பதிவு செய்த நாள்
20 ஜூலை2017
00:14

மும்பை : சில்லரை முதலீட்டாளர்கள், அதிகளவில் நிறுவனங்களின் பங்குகளில் ஆர்வமுடன் முதலீடு செய்து வருவது, ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.
கடந்த ஏப்ரலில், முதன்முறையாக மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘சென்செக்ஸ்’ 30 ஆயிரம் புள்ளிகளை கடந்தது. இதை தொடர்ந்து, ஜியோஜித் பைனான்ஷியல் சர்வீசஸ் நிறுவனம், சில்லரை முதலீட்டாளர்கள், 3 லட்சம் பேரிடம் ஆய்வு மேற்கொண்டு, அறிக்கை வெளியிட்டு உள்ளது.
அதன் விபரம்: பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’ பங்கு முதலீடு குறித்து, 1,000க்கும் அதிகமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியதற்கான பயன், தற்போது கிடைக்க துவங்கி உள்ளது. ஏராளமானோர் ஆர்வத்துடன், பங்குச் சந்தையில் முதலீடு செய்து வருகின்றனர் இதற்கு, சமீபகாலமாக, இந்திய பங்குச் சந்தைகளின் எழுச்சியும் முக்கிய காரணமாகும்.
ஆய்வில் பங்கேற்றோரில், 83.5 சதவீதம் பேர், நேரடியாக பங்குகளில் முதலீடு செய்வதாக தெரிவித்து உள்ளனர். உபரியாக பணம் உள்ள போது தான், பங்குகளில் முதலீடு செய்வதாக, 59.25 சதவீதத்தினர் கூறியுள்ளனர். மாதந்தோறும் பங்குகளில் முதலீடு செய்வதாக, 20 சதவீதம் பேர் தெரிவித்து உள்ளனர். பங்குகளை அடுத்து, மியூச்சுவல் பண்டுகளில், 57.21 சதவீதத்தினரும், ‘டெரிவேட்டிவ்’ பிரிவில், 4.76 சதவீதம் பேரும் முதலீடு செய்ய விரும்புவதாக கூறியுள்ளனர்.
அன்றாடம் பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுவதாக, 14.55 சதவீதத்தினரும், அது அபாயகரமானது என, 62 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்து உள்ளனர்.அதிக ஆதாயம் பெற வேண்டுமென்றால், பங்குகளில் முதலீடு செய்வது தான் சரி என, 65.5 சதவீதத்தினரும், மியூச்சுவல் பண்டுகள் தான் லாபகரமானவை என, 24 சதவீதம் பேரும் கூறியுள்ளனர். பங்குச் சந்தை உச்சத்தில் இருந்து சரியும் வரை காத்திருந்து முதலீடு செய்ய விரும்புவதாக, 65 சதவீதம் பேர் தெரிவித்து உள்ளனர்.
இந்த ஆய்வில், முதலீட்டாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் பங்கு முதலீடுகளை தேர்வு செய்வது தெரிய வந்துள்ளது. இதற்கு, கடந்த காலங்களில், பங்குச் சந்தைகளின் எழுச்சியையும், திடீர் சரிவையும் சந்தித்த அனுபவம் தான் காரணம். சர்வதேச பங்குச் சந்தைகளில், இந்திய பங்குச் சந்தைகளின் வளர்ச்சி சிறப்பாக உள்ளது. பொதுவாக, பங்குச் சந்தை எழுச்சி காணும் போது, ஆர்வத்துடன் முதலீடு செய்வதும், வீழ்ச்சி கண்டால், இழப்புடன் வெளியேறுவதும் தான், சில்லரை முதலீட்டாளர்களின் போக்காக உள்ளது.
உலகளவில், பங்கு முதலீட்டின் மூலம், சில்லரை முதலீட்டாளர்கள் அதிக ஆதாயம் பெற்றது குறித்து, போதிய புள்ளி விபரங்கள் இல்லை. இருந்த போதிலும், சில்லரை முதலீட்டாளர்களின் விருப்பமான தேர்வாக, பங்கு முதலீடு உள்ளது ஆச்சரியம் அளிக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|