பதிவு செய்த நாள்
31 ஜூலை2017
08:43

சைபர் மோசடி, தகவல் திருட்டு அதிகரித்து வரும் நிலையில், நிதி விபரங்கள் உள்ளிட்ட இணைய தகவல்களை பாதுகாப்பதில் போதிய கவனம் செலுத்த வேண்டும்.
இணையத்தில் தகவல்கள் தான் தங்கமாக கருதப்படுகின்றன. அதனால் தான் பயனாளிகள் தகவல்களை எப்படியாவது கைப்பற்றுவதில் ஹேக்கர்கள் என்று சொல்லப்படும் தாக்காளர்கள் குறியாக இருக்கின்றனர். இப்படி திருடப்படும் தகவல்களுக்கு இணைய கள்ளச்சந்தையில் பெரும் மதிப்பு இருக்கிறது.
தகவல் விற்பனை:
அண்மையில் கூட வர்த்தக நிறுவனம் ஒன்றின் பயனாளிகள் தகவல்கள் தாக்காளர்களால் திருடப்பட்டது தொடர்பான செய்தி வெளியானது. அதற்கு சில மாதங்களுக்கு முன் மிகப்பெரிய ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் தொடர்பான தகவல்கள் திருடப்பட்டன.தாக்காளர்கள் குறி வைக்கும் தகவல்களில் கிரெடிட் கார்டு விபரங்கள் உள்ளிட்ட நிதி தகவல்களும் அடங்கும். இவற்றை கொண்டு மோசடியில் ஈடுபட்டு பணத்தை அபகரிப்பதும் அவ்வப் போது நடக்கிறது.
டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்து வரும் நிலையில், பயனாளிகள் தங்கள் தகவல்களை பாதுகாப்பதில் கவனம் செலுத்துவது அவசியமாகிறது. தனிநபர்கள் தொடர்பான தகவல்கள் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் விளம்பர நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்படுவதும் வாடிக்கையாக இருக்கிறது. அதே போல இணைய நிறுவனங்களும் பயனாளிகள் தகவல்களை தெரிந்து கொண்டு அவர்களுக்கு ஏற்ற சேவைகளை அளிக்க முற்படுகின்றன.
டெலிமார்க்கெட்டிங்கில் ஈடுபடுபவர்களும் தனிநபர்கள் தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். திடீரென எதிர்பாராத நபர்கள் போன் செய்து, புதிய சேவை பற்றி விளம்பரம் செய்வதன் பின்னே இப்படி திரட்டப்பட்ட தகவல்களும் இருக்கலாம் என்பதை உணர வேண்டும். இணைய பயன்பாடு மற்றும் இணைய சேவைகளை பயன்படுத்துவது அதிகரித்து வரும் சூழலில் ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் டிவி உள்ளிட்ட பலவகை சாதனங்கள் இணையத்தில் இணைக்கப்படும் நிலை இருக்கிறது. எனவே ஹேக்கர்களின் கைவரிசையில் இருந்து தற்காத்து கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் அவசியமாகிறது.
அதற்கேற்ப இணைய பழக்கங்களில் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவதும் இன்றியமையாததாகிறது. உலகம் முழுவதும் சைபர் தாக்குதல்கள் அதிகரித்து வந்தாலும் ஹேக்கர்கள் இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது, தனி கவனம் செலுத்துவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
பகிர்வில் கவனம்:
இணையத்தில் நம்முடைய தகவல்களை பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வு எந்த வகையான தகவல்களை பகிர்ந்து கொள்கிறோம் என்று கவனமாக இருப்பதில் இருந்து துவங்க வேண்டும் என, வல்லுனர்கள் வலியுறுத்துகின்றனர். சமூக ஊடக தளங்களில் உறுப்பினர் கணக்கு துவக்கும் போது பலரும் அதிகப்படியான தகவல்களை பகிர்ந்து கொள்கின்றனர். இப்படி கூடுதல் தகவல்கள் பகிர்வதை தவிர்க்க வேண்டும். உறுப்பினராக பதிவு செய்ய தேவையான அடிப்படை தகவல்களை மட்டும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
இணைய பாதுகாப்பு:
அதே போல மின் வணிக தளங்களில் பொருட்களை வாங்கும் போது, குறைந்த பட்ச தகவல்களை மட்டுமே வெளியிட வேண்டும். அதோடு கிரெடிட் கார்ட் மற்றும் வங்கி கணக்கு விபரங்களை இணையதளத்தில் சேமிப்பதை தவிர்க்க வேண்டும். இதன் மூலம் குறிப்பிட்ட அந்த தளம் தாக்குதலுக்கு இலக்கானாலும் நமக்கு எந்த பாதிப்பும் இருக்காது. மேலும் இணைய சேவைகளை இயக்க வலுவான பாஸ்வேர்டுகளை உருவாக்கி கொள்ள வேண்டும். எவராலும் ஊகிக்க முடியாத கடினமான பாஸ்வேர்ட்களை உருவாக்கி கொள்ள வேண்டும் என்பதோடு, ஒரே பாஸ்வேர்டை ஒன்றுக்கு மேற்பட்ட இணையதளங்களில் பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும் என, சைபர் வல்லுனர்கள் அறிவுரை கூறுகின்றனர்.
இணையத்தில் உலாவும் போது பாதுக்காப்பான இணைய தளங்களை பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். இணையதள முகவரியில், எச்.டி.டி.பி.எஸ்., என இருந்தால், அந்த தளம் பாதுகாப்பானது என்பதை குறிக்கும். இந்த வகை தளங்களில் தாக்காளர்கள் கைவரிசை காட்டுவது கடினம். குறிப்பாக கிரெடிட் கார்டு அல்லது டிஜிட்டல் பரிவர்த்தனையை பயன்படுத்த வேண்டிய சூழலில், பாதுகாப்பில்லாத இணையதளங்களை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
---சைபர் பாதுகாப்பு உங்கள் கைகளில்...
* இணையத்தில் தனிப்பட்ட தகவல்களை பகிர்வதில் கட்டுப்பாடு அவசியம்.* தொலைபேசி எண், வீட்டு முகவரி உள்ளிட்ட தகவல்களை இணைய வெளியில் பகிரக்கூடாது.* கிரெடிட் கார்டு, இணைய வங்கிச் சேவை தகவல்களை எந்த தளங்களிலும் சேமிக்க கூடாது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|