பதிவு செய்த நாள்
16 ஜூலை2017
04:42

நான் முந்திரி பருப்புகளை விளைவித்து, மொத்த விற்பனையாளர்களுக்கு விற்பனை செய்து வருகிறேன். என் ஆண்டு மொத்த விற்பனை, 25 லட்சம் முதல் 30 லட்சம் ரூபாய் வரை இருக்கும். முந்திரி பருப்பிற்கு ஜி.எஸ்.டி., வரி உண்டா? நான் பதிவு பெற வேண்டுமா?குமரகுரு, பண்ருட்டி
முந்திரி பருப்பிற்கு, 5 சதவீதம் ஜி.எஸ்.டி., வரி உண்டு. உற்பத்தியாளராகிய நீங்கள், வரி வசூல் செய்ய தேவையில்லை. உங்களிடமிருந்து கொள்முதல் செய்யும், ஜி.எஸ்.டி., பதிவு பெற்ற நபர், அதற்கான வரியை ரிவெர்ஸ் சார்ஜ் முறையில் அரசிற்கு செலுத்தி, உள்ளீட்டு வரி பயனை பெறலாம்.
சார், நாங்கள் தேயிலை ஏற்றுமதி செய்து வருகிறோம். வெளிநாட்டில் எங்களுக்கு ஆர்டர்களை பெற்றுத்தர முகவர்களை நியமித்துள்ளோம். அவர்களுக்கு கமிஷன் தொகையை அளிக்கும்போது, ஜி.எஸ்.டி., வரி ரிவெர்ஸ் சார்ஜ் முறையில் செலுத்த வேண்டுமா?கிருஷ்ணன், கொச்சின்
சாதாரணமாக சேவை புரிபவர் வெளிநாட்டிலும், சேவையின் இடம் மற்றும் சேவையை பெறுபவர் இந்தியாவிலும் இருந்தால், அத்தகைய பரிவர்த்தனைக்கு இந்தியாவில் சேவையை பெறுபவர், ரிவெர்ஸ் சார்ஜ் முறையில் வரி செலுத்த வேண்டும். ஆனால், நீங்கள் குறிப்பிட்ட வெளிநாட்டு முகவரின் சேவை இந்தியாவில் நடைபெற்றதாக கருதப்பட மாட்டாது. எனவே, அதற்கு ரிவெர்ஸ் சார்ஜ் முறை வராது.
ஐயா, ஒருவர் ஜி.எஸ்.டி., வரி செலுத்தும்போது, ஐ.ஜி.எஸ்.டி., வரிக்கு பதிலாக, ஸ்.ஜி.எஸ்.டி., வரியோ அல்லது சி.ஜி.எஸ்.டி., வரியோ செலுத்தி விட்டால், அதில் திருத்தம் செய்து கொள்ளலாமா?அமுதா, காவேரிப்பாக்கம்
அவ்வாறு மாற்றம் செய்ய இயலாது. நீங்கள் செலுத்த வேண்டிய, ஐ.ஜி.எஸ்.டி., வரியை செலுத்திய பிறகு, தவறாக செலுத்திய வரிக்கு ரீபண்டு கோரி விண்ணப்பிக்க வேண்டும்.
ஜி.எஸ்.டி.ஆர்., -1 ரிட்டர்ன் படிவம் தாக்கல் செய்யும்போது, ஸ்கேன் செய்யப்பட்ட விலை பட்டியல்களை பதிவேற்றம் செய்ய வேண்டுமா?விக்னேஷ், தர்மபுரி
ஸ்கேன் செய்யப்பட்ட விலை பட்டியல்கள் எதையும் பதிவேற்றம் செய்யத் தேவையில்லை. விலை பட்டியல்களில் உள்ள சில குறிப்பிட்ட பரிந்துரைக்கப்பட்ட தகவல்களை தெரிவித்தால் போதுமானது.
ஜி.எஸ்.டி., சட்டப்படி, இ –- லெட்ஜர் என்றால் என்ன?ராகவேந்திரா, குண்டூர்
மின்னணு லெட்ஜர் அல்லது இ–லெட்ஜர் என்பவை, பதிவு செய்யப்பட்ட, வரி செலுத்துபவரின் பணப் பரிவர்த்தனைகள் மற்றும் உள்ளீட்டு வரி பயன் (ஐ.டி.சி.,) ஆகியவற்றின் அறிக்கை நிலை ஆகும். மேலும், ஒவ்வொரு வரி செலுத்துபவருக்கும் மின்னணு வரி விபர அறிக்கைகள் உண்டு.ஜி.எஸ்.டி.என்., என்ற பொது தளத்தில் ஒரு முறை வரி செலுத்துபவர் பதிவு செய்துவிட்டால், இரண்டு மின்னணு லெட்ஜர்கள் (பணம் மற்றும் ஐ.டி.சி., லெட்ஜர்கள்) மற்றும் மின்னணு மூலம் செலுத்தப்பட வேண்டிய வரி அறிக்கை ஆகியவை தானாக உருவாகிவிடும். அவை நம்முடைய கம்ப்யூட்டர் டேஷ்போர்டில் எப்போதும் பார்க்கும் வகையில் இருக்கும்.
தவணை முறையில், ஜி.எஸ்.டி., வரி செலுத்த அனுமதியுள்ளதா? ஒருவேளை, ஜி.எஸ்.டி., வரி செலுத்தாமல், ரிட்டர்ன் மட்டும் தாக்கல் செய்தால், அதனால் பாதிப்பு இருக்குமா?மருதராஜ், விருதுநகர்
தவணை முறையில் வரி செலுத்த இயலாது. வரி செலுத்தாமல், ரிட்டர்னை மட்டும் தாக்கல் செய்தால், அவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.
பதிவு செய்யப்பட்ட நபருக்கு, மீதமுள்ள உள்ளீட்டு வரி தொகையை அறிந்து கொள்வது எப்படி?உமாராணி, திருப்பூர்
உங்களுடைய உள்ளீட்டு வரி பயன், இன்புட் கிரெடிட் லெட்ஜர் எனும் மின்னணு முறையில், ஜி.எஸ்.டி.என்., இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்
நாங்கள் கட்டுமான தொழிலில் ஈடுபட்டுள்ளோம். கட்டடம் கட்டுவதற்கான ஒப்பந்தத்தை, ஜி.எஸ்.டி., சட்டம் வருவதற்கு முன்னரே போட்டு விட்டோம். இப்போது அதற்கு பில் செய்யும்போது, ஜி.எஸ்.டி., வசூலிக்க வேண்டுமா?சூசை, பெரியபாளையம்
ஆம். நீங்கள் ஒப்பந்தத்தை முன்னரே செய்தாலும் கூட, ஜி.எஸ்.டி., வந்த பிறகு பில் செய்யும் காரணத்தினால், இதற்கு, ஜி.எஸ்.டி., வரி வசூலிக்க வேண்டும்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|