பதிவு செய்த நாள்
05 ஜூன்2017
08:00

கடந்த வாரமும், பங்குச்சந்தை புதிய உச்சத்தை வெள்ளியன்று எட்டியது. சந்தை உயர, உயர உள்நாட்டு முதலீட்டாளர்கள் சந்தையில் பணத்தை முதலீடு செய்ய காட்டும் ஆர்வம் பெருகுகிறது. ஆனால், கடந்த வாரமும், எப்.ஐ.ஐ., முதலீட்டாளர்கள் இந்திய பங்குகளை விற்றனர்.
வியாழன் அன்று வெளிவந்த ஜி.டி.பீ., வளர்ச்சி குறியீடு, குறைவாக அமைந்தது கூட சந்தையில் எந்த இறக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. மாறாக, சந்தை ஏற்றத்தை கண்டது. இவ்வாரம், ரிசர்வ் வங்கியின் வட்டிவிகிதம் மற்றும் கொள்கை அறிவிப்புகள் வெளிவர உள்ளன. சில வாரங்களுக்கு முன், பணவீக்கம் சார்ந்த புள்ளிவிபரங்கள், வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைப்பதற்கான சூழலை ஏற்படுத்தியுள்ளன.
ரிசர்வ் வங்கி:
ஜி.டி.பி., குன்றிய சூழலில், வட்டி விகித குறைப்பு வளர்ச்சிக்கு வித்திடும் என, பொருளாதார பார்வையாளர்கள் கூறுகின்றனர். அதேசமயம், ரிசர்வ் வங்கி ஆளுனர், வட்டி குறைப்பு செய்வதற்கு ஏற்ற சூழல் ஏற்படாது என, சில மாதங்களுக்கு முன் கூறியதை, இந்த புதிய சூழலில் மாற்றிக் கொள்வாரா என்ற கேள்விக்கு, வரும் வாரத்தில் விடை கிடைத்துவிடும். வட்டிகுறைப்பு ஏற்பட்டால் அதை சந்தை பெரிதும் வரவேற்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. ஏனெனில், அத்தகைய முடிவை சந்தை இப்போது எதிர்ப்பார்க்கவில்லை. எதிர்ப்பாராத நேரத்தில், ஆச்சர்யமூட்டும் வகையில் வரும் பொருளாதார முடிவுகள் பொருளாதாரத்திற்கு சாதகமாக அமைந்தால், அதை சந்தை பெரிதும் வரவேற்பது இயற்கை.
பொருளாதார வளர்ச்சி மீண்டும் வேகம் பிடிக்க சிலகாலம் ஆகும் என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும். ரிசர்வ் வங்கி எடுக்கும் வட்டிவிகித முடிவு சந்தையின் போக்கை நிச்சயம் பாதிக்கும். அது சாதகமா, அல்லது பாதகமா என்பது வரும் வாரம் தெளிவுபடும். ஜி.எஸ்.டி., அடுத்த மாதம் 1ம் தேதி அமலுக்கு வர உள்ள நிலையில், நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை குறைத்து, கையிருப்பு பொருட்களை குறைத்துக் கொள்ளும் நோக்கத்தோடு செயல்படும்.
பருவ மழை:
ஆகவே, நிறுவனங்களின் உற்பத்தி ஏப்ரல் ஜூன் காலக்கட்டத்தில் மந்தமாகவே இருக்கும். இந்த காலக்கட்டத்தில், உற்பத்தி பெருக்கம் ஏற்படாத ஒரு சூழ்நிலை தற்காலிகமாக நிலவும். ஜி.எஸ்.டி., அமலுக்கு வந்தவுடன், உற்பத்தி மீண்டும் வேகம் பிடிக்கும். இதனால் பொருளாதார வளர்ச்சி இந்த நிதி ஆண்டில் வேகம் பிடிக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. இதற்கு முக்கிய காரணம், பருவ மழை உரிய காலத்தில், நாடு தழுவிய அளவில் பெய்யும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தாக்கம், பல்வேறு துறைகளில் வெளிப்படும். இதன் எதிர்ப்பார்ப்பு, முதலீட்டாளர்கள் மனதில் வளரத் துவங்கியுள்ளது. சந்தையின் தொடர் உயர்வும், பொருளாதார போக்கின் மேல் ஏற்படும் ஒருமித்த நம்பிக்கையை தெளிவாக அறிவுறுத்துகின்றன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|