பதிவு செய்த நாள்
14 ஆக2017
08:20

பங்குச்சந்தையின் போக்கு அடிப்படையிலான, ‘டிப்ஸ்’கள் பற்றி கவலைப்படாமல், முதலீட்டாளர்கள் தங்கள் இலக்கில் கவனம் செலுத்துவதே சரியாக இருக்கும் என, நிதி வல்லுனர்கள் வலியுறுத்துகின்றனர்.
மியூச்சுவல் பண்ட் முதலீட்டாளர்களுக்கு இது சோதனை காலம் என, நிதி வல்லுனர்கள் கருதுகின்றனர். பங்குச்சந்தையின் போக்கோ அல்லது அதனால் ஏற்படக்கூடிய பாதிப்போ இதற்கு காரணம் இல்லை. மாறாக, இந்த இரண்டின் அடிப்படையில், சந்தையில் சொல்லப்படும் ஆலோசனைகளால், முதலீட்டாளர்கள் தவறான முடிவுக்கு தள்ளப்படும் நிலையை மனதில் கொண்டே, இவ்வாறு சொல்கின்றனர். பல முதலீட்டாளர்கள் தவறான ஆலோசனைகளால் குழப்பம் அடைந்திருப்பதோடு, அவசரமான முடிவுகளை எடுப்பதாகவும் நிதி வல்லுனர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
கரெக் ஷன் எப்போது?
இந்தாண்டு பங்குச்சந்தை புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது. கடந்த வாரம் சரிவை சந்தித்தாலும், அண்மை காலங்களில் சென்செக்ஸ், நிப்டி இரண்டு குறியீடுகளுமே, 32 ஆயிரம் புள்ளிகள் மற்றும் 10 ஆயிரம் புள்ளிகளை கடந்து உள்ளன. சந்தையின் இந்த போக்கிற்கு பல காரணங்கள் உள்ளன. இவை தொடர்பான அலசல்கள் ஒருபக்கம் இருக்க, பங்குச்சந்தையின் போக்கை அடிப்படையாக கொண்டு நடைபெறும் விவாதங்களும், ஆலோசனைகளும் சிறு முதலீட்டாளர்களை, குறிப்பாக மியூச்சுவல் பண்ட் முதலீட்டாளர்களை கவலையில் ஆழ்த்துவதாக அமைந்துள்ளன.
பங்குச்சந்தை போக்கு தொடர்பான கணிப்பின் அடிப்படையில், விரைவில் கரெக் ஷன் நிகழலாம் என, ஒருதரப்பினர் கூறி வருகின்றனர். கரெக் ஷன் என்பதை, உச்சத்தை தொட்ட சந்தையில் ஏற்படும் சரிவு என புரிந்து கொள்ளலாம். இத்தகைய கரெக் ஷன் தொடர்பான ஆரூடங்கள் மட்டும் அல்லாமல், அப்படி நிகழ்வதற்கு முன் லாபம் பார்க்க வேண்டும் என கூறப்படும் ஆலோசனை, முதலீட்டாளர்களை பாதித்துள்ளது. அதிலும் குறிப்பாக, புதிய முதலீட்டாளர்களை பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர்களில் சிலர், தாங்கள் முதலீடு செய்துள்ள திட்டங்களில் இருந்து வெளியேறுவது அல்லது முதலீட்டு வாய்ப்பை மறுபரிசீலனை செய்வது போன்றவற்றில் ஈடுபட்டிருப்பதாக, நிதி வல்லுனர்கள் கூறுகின்றனர். இன்னும் பலர், மாதக்கணக்கில் இத்தகைய கரெக் ஷன் எதிர்பார்த்து குழப்பத்துடன் இருப்பதாகவும் சொல்கின்றனர்.
சந்தையில் உலா வரும் கருத்துக்களின் அடிப்படையில், முதலீட்டு முடிவை மேற்கொள்வது அல்லது மாற்றுவதை விட, தவறான செயல் வேறு இருக்க முடியாது என்பதே, நிதி வல்லுனர்கள் உறுதியாக தெரிவிக்கும் கருத்தாக இருக்கிறது.
வழிகாட்டும் இலக்கு:
சந்தை உயரத்தில் இருக்கும் போது, பங்குகளை விற்று வெளியேறுவது புத்திசாலித்தனமானது என கூறப்பட்டாலும், மியூச்சுவல் பண்ட் முதலீட்டாளர்கள் இது போன்ற ஆலோசனைகளை போட்டு குழப்பிக் கொள்ளக்கூடாது என்கின்றனர். மியூச்சுவல் பண்ட் முதலீட்டாளர்கள், தாங்கள் முதலீடு செய்துள்ள திட்டங்களின் பலன் எதிர்பார்த்த அளவுக்கு அமையாத நிலையில் மட்டும் தான், தங்கள் முடிவுகளை பரிசீலனை செய்ய வேண்டுமே தவிர, சந்தையின் ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப அல்ல என புரிந்து கொள்ள வேண்டும்.இது போன்ற நேரங்களில், முதலீட்டாளர்களுக்கு அவர்களின் இலக்கே வழிகாட்டியாக அமைய வேண்டும் என்கின்றனர். பெரும்பாலான முதலீட்டாளர்கள், இலக்கு சார்ந்து முதலீடு செய்யாததே தவறான ஆலோசனைகளால் ஊசலாட நேர்கிறது என்கின்றனர்.
இலவச ஆலோசனை:
சமபங்கு சார்ந்த மியூச்சுவல் பண்ட் முதலீடு எனில், நீண்ட கால நோக்கில் இருந்தால் நல்லது. இடைப்பட்ட காலத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் குறித்து, அதிகம் அலட்டிக் கொள்ள வேண்டாம். உண்மையில் முதலீட்டாளர்கள் தங்கள் நோக்கத்திற்கு ஏற்ப, நிதி திட்டங்களை தேர்வு செய்து முதலீடு செய்ய வேண்டும். சந்தையில் உலா வரும் இலவச ஆலோசனைகள், தங்களுக்கானவை அல்ல என்பதை முதலீட்டாளர்கள் உணர வேண்டும். முதலீட்டை முடித்துக் கொண்டு வெளியேற வேண்டும் என பரிசீலிப்பது, முதலீட்டிற்கான இலக்கு, காலம் நெருங்கி வரும் நிலையில் தான் பொருத்தமாக இருக்கும் என்கின்றனர். புதிய முதலீட்டாளர்களுக்கு இது பொருந்தாது. அதே போல, புதிதாக முதலீடு செய்பவர்கள், சந்தையின் உச்சம் பற்றி எல்லாம் கணக்கு போட்டுக் கொண்டிருக்காமல், முதலீடு மூலம் தாங்கள் அடைய விரும்புவது என்ன எனும் கேள்விக்கு ஏற்ற நிதிகளில் முதலீடு செய்வதே, பொருத்தமாக இருக்கும் என்கின்றனர்.
நிரந்தர ‘டிப்ஸ்’* சந்தையின் ஏற்ற இறக்கம் தொடர்பான கூச்சலை அலட்சியம் செய்க* முதலீட்டை தொடருவது என்பது, இலக்கு சார்ந்த முடிவாக இருக்க வேண்டும்* இலக்கை நிறைவேற்றக்கூடிய அம்சங்களின் அடிப்படையில், முதலீடு வாய்ப்பை தேர்வு செய்ய வேண்டும்* நீண்ட கால முதலீடே பலன் தரும்
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|