பதிவு செய்த நாள்
26 ஜூலை2017
06:46

புதுடில்லி : ‘நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம், மேலும் அதிகரிக்க வேண்டுமென்றால், சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை ஊக்குவிக்க வேண்டும்’ என, மத்திய அரசுக்கு கொள்கைகளை வகுத்து தரும், ‘நிடி ஆயோக்’ அமைப்பு வலியுறுத்தி உள்ளது.
இந்த அமைப்பு, நடப்பு நிதியாண்டுடன் முடிவடையும், 12வது ஐந்தாண்டு திட்டம் குறித்து வெளியிட்டுள்ள, மதிப்பீட்டு அறிக்கை: நாட்டின் சேமிப்பு மற்றும் முதலீடுகளின் வளர்ச்சி விகிதம், மிகக் குறைவாக உள்ளது கவலை அளிக்கிறது. எனவே, இந்த வளர்ச்சி விகிதத்தை அதிகரிக்க, தேவையான கொள்கை திட்டங்களை விரைந்து உருவாக்கி, செயல்படுத்த வேண்டியது அவசியமாகும்.
முதலீடுகளை ஊக்குவிப்பதுடன், அவற்றுக்கான திறன்களை உருவாக்கி, உரிய சூழலை ஏற்படுத்தி தர வேண்டும். முதலீடுகள் அதிகரிக்க வேண்டுமென்றால், வரி விதிப்பு நிலையாகவும், தீர்மானிக்கப்பட்ட ஒன்றாகவும் இருக்க வேண்டும். முதலீட்டாளர்களிடம் நம்பிக்கையை அதிகரிப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கும்பட்சத்தில், அதிகளவில், நீண்ட கால அன்னிய முதலீடுகளை, நிலையாக ஈர்க்க முடியும்.
ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி, அதிகமானோரை வரி வளையத்திற்குள் கொண்டு வந்து, அரசின் வரி வருவாயை அதிகரிக்க துணை புரியும். அதே சமயம், மக்கள் வரிக்காக செலவிடுவது குறையும்; ஏற்றுமதியில் போட்டி அதிகரிக்கும். ஜி.எஸ்.டி.,யால், மொத்த உள்நாட்டு உற்பத்தி, 1 – 2 சதவீதம் வளர்ச்சி காணும்.நீண்ட கால முதலீடுகள் இல்லாததால், அடிப்படை கட்டமைப்பு வசதி திட்டங்களை நிறைவேற்ற முடியாமல் உள்ளது; பல திட்டங்கள் முடங்கி உள்ளன. போதிய அளவில், கட்டுமான நிறுவனங்களின் பங்கேற்பு இல்லாத காரணத்தாலும், திட்டங்களை செயல்படுத்த முடியாத நிலை உள்ளது.
இது போன்ற தடைகளை நீக்கி, முடங்கிக் கிடக்கும் திட்டங்களுக்கு உயிர் கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம், உற்பத்தி பெருகும்; முதலீடுகள் அதிகரிக்கும். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு, பணவீக்கத்தை கட்டுக்குள் வைத்திருப்பதும் அவசியமாகும். இவ்வளர்ச்சி, நிலையாக நீண்ட காலம் நீடித்திருக்க, பணப்புழக்க நிர்வாகத்திலும், நிதிக் கொள்கை வடிவமைப்பிலும் ஒருங்கிணைப்பு இருக்க வேண்டியது முக்கியம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
புதிய முறை:
பல ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வந்த, ஐந்தாண்டு திட்ட மதிப்பீடு முறை, தற்போது மாற்றப்பட்டு உள்ளது. இந்த முறை, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு, முக்கிய காரணிகளாக விளங்கும் ஒன்பது அம்சங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அவற்றின் அடிப்படையில், பரவலான பொருளாதார வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளன.
-அரவிந்த் பனகரியா,துணைத் தலைவர், ‘நிடி ஆயோக்’
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|