பதிவு செய்த நாள்
13 ஆக2017
08:21

புதுடில்லி : ‘‘இந்தியா, மருத்துவ சுற்றுலா துறையில், முன்னேறிய நாடுகளை விஞ்சும் வகையில் வளர்ச்சி கண்டு வருகிறது,’’ என, மத்திய வர்த்தக துறை செயலர் ரீடா தியோதியா தெரிவித்து உள்ளார்.பெங்களூரில், அக்., 12 – 14 வரையில், இந்தியாவின் ஆரோக்கிய பராமரிப்பு துறை குறித்த சர்வதேச மாநாடு நடைபெற உள்ளது.இது குறித்து, ரீடா தியோதியா கூறியதாவது:இந்தியா, ஆரோக்கிய பராமரிப்பிலும், அது சார்ந்த சேவைகள் ஏற்றுமதியிலும், மிகச் சிறப்பான மையமாக திகழ்வதை, இந்த மாநாடு உலகுக்கு உணர்த்தும்.இந்த மாநாட்டில், அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பா, ஆப்ரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஆசியாவைச் சேர்ந்த, 70 நாடுகள் பங்கேற்கின்றன. மருத்துவ துறையைச் சேர்ந்த, 600க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. அமெரிக்கா, சிங்கப்பூர், மலேஷியா போன்ற நாடுகள் கோலோச்சி வந்த மருத்துவ சுற்றுலா துறையில், தற்போது, இந்தியா, மிக வலுவான தடத்தை பதித்து வளர்ச்சி கண்டு வருகிறது.இத்துறையை ஊக்குவிக்க, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அயல்நாட்டு சுற்றுலா பயணியர், மருத்துவ சிகிச்சை விசாவில், இந்தியா வருவதற்கான நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டு உள்ளன. அதனால், மிக சுலபமாக, மருத்துவ சுற்றுலா பெற வழி ஏற்பட்டுள்ளது. இதில், மேலும் பிரச்னைகள் இருந்தால், அதையும் சரி செய்ய, அரசு தயாராக உள்ளது.இத்துறை சார்ந்தோர், ஆரோக்கிய பராமரிப்பு துறை வளர்ச்சிக்கான கொள்கைகள், செயல் திட்டங்கள், தேவையான ஒழுங்குமுறைகள், தரமான மருத்துவ சிகிச்சைக்கான வழிமுறைகள் உள்ளிட்ட ஆலோசனைகளை, அரசுக்கு வழங்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பின் செயல் தலைவர், ஏ.திதர் சிங் கூறியதாவது:வரும், 2020ல், இந்திய மருத்துவ சுற்றுலா துறைக்கு, 900 கோடி டாலர் வர்த்தக வாய்ப்புகள் உள்ளதாக மதிப்பிடப்பட்டு உள்ளது. இதை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள, மருத்துவ சுற்றுலா துறையை விரிவுபடுத்தி, மிக வலிமையான மதிப்புடையதாக மாற்ற வேண்டும். குறிப்பாக, நோயாளிகளுக்கு தரமான மருத்துவ சிகிச்சையை நியாயமான விலையில் வழங்க வேண்டும். நோயாளிகளை, மாற்று மருத்துவ சிகிச்சையில் குணப்படுத்துவதற்கான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.இது போன்ற நடவடிக்கைகள், மருத்துவ சுற்றுலா துறை வளர்ச்சிக்கு துணை புரியும். இந்தியாவில், மிகச் சிறந்த மருத்துவ நிபுணர்கள் உள்ளனர். அது போல, மிகச் சிறந்த மருத்துவ சிகிச்சை வசதிகள் உள்ளன. இத்தகைய ஆற்றலை வெளிப்படுத்தி, இதர நாடுகளுடன் இந்தியா இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்பை, பெங்களூரு மாநாடு வழங்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|