பதிவு செய்த நாள்
05 ஜூன்2017
08:02

அமெரிக்க ஹார்வர்ட் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் பேசிய முகநுால் நிறுவனரான மார்க் ஜூகர்பர்க், ஒரு விவாதத்துக்கு மீண்டும் உயிரூட்டியுள்ளார். பெருகி வரும் செயற்கை நுண்ணறிவு மற்றும் தானியங்கித் தொழிற்நுட்பங்கள் காரணமாக, அடுத்த, 10, 20 ஆண்டுகளில் வேலைவாய்ப்புகள் பெருமளவு குறையப் போகின்றன. வேலையில்லாத் திண்டாட்டம் பெருகப் போகிறது. அதனைச் சமாளிக்கவும், மக்களின் குறைந்தபட்ச வாழ்க்கைத் தரத்தை உறுதிப்படுத்தவும், அனைவருக்கும் அடிப்படை வருவாய் வழங்க வேண்டும் என்பதே அவரது கருத்து.
அது என்ன அனைவருக்கும் அடிப்படை வருவாய்?
அதைப் புரிந்துகொள்வதற்கு முன் வேகமாக வளர்ந்து வரும் தொழிற்நுட்ப மாற்றங்களைப் புரிந்துகொள்வோம். ஓட்டுனர்கள் இல்லாத மின்சார கார்கள் இன்னும் சில ஆண்டுகளில் புழக்கத்துக்கு வரப் போகின்றன. ‘ஊபர்’ ஏற்கனவே இதனைச் சோதனை செய்து பார்த்துள்ளது. அது உலக அளவில், 20 சதவீத மக்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கப் போகிறது. அடுத்தது, ரோபோக்கள். பல முன்னணி கார் மற்றும் கனரக வாகனங்கள் உற்பத்தி மையங்களில் ரோபோக்கள், மனிதர்களின் இடத்தைப் பிடித்துக்கொள்ளத் தொடங்கியுள்ளன. ஐ.டி., துறை சேவைகளில், வங்கிகளில், சட்டத் துறையில், ஆயத்த ஆடைகள், கணினி மற்றும் உதிரி பாகங்கள் உற்பத்தியில் ஆட்டோமேஷன் மேன்மேலும் பெருகி வருகிறது. பல ஆயிரம் பேர் செய்த வேலைகளை ஒருசில இயந்திரங்களே மிகத் திறமையாகவும் செம்மையாகவும் செய்கின்றன. இத்தகைய முன்னேற்றங்கள், மனிதர்களின் வசதியை மேம்படுத்தலாம், ஆனால், அவர்களை வேலையற்றவர்களாக்கி, வீட்டில் முடக்கி வைக்கப் போவதும் உறுதி.
பழைய சிந்தனையாச்சே?
இந்தப் பின்னணியில் தான் ‘அனைவருக்கும் அடிப்படை வருவாய்’ என்ற சிந்தனை பிறக்கிறது. இந்த உலகம் இவ்வளவு துாரம் வளர்ந்திருக்கிறது என்றால், அதற்கான உழைப்பை ஒவ்வொரு தலைமுறையும் வழங்கி வந்துள்ளது. அனைவரது கூட்டு முயற்சியின் பயனே இன்றைய வளம். உலகில் பிறந்துள்ள அனைவரும் இந்த வளத்துக்குச் சொந்தக்காரர்கள். அதனால், அவர்கள் பசியின்றி வாழத் தேவையான வருவாயை அரசாங்கங்கள் வழங்க வேண்டும்.
இது ரொம்ப பழைய சிந்தனையாச்சே?
உண்மைதான். ஆனால், இன்றைய தொழிற்நுட்ப வளர்ச்சி, இந்த இடத்துக்கே நம்மை இட்டு வந்துள்ளது. விளைவு, அனைவருக்கும் அடிப்படை வருவாய் வழங்குவதற்கான சோதனை முயற்சிகளை பல நாடுகள் செய்து பார்க்கின்றன. பின்லாந்து நாடு, 2,000 வேலையற்றவர்களைத் தேர்வு செய்து, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு மாதம்தோறும் 560 யூரோ (40 ஆயிரம் ரூபாய்) வழங்குகிறது. கனடா, நெதர்லாந்து, பார்சிலோனா ஆகிய நாடுகளிலும் சோதனை முயற்சிகள் நடைபெறுகின்றன. வேலையற்றவர்கள், வேலை தேடிக்கொண்டாலும் அடிப்படை வருவாய் அரசாங்கத்திடம் இருந்து தொடர்ந்து கிடைக்கும்.
இதன் லாப நஷ்டங்கள் விவாதிக்கப்படுகின்றன. தொழில்முனைவோர், கலைஞர்கள், பெண்கள், மாணவர்கள் ஆகியோர் புதிய முயற்சிகளில் தைரியமாக இறங்கலாம். அவர்களுக்கான அடிப்படை வருவாய்க்கு உத்தரவாதம் இருப்பதால் அடுத்த வேளை உணவுக்குப் பயப்படத் தேவையில்லை. உலக வளர்ச்சி என்பதே தேவைக்கும் கிடைப்பதற்கும் இடையே இருக்கும் ஏற்றத்தாழ்வுதானே? அனைவருக்கும் அடிப்படை வருவாய் கிடைத்து விட்டால், ஏற்றத்தாழ்வு நீங்கிவிடும், உழைப்பார்வம் குறைந்துவிடும், புதிய முயற்சிகள் சுணங்கிவிடும், சோம்பேறித்தனம் பெருகிவிடும், பணத்துக்கு மதிப்பே இருக்காது என்று கருதுபவர்களும் இருக்கின்றனர்.
அனைவருக்கும் அடிப்படை வருவாய் வழங்க, அரசாங்கங்களிடம் போதிய நிதி இருக்கிறதா? நிதியைத் திரட்ட என்ன செய்யப் போகின்றனர்... கூடுதல் வரி விதிப்பார்களா? அப்படியானால், இல்லாதவர்களுக்கு வழங்குவதற்காக, இருக்கப்பட்டவர்களிடம் இருந்து அடித்துப் பிடுங்கும் திட்டமா இது? வரிச் சலுகைகள் தனியே வழங்கப்படுமா? உண்மையில், ‘அடிப்படை வருவாய்’ என்பது எவ்வளவு? இப்போதிருக்கும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களோடு சேர்ந்து அடிப்படை வருவாய் வழங்கப்படுமா? இல்லை, இது தனிச் செலவா? கேள்விகள், கேள்விகள், கேள்விகள்தான் தோரணம் கட்டுகின்றன.
இந்திய அளவில் சாத்தியமா?
கடந்த, ஜனவரி மாதமே தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியம், இதைப் பற்றிப் பேசியிருக்கிறார். இந்தியாவில், சுமார் 950 சமூக நலத் திட்டங்கள் உள்ளன. ஒன்றில் சுணக்கம் ஏற்பட்டாலும் மற்றொன்றின் மூலம், ஏழை எளியவர்களுக்கு உதவிகள் போய்ச்சேரும் என்பதே நம்பிக்கை. ஆனால், அப்படி நடப்பதில்லை என்று தெரிவிக்கின்றன பல ஆய்வுகள். ஏராளமான ஓட்டைகள், இடைத்தரகர்கள், தாமதங்கள். இந்தப் பின்னணியில், அனைத்து சமூகநலத் திட்டங்களையும் ஒருங்கிணைத்து, உரியவர்களுக்கு அடிப்படை வருவாயை வழங்கலாம் என்பது யோசனை.
எவ்வளவு வழங்குவது? இப்போதைய சமூகநலத் திட்டங்கள் அனைத்தின் செலவு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 5 சதவிகிதம். இதனையே அடிப்படை வருவாயாக மாற்ற முடியும் என்பதே அரவிந்த் சுப்பிரமணியம் கருத்து. அதாவது, ஒருவருக்கு ஓராண்டுக்கு 7,620 ரூபாய் வழங்கலாம். சிறுநகரத்தில் வேலை செய்யும் ஒருவரது ஒரு மாத ஊதியம் கூட இல்லாத இந்தத் தொகை ஏழை எளியவர்களுக்கு வழங்கப்படுமானால், மிகமோசமான ஏழ்மையில் இருக்கும் 22 சதவீதத்தினரை, 0.5 சதவீதம் அளவுக்குக் குறைத்துவிடும் என்கிறார் அரவிந்த்.கடந்த, 2011ம் ஆண்டிலேயே அடிப்படை வருவாய் தொடர்பாக மத்திய பிரதேச கிராமங்களில் சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அங்கே ஒவ்வொரு பெரியவருக்கும், 300 ரூபாயும், ஒவ்வொரு சிறுவருக்கும், 150 ரூபாயும் வழங்கப்பட்டன. அதன்மூலம், அவர்களுடைய வாழ்க்கைத்தரம் கணிசமாக உயர்ந்ததாக இந்தச் சோதனையை நடத்திய யுனிசெப் மற்றும் சேவா அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
முன்னேறிய நாடுகள்ஆட்டோமேஷனால் ஏராளமான வேலைகள் பறிபோகும் என்பது அதீத மதிப்பீடு என்கிறார் டி.வி.மோகன்தாஸ் பாய். ஆட்டோமேஷன் மற்றும் ரோபோக்களை உருவாக்குவதற்கான ஆரம்பச் செலவுகள் மிக அதிகம். அதைவிட, பணியாளர்களின் ஊதியம் குறைவு என்பதால், இந்தியாவில் ஆட்டோமேஷன் விரைவாக நடைபெறாது என்பது அவரது கணிப்பு. வேலை போய்விடும் என்ற பயத்தை உருவாக்குவது தகவல் தொழிற்நுட்பத்தைச் சேர்ந்தவர்களே. அதுவும் முன்னேறிய நாடுகளைச் சேர்ந்தவர்களே. இந்தியா போன்ற வளரும் நாடுகளின் உண்மையான பொருளாதாரமும் வேலைவாய்ப்புகளும், ஐ.டி., துறையை மட்டுமே நம்பியில்லை. அரசாங்கங்கள் தங்கள் கையாலாகா தனத்தை, தொழிற்நுட்ப முன்னேற்றங்களின் மீது சுமத்திவிட்டு, பொறுப்புகளைத் தட்டிக்கழிக்க இத்தகைய கருத்துகள் பயன்படலாம் என்ற அச்சமும் எழுப்பப்படுகிறது. அனைவருக்கும் அடிப்படை வருவாய் என்பது ஒருவகையில் இலவசம். தன்மானமும் சுயமரியாதை உள்ள எந்தச் சமூகமும் இலவசத்தை ஏற்குமா என்ன?!
ஆர்.வெங்கடேஷ் பத்திரிகையாளர்
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|