பதிவு செய்த நாள்
06 ஜூலை2017
01:04

மும்பை : ‘புதிய, ஜி.எஸ்.டி., முறை, உற்பத்தியை அதிகரித்து, நாட்டின் நீண்ட கால வளர்ச்சிக்கு உதவும் என்ற போதிலும், குறுகிய காலம் வரை, வரி வருவாய் உயராது’ என, தர நிர்ணய நிறுவனமான, ‘பிட்ச்’ தெரிவித்துள்ளது.
அதன் விபரம்: பல முனை வரிகளை நீக்கி, ஜி.எஸ்.டி., என்ற ஒரே வரி விதிப்பு முறையை அமல்படுத்தியதன் மூலம், உள்நாட்டு வணிகத்தில் உள்ள பல்வேறு தடைகள் அகற்றப்பட்டு உள்ளன. இதனால், நாட்டின் உற்பத்தி அதிகரிக்கும். நீண்ட கால அடிப்படையில், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி சிறப்பாக இருக்கும். ஆனால், குறிப்பிட்ட காலம் வரை, வரி வருவாய் உயர வாய்ப்பில்லை.
எனினும், மொத்த உள்நாட்டு உற்பத்தி உயரவும், வரி செலுத்தும் வரம்பிற்குள் அதிகமானோரை கொண்டு வரவும், ஜி.எஸ்.டி., உதவும் என்பதால், நீண்ட கால அடிப்படையில், அரசின் மறைமுக வருவாய் உயரும். தேசிய அளவில் ஒரே சந்தை உருவாகி உள்ளதால், தொழில் செய்வது சுலபமாகும். இது, அன்னிய முதலீடுகளை அதிகளவில் ஈர்க்க வழிவகுக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஆர்வம்:
கடந்த வாரம், தர நிர்ணய நிறுவனமான, ‘மூடிஸ்’ வெளியிட்ட அறிக்கையில், ‘இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு, ஜி.எஸ்.டி., துணை புரியும் என்பதால், நாட்டின் கடன் தகுதி மதிப்பீடு, சாதகமான நிலைக்கு உயரும்’ என, தெரிவித்திருந்தது. ஆனால், இந்த அம்சம் குறித்து, ‘பிட்ச்’ நிறுவனம் எதுவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜி.எஸ்.டி.,யில், பொருட்களை உற்பத்தி செய்வோர் முதல், சில்லரை விற்பனையாளர்கள் வரை, சங்கிலித் தொடர் போன்ற வரி விதிப்பின் கீழ் வருகின்றனர். அவர்கள், முறையாக, ஜி.எஸ்.டி., செலுத்திய ஆவணங்களை காட்டி, வரியை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். இதனால், பெரிய நிறுவனங்கள், பல்வேறு பொருட்களை சப்ளை செய்யும் சிறிய நிறுவனங்களை, ஜி.எஸ்.டி.,யில் பதிவு செய்யுமாறு வற்புறுத்துகின்றன. அத்தகைய நிறுவனங்களிடம் இருந்து மட்டுமே, பொருட்களை கொள்முதல் செய்யத் துவங்கி உள்ளன.
இதனால், சிறிய நிறுவனங்களும், ஜி.எஸ்.டி.,யில் பதிவு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றன. மின்னணு முறையில், ஜி.எஸ்.டி., கணக்கை சுலபமாக தாக்கல் செய்யலாம் என்பது, இந்நிறுவனங்களுக்கு கூடுதல் அனுகூலமாக இருக்கும்.
வரி ஏய்ப்பு நடக்காது:
சில்லரை விற்பனையில், அமைப்பு சாரா பிரிவினரின் பங்கு, 90 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. அத்தகையோரின் விற்பனை சார்ந்த பரிவர்த்தனைகள் முழுவதும், ஜி.எஸ்.டி.,யின் சங்கிலி தொடர் வரி விதிப்பு முறை காரணமாக, அனைத்து கட்டங்களிலும் கண்காணிப்பிற்கு உள்ளாகும். அதனால், சில்லரை விற்பனையாளர்கள், இனி தங்கள் விற்பனையை குறைத்துக் காட்டுவதோ அல்லது வரி கணக்கை தாக்கல் செய்யாமல், வரி ஏய்ப்பு செய்யவோ முடியாது. இது, மிகப்பெரிய அளவிற்கு, அமைப்பு சாரா பிரிவினரை, அமைப்பு சார்ந்த துறைக்கு மாற்ற உதவும் என, ‘மூடிஸ்’ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|