பதிவு செய்த நாள்
06 ஜூன்2017
01:19

புதுடில்லி : முகேஷ் அம்பானியின், ‘ஆர்ஜியோ’ நிறுவனம், தொலை தொடர்பு துறையில் களமிறங்கி, அதிரடியாக ஆறு மாதங்களுக்கு வழங்கிய இலவச மொபைல் போன் சேவையால், ஏர்டெல், ஐடியா நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை இழந்தது மட்டுமின்றி, அவரது தம்பி அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனமும், கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
கடந்த ஜன., – மார்ச் வரையிலான காலாண்டில், இந்நிறுவனம், 966 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது. இந்நிறுவனத்தின் கடன் சுமை, 42 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. தொடர் இழப்பு காரணமாக, இந்நிறுவனம், 10க்கும் மேற்பட்ட வங்கிகளில், கடன் தவணையை குறித்த காலத்தில் செலுத்த தவறியது. இதையடுத்து, இந்நிறுவனத்தின் கடன் தகுதி மதிப்பை, ‘இக்ரா, மூடிஸ்’ போன்ற நிறுவனங்கள் குறைத்துள்ளன.
இதனிடையே, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், ஏர்செல் இணைப்பு நடவடிக்கையை முடித்து, தொலை தொடர்பு கோபுரங்கள் வர்த்தகத்தை விற்பனை செய்ய தீவிரம் காட்டி வருகிறது. இப்பணிகளை முடித்து, கடனை திரும்பச் செலுத்த, வங்கிகள் ஏழு மாதங்கள் அவகாசம் அளித்துள்ளன. எனினும், அதற்கு முன்பாகவே, அதாவது, செப்டம்பருக்குள், 25 ஆயிரம் கோடி ரூபாய் கடனை திரும்பச் செலுத்த உள்ளதாக, வங்கிகளுக்கு, அனில் அம்பானி தெரிவித்து உள்ளார். இதனிடையே, முகேஷ் அம்பானியின் ஆர்ஜியோ, 8 கோடி சந்தாதாரர்களுடன் வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது.
பற்றாக்குறை:
கடந்த மார்ச் வரை, அகண்ட அலைவரிசை உரிமத் தொகை உள்ளிட்டவை தொடர்பாக, தொலை தொடர்பு சேவை நிறுவனங்களின் கடன், 7.75 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்தாண்டு, அவற்றின் வருவாய்க்கும், செலுத்த வேண்டிய கடனுக்கும் இடையே, 1.20 லட்சம் கோடி ரூபாய் பற்றாக்குறை ஏற்படும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|