பதிவு செய்த நாள்
21 ஜூன்2017
23:50

புதுடில்லி : ‘குறைந்த வட்டியில் கடன் வழங்கினால், நாட்டின் ஏற்றுமதி உயரும்’ என, ஏற்றுமதியாளர்கள், மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கி உள்ளனர்.
டில்லியில், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், வர்த்தக வாரியத்தின் கூட்டம் நடைபெற்றது. அதில், ஏற்றுமதியை மேம்படுத்துவதற்காக, ‘அன்னிய வர்த்தக கொள்கை – 2015 – 20’ல், மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பல்வேறு தொழில் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு கூட்டமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு துறைகளின் உயரதிகாரிகள், இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
கூடுதல் சலுகை:
இது குறித்து, மத்திய வர்த்தக துறை செயலர் ரீடா தியோதியா கூறியதாவது: ஏற்றுமதியை மேம்படுத்துவது தொடர்பாக, இக்கூட்டத்தில் பல்வேறு ஆலோசனைகள் தெரிவிக்கப்பட்டன. நாட்டின் ஏற்றுமதி, ஒன்பது மாதங்களாக அதிகரித்து உள்ளது. இருந்த போதிலும், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு, ஏற்றுமதி தொடர்ந்து வளர்ச்சி காண, கூடுதல் சலுகைகளை வழங்க வேண்டும் என, ஏற்றுமதியாளர்கள் தெரிவித்தனர்.
எம்.இ.ஐ.எஸ்., என்ற திட்டத்தின் கீழ், ஏற்றுமதி பொருட்கள் மற்றும் ஏற்றுமதியாகும் நாடுகளை பொறுத்து, 2, 3 மற்றும் 5 சதவீத வரிச்சலுகை வழங்கப்படுகிறது. இதை உயர்த்த வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. ஏற்றுமதியாளர்களின் கடன் சுமையை குறைக்கும் நோக்கில், மத்திய அரசு, 2015ல், 3 சதவீத வட்டி மானிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது. சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள், கைவினைப் பொருட்கள், வேளாண் மற்றும் உணவுப் பொருட்கள் துறைக்கு, இந்த மானியம் வழங்கப்படுகிறது. இதை, மேலும் பல துறைகளுக்கு விரிவுபடுத்த வேண்டும் என, ஏற்றுமதியாளர்கள் கேட்டுக் கொண்டனர்.
பாதிப்பு இல்லை:
ஜூலை, 1ல் அமலாகும், ஜி.எஸ்.டி.,யில், அதிகளவில், நடைமுறை மூலதனம் முடங்கும் அபாயம் உள்ளதாக, ஏற்றுமதியாளர்கள் கவலை தெரிவித்தனர். ஜி.எஸ்.டி.,யில், ஏற்றுமதிக்கு பூஜ்ஜிய வரி என்பதால், எத்தகைய பாதிப்பும் ஏற்படாது என, அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. மத்திய அரசு, புதிய ஏற்றுமதி சந்தைகளை கண்டறிவதற்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் எனவும், ஏற்றுமதி நிறுவன பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தனர்.
இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில், அன்னிய வர்த்தக கொள்கை மறுசீராய்வு செய்யப்படும். இதையடுத்து, மத்திய அரசின் ஒப்புதலுடன், இம்மாத இறுதிக்குள், அன்னிய வர்த்தக கொள்கையின் இடைக்கால சீராய்வு அறிக்கை வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
9 மாதங்களாக ஏறுமுகம்:
நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சி, மே மாதம், 8.32 சதவீதம் அதிகரித்து, 2,400 கோடி டாலராக உயர்ந்து உள்ளது. ஒன்பது மாதங்களாக, ஏற்றுமதி வளர்ச்சி கண்டு வருகிறது. அதே சமயம், அதிகளவில் தங்கம் இறக்குமதியானதால், நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை, 30 மாதங்களில் இல்லாத அளவிற்கு, மே மாதம், 1,384 கோடி டாலராக அதிகரித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|