பதிவு செய்த நாள்
20 ஜூலை2017
00:12

புதுடில்லி : அதிகளவில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான சூழல் உள்ள மாநிலங்களில், குஜராத், இந்தாண்டும் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
தேசிய பொருளாதார ஆய்வுக்குழு, இந்தாண்டின் மாநில முதலீட்டு வாய்ப்பு குறியீட்டை வெளியிட்டு உள்ளது. பொருளாதார சூழல், அடிப்படை கட்டமைப்பு வசதிகள், தொழிலாளர் திறன், நிர்வாகம், அரசியல் ஸ்திரத்தன்மை, நிலம் உள்ளிட்ட ஆறு பிரதான அம்சங்களுடன், 51 துணை அம்சங்கள் அடிப்படையில், இந்த குறியீடு தயாரிக்கப்பட்டு உள்ளது. இதில், சிறந்த பொருளாதார சூழலில், குஜராத் முதலிடத்தை பிடித்துள்ளது. அடிப்படை கட்டமைப்பு வசதிகளில், டில்லி; தொழிலாளர் திறன் பிரிவில், தமிழகம்; தொழிலுக்கான நிலம் கிடைப்பதில், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள் முதலிடத்தை பிடித்துள்ளன.
தேசிய பொருளாதார ஆய்வுக் குழு டைரக்டர் ஜெனரல் சேகர் ஷா கூறுகையில், ‘‘இந்தியாவில், அனைத்து பிரிவுகளிலும் முதலீட்டு வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. இதற்கு முன் கண்டிராத வகையில், புதிய, ஜி.எஸ்.டி., முறை, அனைத்து மாநிலங்களையும் ஒன்றிணைக்கும்,’’ என்றார்.
ஆய்வுக் குழு தலைவர் இந்திரா ஐயர் கூறியதாவது: தொழில் துவங்குவோரின் முக்கிய பிரச்னையாக, லஞ்ச ஊழல் தொடர்ந்து இருந்து வருகிறது. எனினும், இந்தாண்டு, இப்பிரச்னை குறித்து கூறியோரின் பங்கு, 59 சதவீதமாக குறைந்துள்ளது. இது, கடந்த ஆண்டு, 79 சதவீதமாக இருந்தது. அதே சமயம், இதே காலத்தில், தொழில் துவங்க உரிமம் கிடைப்பதில் சிரமம் உள்ளதாக கூறியோரின் விகிதாசாரத்தில் எந்த மாற்றமும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
முதலீட்டு வாய்ப்புகளை கொண்ட மாநிலங்களில், டில்லி, ஆந்திரா ஆகிய மாநிலங்கள், முறையே, இரண்டு மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன. இந்தாண்டு, ஹரியானா, தெலுங்கானா ஆகிய மாநிலங்கள், முதல் ஐந்து இடங்களுக்குள் முன்னேறி உள்ளன. தமிழகம், ஆறாவது இடத்தில் உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|