பதிவு செய்த நாள்
06 ஜூலை2017
22:36

ஐயா, எங்கள் தொழிற்சாலையிலுள்ள அனைத்து ஊழியர்களுக்கும் சீருடை வழங்குகிறோம். இது, ஜி.எஸ்.டி.,யின் கீழ் வழங்கலாக கருதப்படுமா? – முத்தரசன், சிவகாசி
இத்தகைய செயல், வழங்கலாக கருதப்படமாட்டாது.
நாங்கள் செலுத்திய கலால் வரியை திரும்ப பெறக் கோரி, மே, 1ல் விண்ணப்பித்து உள்ளோம். அதற்கான பரிசீலனை, ஜி.எஸ்.டி., விதியின் கீழ் நிகழுமா? இதை விளக்கவும். – ஹரிஷ், திருச்சி
முந்தைய சட்டங்களின் கீழ் பணத்தை திரும்பப் பெற விண்ணப்பித்திருந்தால், அதற்கு, அந்தந்த சட்டத்தின் கீழ் பரிசீலனை செய்து, உரிய தொகை திரும்ப அளிக்கப்படும். இதன் மீது, ஜி.எஸ்.டி., விதி பொருந்தாது.
நாங்கள், தற்போது எங்களுடைய இன்வாய்சில் பொருட்களின் மதிப்பு மற்றும் பேக்கேஜிங் கட்டணம், சரக்கு கட்டணம் ஆகியவற்றை வசூலிக்கிறோம். இவை அனைத்திற்கும், ஜி.எஸ்.டி., வசூல் செய்ய வேண்டுமா அல்லது பொருட்களின் மதிப்பிற்கு மட்டும், வரி வசூல் செய்தால் போதுமா?– ராகவ், சென்னை
இன்வாய்சில் காட்டிய அனைத்து செலவினங்களுக்கும், ஜி.எஸ்.டி., வசூல் செய்ய வேண்டும்.
நான், இரண்டு வெவ்வேறு, ஜி.எஸ்.டி., சதவீதத்திலுள்ள பொருட்களை விற்பனை செய்யும் போது, இரண்டு விலை பட்டியல்களை வழங்க வேண்டுமா அல்லது ஒரே விலை பட்டியல் போதுமா?– காசிம், வேப்பேரி
நீங்கள், ஒரே ஒரு விலை பட்டியலை வழங்கினால் போதுமானது. அதில் இரு வேறு பொருட்களையும், அதன் வரி சதவீதத்தையும் தெளிவாக குறிப்பிட வேண்டும்.
நான், இரு நாட்களுக்கு முன் பொருட்களை வாங்கும் போது, தவறான, ஜி.எஸ்.டி., எண்ணை குறிப்பிட்டு விட்டேன். அதை, எவ்வாறு மாற்றம் செய்ய வேண்டும்? – மோகன்ராஜ், திருவாரூர்
நீங்கள் பொருட்கள் வாங்கிய நபரிடத்தில், மீண்டும் சரியான, ஜி.எஸ்.டி., எண்ணை குறிப்பிட வேண்டும். சரியான எண்ணை, அவர் ரிட்டர்ன் படிவத் தாக்கலின் போது குறிப்பிடவேண்டும். அப்படி செய்தால், நீங்கள் உள்ளீட்டு பயன் பெற எந்த சிக்கலும் இருக்காது.
எங்களது கூட்டாண்மை நிறுவனத்தின் லாபத் தொகையை அல்லது சம்பளத்தை பங்குதாரர்களுக்கு அளிக்கும் போது, ஜி.எஸ்.டி., கட்ட வேண்டுமென, சிலர் கூறுகின்றனர். இதை பற்றி விளக்கவும்.– ஜமால், மயிலாடுதுறை
இது, முற்றிலும் தவறான கருத்து. பங்குதாரர்களுக்கு அளிக்கக் கூடிய லாபத்திலோ, சம்பளத்திலோ அல்லது ஊழியர்களுக்கு அளிக்கக் கூடிய சம்பளத்திலோ, ஜி.எஸ்.டி., விதிக்கப்படமாட்டாது.
ஐயா, என் மொத்த விற்பனை, 75 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்கும் காரணத்தால், நான் கலவை வரி திட்டத்தை தேர்வு செய்துள்ளேன். இத்தகைய சூழலில், ஜி.எஸ்.டி., பதிவு பெறாத நபரிடமிருந்து, நான் பொருட்களை பெற்றால், ‘ரிவெர்ஸ் சார்ஜ்’ முறையில் வரி செலுத்தும் முறை, கலவை திட்டத்தில் சேர்ந்த எனக்கும் உண்டா?– அரவிந்த், நெல்லை
நீங்கள், கலவை வரி செலுத்தும் நிலையை தேர்வு செய்துள்ள போதிலும், ஜி.எஸ்.டி., பதிவு பெறாத நபரிடமிருந்து பொருட்களை பெற்றால், ‘ரிவெர்ஸ் சார்ஜ்’ முறை உண்டு. அதற்கான வரியை, நீங்கள் செலுத்த வேண்டும்.
‘இ வே பில்’ எப்போது அமலுக்கு வரும்? – மனோகர், கூடுவாஞ்சேரி
ஜி.எஸ்.டி., அமைப்பில், சரக்கு போக்குவரத்திற்காக, ‘இ வே பில்’ எனும் முறையை அறிமுகப்படுத்த முயன்றனர். எனினும், அதில் சில தொழிற்நுட்ப மாற்றங்கள் செய்ய வேண்டிய காரணத்தால், தற்போது நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், விரைவில் அமல்படுத்தப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
ஜி.சேகர், எப்.சி.ஏ., ஆடிட்டர்
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|