பதிவு செய்த நாள்
13 ஜூன்2017
03:23

கோவை : கம்பளியில் தயாரிக்கப்படும் பின்னலாடைகள் ஏற்றுமதியில், திருப்பூர் நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. இந்நிறுவனங்கள், பாரம்பரிய பருத்தி வகைகளுடன், தற்போது, கம்பளி பின்னலாடைகள் ஏற்றுமதி மூலம், புதிய வர்த்தக வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகின்றன.
இம்முயற்சியின் பின்னணியில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த, உல்மார்க் நிறுவனம் உள்ளது. இந்நிறுவனம், ‘மெரினோ உல்’ என்ற பிராண்டு பெயரில், கம்பளி நுாலிழைகளை உற்பத்தி செய்து, உலகளவில் விற்பனை செய்து வருகிறது.
இதன், இந்திய பிரிவின் மேலாளர் ஆர்தி குடால் கூறியதாவது: உலகளவில் கம்பளியில் தயாரிக்கப்படும் துணிகள், ஆடைகள், பின்னலாடைகள் உள்ளிட்டவற்றுக்கு தேவை அதிகம் உள்ளது. இது குறித்த விழிப்புணர்வை, திருப்பூர் நிறுவனங்களிடம் ஏற்படுத்தி வருகிறோம். 2016 ஜூனில், திருப்பூரில் பயிற்சி பட்டறை நடத்தினோம். அதில், கம்பளியின் இயற்கை தன்மை, பின்னலாடை தயாரிப்பு உத்திகள், தொழிற்நுட்பங்கள் உள்ளிட்டவை விரிவாக விளக்கப்பட்டன. அதில் பங்கேற்ற சில நிறுவனங்கள், மெரினோ கம்பளிகள் மூலம், வெற்றிகரமாக மாதிரி பின்னலாடைகளை உருவாக்கின.
தற்போது, இரண்டாம் கட்ட பயிற்சி பட்டறையில், புதிய தொழிற்நுட்பங்களை பயன்படுத்தி, கம்பளி பின்னலாடைகள் தயாரிக்க பயிற்சி அளிக்கப்பட்டது. ஆயத்த ஆடைகள், பின்னலாடைகள் துறை வளர்ச்சியில், திருப்பூர் முதலிடத்தில் உள்ளது. ஆகவே, தெற்கு பிராந்தியத்தில், திருப்பூர் எங்களுக்கு முக்கிய சந்தையாக உள்ளது.
மெரினோ கம்பளியிழைகளை பயன்படுத்தி பின்னலாடைகளை தயாரிப்பது, ஏற்றுமதி செய்வது உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் நிறுவனம் வழங்குகிறது. பிரத்யேக மெரினோ கம்பளியிழையில், ‘ஸ்வெட்டர்’ மட்டுமின்றி, விளையாட்டு ஆடைகள், டி – சர்ட், சாதாரண ஆடைகள், குளிர் மற்றும் வெப்ப காலத்திற்கு ஏற்ற உடைகள் என, பலதரப்பட்ட ஆடைகளை தயாரிக்கலாம். இவற்றுக்கு, வெளிநாடுகளில் சந்தை வாய்ப்பு அதிகம் உள்ளது. உள்நாட்டிலும், கம்பளி பின்னலாடைகளுக்கான தேவை அதிகரிக்கும் என, எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
பயன்படுத்தி கொள்ள வேண்டும்:
திருப்பூர் பின்னலாடை கூட்டமைப்பு, அடுத்த நான்கு ஆண்டுகளில், 1 லட்சம் கோடி ரூபாய்க்கு, பின்னலாடைகளை ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயித்து உள்ளது. இத்தகைய சூழலில், உல்மார்க் நிறுவனம், கம்பளி பின்னலாடைகள் தயாரிப்புக்கு தேவையான தொழிற்நுட்ப உதவிகளை வழங்கி வருவது வரவேற்கத்தக்கது. இதன் மூலம், கிடைத்துள்ள புதிய வர்த்தக வாய்ப்பை, பின்னலாடை நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
- ராஜா சண்முகம், தலைவர், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பு
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|