பதிவு செய்த நாள்
20 ஜூலை2017
15:47

புதுடில்லி: நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் கடந்த சில வாரங்களாக, 2,000 ரூபாய் நோட்டுகளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்., பொறுப்பாளர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்டேட் பாங்க் சொல்வது என்ன?
கடந்த ஆண்டு, நவ.,8 ம் தேதி, 1,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு வாபஸ் பெற்றது. இதற்கு மாற்றாக, புதிய, 2 000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு சப்ளை செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டது. ஆனால், கடந்த சில வாரங்களாக, 2,000 ரூபாய் நோட்டுகள் சப்ளையை ரிசர்வ் வங்கி குறைத்து விட்டது. இது குறித்து ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் தலைமை செயல் அதிகாரி நீரஜ் நிவாஸ் கூறியதாவது:
தற்போது ரிசர்வ் வங்கியிடம் இருந்து, 500 ரூபாய் நோட்டுகள் தான் அதிகளவில் வருகின்றன. நாடு முழுவதும் 2.2 லட்சம் ஏ.டி.எம்.இயந்திரங்கள் உள்ளன. இதில், ஸ்டேட் பாங்க்கிடம் 58 ஆயிரம் இயந்திரங்கள் உள்ளன. 2,000 ரூபாய் நோட்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், ஏ.டி.எம்., இயந்திரங்களில் மாற்றம் செய்து, 500 ரூபாய் நோட்டுகளை கூடுதலாக வைத்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
நாட்டில், 60 ஆயிரம் ஏ.டி.எம்., இயந்திரங்களை நிர்வகித்து வரும் ஏ.ஜி.எஸ்., டிரான்ஸாக்ட் டெக்னாலிஜிஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ரவி கோயல் கூறுகையில், ''2,000 ரூபாய் நோட்டுகள் சப்ளை குறைந்துள்ளது உண்மை தான். எனினும், போதிய அளவு 500 ரூபாய் நோட்டுகள் சப்ளை செய்யப்படுவதால், பிரச்னை ஏதும் இல்லை,'' என்றார்.
ரூ.5.5 லட்சம் கோடி தான்
நாட்டில், 50 ஆயிரம் ஏ.டி.எம்., இயந்திரங்களை நிர்வகித்து வரும் ஹிடாச்சி மென்ட் சர்வீசஸ் நிறுவனத்தின் லோனி ஆன்டனி கூறியதாவது:ரிசர்வ் வங்கியின் புள்ளி விவரங்களின்படி, நாட்டில், புழக்கத்தில் உள்ள 100 ரூபாய் மற்றும் அதற்கு குறைவான மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளின் மதிப்பு, கடந்த ஆண்டு நவ., 8 ம் தேதிக்கு முன், 2.5 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. கடந்த மே மாதம் இது, 4 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
அதே நேரத்தில், 500 ரூபாய் நோட்டுகள் புழக்கம், 8.1 லட்சம் கோடி ரூபாயில் இருந்து, 4.1 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இதே போல், கடந்த ஆண்டு நவ., 8 ம் தேதிக்கு முன், 1,000 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் 6.4 லட்சம் கோடி ரூபாயாகஇருந்தது. கடந்த மே மாதம் புழக்கத்தில் இருக்கும் 2,000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு 5.5 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே. இதன் மூலம், 2,000 ரூபாய் நோட்டுகளின் சப்ளை வெகுவாக குறைந்துள்ளதை புரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களிலும், பாட்னா மற்றும் கோல்கட்டா நகரங்களிலும் 2,000 ரூபாய் நோட்டுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என தெரிய வந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|