த்திருத்தமான, ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி; முதலீடு, காப்பீடு, வங்கிச்சேவை உள்ளிட்ட நிதிச்சேவைகள் மீது, எப்படி தாக்கம் செலுத்தும் என்பது பற்றி ஒரு பார்வை:
சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு (ஜி.எஸ்.டி.,) ஜூலை மாதம் முதல் அமலுக்கு வருகிறது. மிகப்பெரிய வரி சீர்த்திருத்தம் என குறிப்பிடப்படும், ஜி.எஸ்.டி., வரி விதிப்பு, அனைத்து மறைமுக வரிகளையும் ஒருங்கிணைக்கும் வகையில் அமைகிறது. ஜி.எஸ்.டி., வரி விகிதம், பல்வேறு வகையான பொருட்களுக்கு எப்படி பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சில பொருட்களின் விலை குறையவும், சிலவற்றின் விலை அதிகமாகவும் வாய்ப்புள்ளது. நிதித்துறையிலும், ஜி.எஸ்.டி., வரி விதிப்பின் தாக்கம் இருக்கும். தற்போது பல்வேறு வகையான நிதிச்சேவைகள் சேவை வரிக்கு உட்பட்டவையாக இருக்கின்றன.
சேவை வரி, 15 சதவீதமாக இருக்கிறது. ஜி.எஸ்.டி.,யின் கீழ் நிதிச்சேவைகள், 18 சதவீத வரி விதிப்புக்கு உட்பட்டவை. முதலீடு, காப்பீடு, வங்கிச்சேவை உள்ளிட்ட நிதிச்சேவைகள் மீது, ஜி.எஸ்.டி., தாக்கம் செலுத்தும். காப்பீடு: ஜி.எஸ்.டி., அமலாக்கத்திற்கு பின், ஆயுள் காப்பீடு மற்றும் பொது காப்பீட்டு பிரீமியம் உயரும் நிலை உள்ளது. ஆயுள் காப்பீட்டு பாலிசிகளை பொறுத்தவரை, ஜி.எஸ்.டி.,யின் தாக்கம், பாலிசியின் வகைக்கு ஏற்ப அமையும். டெர்ம் இன்சூரன்ஸ், யூலிப்கள் மற்றும் எண்டோமென்ட் பாலிசி என, மூன்று வகையான பாலிசிகள் உள்ளன. இவை ஒவ்வொன்றுக்கும், ஜி.எஸ்.டி.,யின் தாக்கம் வேறுபடும்.
துாய ஆயுள் காப்பீட்டு பாலிசிகளை பொறுத்தவரை, முழு பிரீமியத்திற்கும் சேவை வரி உண்டு. மற்ற பாலிசிகளில் விதிக்கப்படும் கட்டண விகிதத்திற்கு மட்டும் சேவை வரி பொருந்தும். ஜி.எஸ்.டி.,க்குப்பின் டெர்ம் மற்றும் எண்டோமென்ட் பாலிசிகளுக்கான பிரீமியம் அதிகமாகும். 3 சதவீதம் வரை இது இருக்கலாம் என கருதப்படுகிறது. மருத்துவ காப்பீட்டுக்கும் இது பொருந்தும். பொது காப்பீடு பாலிசியும், 18 சதவீத வரியால் அதிகமாகும். எனினும், ஜி.எஸ்.டி., யின் கீழு பொருந்தும், இன்புட் டாக்ஸ் கிரெடிட் காரணமாக, இந்த தாக்கம் ஓரளவு குறையும் வாய்ப்பு உள்ளது. புதிய மற்றும் ஏற்கனவே உள்ள பாலிசிதாரர்களுக்கு இது பொருந்தும்.
வங்கிச்சேவை: ஜி.எஸ்.டி., கீழ், 18 சதவீத வரி விதிப்பில் வருவதால், நிதிச்சேவைகளுக்கான பரிவர்த்தனை கட்டணம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இதுவரை இந்த சேவைகள், 15 சதவீத சேவை வரிக்கு உட்பட்டு இருந்தன. தற்போது, இது, 3 சதவீதம் உயர்கிறது. குறிப்பிட்ட அளவுக்கும் மேலான, ஏ.டி.எம்., பரிவர்த்தனைகள், குறைந்தபட்ச தொகையை பராமரிக்காமல் இருப்பதற்கான கட்டணம் ஆகியவற்றுக்கு சேவை வரி பொருந்தும். இவை மீது, 3 சதவீத கூடுதல் வரி விதிக்கப்படும் என்பதால், நிச்சயம் நிதிச்சேவைகளுக்கான கட்டணம் ஓரளவு உயரும். எனினும் கிரெடிட் இன்புட் வசதி, இதை ஓரளவு ஈடு கட்ட உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மியூச்சுவல் பண்ட்:
இந்த பிரிவில், ஜி.எஸ்.டி., தாக்கம் குறைவாகவே இருக்கும் என கருதப்படுகிறது. நிதியின் மொத்த செலவு விகிதம் மீது, ஜி.எஸ்.டி., விதிக்கப்படும். இது, 3 சதவீதம் உயரும். நிதியை பராமரிக்க நிறுவனத்திற்கு ஆகும் செலவாக இது அமைகிறது. எனினும், இந்த தொகைக்கான வரம்பு இருக்கிறது.
ரியல் எஸ்டேட்:
இந்த துறை, மத்திய மற்றும் மாநில அரசுகளின், பல்வேறு வகையான வரிவிதிப்புக்கு இலக்காகிறது. ஜி.எஸ்.டி., ஒருங்கிணைந்த வரி விதிப்பை சாத்தியமாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், வீடுகளின் விலையின் மீதான தாக்கத்தை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என, இத்துறை வல்லுனர்கள் கருதுகின்றனர். பெரும்பாலான பணி ஒப்பந்தங்கள், 12 சதவீத பிரிவில் வந்தாலும், கட்டுமானத்தில் பயன்படும் பல பொருட்கள், 18 முதல் 28 சதவீத பிரிவில் இருப்பதை சுட்டிக்காட்டுகின்றனர். மேலும், இன்புட் டாக்ஸ் கிரெடிட் வசதியும், கணக்கில் கொள்ளப்பட வேண்டும்.
மேலும், ஜி.எஸ்.டி., தவிர, வேறு பல அம்சங்களும் விலையை தீர்மானிப்பதாக உள்ளன. எனவே விலை மீதான தாக்கம் பற்றி, இப்போது உறுதியாக கூற முடியாத நிலையே உள்ளது. பொதுவாகவே, நிதிச்சேவைகள் மீதான, ஜி.எஸ்.டி.,யின் தாக்கம் தொடர்பான முழு விபரம், அவை நடைமுறையில் அமலுக்கு வரும் போதே தெரியவரும் என கருதப்படுகிறது.
ஜி.எஸ்.டி., முக்கிய அம்சங்கள்
* நாட்டின் மிகப்பெரிய வரிச்சீர்திருத்தமாக அமைகிறது
* சில பொருட்களின் விலை குறையும்; சிலவற்றின் விலை அதிகரிக்கும்
* முதலீடு மற்றும் நிதிச்சேவைகள் மீதும் தாக்கம் செலுத்தும்
* வரிச்சீரமைப்பு வர்த்தகத்தை மேம்படுத்தி, ஒட்டுமொத்த நோக்கில் பொருளாதாரத்திற்கு உதவும் என கருதப்படுகிறது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|