பதிவு செய்த நாள்
16 ஜூலை2017
04:45

புதுடில்லி : ‘ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள், இந்தியாவில் முதலீடு செய்வதற்கும், தொழில் துவங்குவதற்கும் உரிய ஆலோசனைகளை வழங்க, ‘ஐ.எப்.எம்.,’ என்ற தனி அமைப்பு ஏற்படுத்தப்படும்’ என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இது குறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள், இந்தியாவில் முதலீடு செய்வதற்கும், தொழில் துவங்குவதற்கும் தேவையான ஆலோசனைகளை வழங்க, ஐ.எப்.எம்., என்ற தனி அமைப்பு ஏற்படுத்தப்பட உள்ளது. இந்தியா – ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் இணைந்து உருவாக்க உள்ள இந்த அமைப்பு, ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின் கீழ், ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களின் முதலீடுகளுக்கு, உரிய வழிகாட்டுதலை வழங்கும்.ஐரோப்பிய நிறுவனங்கள், ஒற்றைச் சாளர முறையில், சுலபமாக தொழில் துவங்குவதற்கு உரிமம் பெற உதவும். அத்துடன், ஏற்கனவே, இந்தியாவில் செயல்பட்டு வரும் ஐரோப்பிய நிறுவனங்களின் வளர்ச்சிக்கும், எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கும் தீர்வு காண்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும்.இந்தியாவில் முதலீடு செய்வதிலும், தொழில் துவங்குவதிலும் ஐரோப்பிய நிறுவனங்கள் இடர்பாடுகளை சந்திக்கின்றனவா என்பது குறித்து, அவ்வப்போது ஆய்வு செய்யப்படும்.இதற்காக, இந்தியாவுக்கான ஐரோப்பிய கூட்டமைப்பு பிரதிநிதிகளுடன், தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டு துறை உயர் அதிகாரிகள், அவ்வப்போது ஆலோசனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்த ஆலோசனை கூட்டத்தில், ஐரோப்பிய நிறுவனங்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்தியாவுக்கான ஐரோப்பிய கூட்டமைப்பின் துாதர் டோமஸ் கோஸ்லோவ்ஸ்கி கூறுகையில், ‘‘இந்தியா – ஐரோப்பிய கூட்டமைப்பு இடையே வர்த்தகம் மற்றும் முதலீடுகளை மேலும் வலுப்படுத்த, ஐ.எப்.எம்., உதவும்,’’ என்றார்.தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டு துறை செயலர் ரமேஷ் அபிஷேக் கூறியதாவது:‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டம், சுலபமாக தொழில் துவங்குவதற்கான வசதிகளை செய்து தருவதற்கு முன்னுரிமை அளிக்கிறது. அதன் அடிப்படையில் உருவாகும், ஐ.எப்.எம்., அமைப்பு, இந்தியாவில் ஐரோப்பிய கூட்டமைப்பின் முதலீடுகளையும், தொழில் நிறுவனங்களையும் ஈர்க்க துணை புரியும்.இவ்வாறு அவர் கூறினார்.
வேலைவாய்ப்புஇந்தியாவில் மேற்கொள்ளப்படும் அன்னிய முதலீடுகளில், ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் முக்கிய பங்களிப்பை வழங்கி வருகின்றன. இந்தாண்டு மார்ச் இறுதி நிலவரப்படி, ஐரோப்பிய நாடுகள், இந்தியாவில், 4.40 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளன. உள்நாட்டில், ஆறாயிரத்திற்கும் அதிகமான ஐரோப்பிய நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில், 60 லட்சத்திற்கும் அதிகமானோர் பணிபுரிகின்றனர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|