பதிவு செய்த நாள்
26 ஜூலை2017
23:45

புதுடில்லி : ‘ஆசியாவில், சீனாவை அடுத்து இரண்டாவது மிகப்பெரிய சந்தையாக திகழ, இந்திய அடிப்படை கட்டமைப்பு துறைக்கு, 2040ல், 4.50 லட்சம் கோடி டாலர் முதலீடு தேவைப்படும்’ என, ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.
‘ஜி – 20’ நாடுகளைச் சேர்ந்த, குளோபல் இன்ப்ராஸ்ட்ரக்சர் ஹப் நிறுவனம், 50 நாடுகளின் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆய்வு செய்து, வெளியிட்டுள்ள அறிக்கை: எதிர்கால தேவைகளின் மதிப்பீட்டின்படி, ஆசிய அடிப்படை கட்டமைப்பு சந்தையில், சீனாவுக்கு அடுத்த இடத்தில், இந்தியா இருக்கும். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், தனிநபரின் பங்கு, 1,600 டாலராக உள்ளது. இது, 2040ல், 4,800 டாலராக உயரும். அப்போது கூட, சீனாவின், தற்போதைய, 8,000 டாலரை விட குறைவாகும்.
அடுத்த, 25 ஆண்டுகளில், இந்திய மக்கள் தொகை பெருக்கம் காரணமாக, அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்கு தேவை அதிகரிக்கும். இதுவும், சீனாவை விட குறைவாகவே இருக்கும். இந்தியாவின் வளர்ச்சிக்கு, அடிப்படை கட்டமைப்பு துறையில், 4.50 லட்சம் கோடி டாலர் முதலீடு தேவைப்படும். அடுத்த, 25 ஆண்டுகளில், வருவாய் உயர்வு, பொருளாதார வளம் ஆகியவை, அடிப்படை கட்டமைப்பு துறை முதலீடுகளுக்கு உந்துசக்திகளாக இருக்கும்.
இந்தியாவில், ‘நிலையான வளர்ச்சி இலக்குகள்’ என்ற திட்டத்தின் கீழ், 2030ல், அனைத்து குடும்பங்களுக்கும் மின்சாரம் மற்றும் குடிநீர் வசதிகளை வழங்க, கூடுதலாக, 88 ஆயிரத்து, 800 கோடி டாலர் முதலீடு தேவைப்படும். இதர வசதிகளையும் கணக்கில் கொண்டால், மொத்தம், 1.30 லட்சம் கோடி டாலர் தேவை இருக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. இது, சீனாவின் தேவையான, 25 ஆயிரத்து, 700 கோடி டாலரை விட அதிகம். சர்வதேச பொருளாதார வளர்ச்சிக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்கு, 2040ல், 94 லட்சம் கோடி டாலர் முதலீடு தேவைப்படும்.
ஐ.நா.,வின், ‘நிலையான வளர்ச்சி இலக்குகள்’ திட்டத்தின் கீழ், 2030ல், சர்வதேச குடும்பங்களுக்கு மின்சாரம் மற்றும் குடிநீர் வசதிகளுக்கு 3.50 லட்சம் கோடி டாலர் தேவைப்படும். ஆக, மொத்தம், 97 லட்சம் கோடி டாலர் முதலீடு தேவைப்படும். ஆனால், தற்போது ஒதுக்கப்பட்டு வரும் நிதி அளவின்படி மதிப்பிட்டால், 18 லட்சம் கோடி டாலர் அளவிற்கு பற்றாக்குறை ஏற்படும். இது, வளரும் நாடுகளுக்கு மிகப்பெரிய சவால் என, கூற முடியாது.
அதே சமயம், வளர்ந்த நாடுகள், அடிப்படை கட்டமைப்பு வசதிகளை புதுப்பிப்பதில், நிதி நெருக்கடியை சந்திக்கும். இந்த வகையில், அமெரிக்காவின் அடிப்படை கட்டமைப்பு திட்டச் செலவினங்களில், 3.80 லட்சம் கோடி டாலர் பற்றாக்குறை ஏற்படும். சீனாவிற்கு, 28 லட்சம் கோடி டாலர் அளவிலான முதலீடு தேவைப்படும். இது, சர்வதேச அடிப்படை கட்டமைப்பு துறைக்கு தேவைப்படும் முதலீட்டில், 30 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|