பதிவு செய்த நாள்
15 ஆக2017
23:52

‘ரிவெர்ஸ் சார்ஜ்’ முறையில், ஒரு நாளைக்கு, 5,000 ரூபாய் வரை, வரி செலுத்த வேண்டாம் என, முன் கூறியிருந்தீர்கள். இதில், ஒரு சந்தேகம் உள்ளது. பதிவு செய்யப்படாத ஒரு நபர், 6,000 ரூபாய்க்கு பில் கொடுத்தார் என்றால், ‘ரிவெர்ஸ் சார்ஜ்’ வரி, 5,000 ரூபாய்க்கு செலுத்த வேண்டுமா அல்லது 6,000 ரூபாய்க்கு செலுத்த வேண்டுமா?– சக்திவேல், கோவைபதிவு செய்யப்பட்ட நபர், ஒரு நாளில் பதிவு செய்யப்படாத நபர்களிடமிருந்து பெறும் மொத்த வழங்கல்களின் மதிப்பு, 5,000 ரூபாய் வரை இருந்தால், ‘ரிவெர்ஸ் சார்ஜ்’ முறையில், வரி செலுத்த தேவையில்லை. நீங்கள் மேற்கூறிய பரிவர்த்தனையில், 6,000 ரூபாய்க்கு, ‘ரிவெர்ஸ் சார்ஜ்’ முறையில், வரி செலுத்த வேண்டும்.
நாங்கள், மொபைல் போன் விற்பனையில் உள்ளோம். தற்போது, எங்களுடைய கடையை மேம்படுத்துவதற்காக, உள்ளலங்கார வேலைப்பாடுகள் செய்துள்ளோம். அதிலுள்ள, ஜி.எஸ்.டி.,யை உள்ளீட்டு வரி பயனாக பெற முடியுமா?– ராம் மொபைல்ஸ், கோவைபதிவு செய்யப்பட்ட நபரிடமிருந்து, வியாபார நிமித்தமாக பெறும் அனைத்து வழங்கல்களுக்கும், உள்ளீட்டு வரி பயன் பெற முடியும். நீங்கள் மேற்கூறிய உள்ளலங்கார வேலைப்பாடு செய்வதற்காக, செலுத்திய வரியை உள்ளீட்டு வரி பயனாக பெறலாம்.
சார், நான், பம்ப் வியாபாரம் செய்கிறேன். அதற்கு, ஜி.எஸ்.டி., பதிவு பெற்று விட்டேன். எனக்கு சொந்தமாக, ஒரு திருமண மண்டபம் உள்ளது. அதன் ஆண்டு வருமானம், 10 லட்சம் ரூபாய்க்கு குறைவாகத் தான் உள்ளது. இந்நிலையில், திருமண மண்டபத்தை வாடகைக்கு விடும் போது, ஜி.எஸ்.டி., வசூல் செய்ய வேண்டுமா?– அஜித், திருவள்ளூர்உங்களுடைய திருமண மண்டபத்தின் ஆண்டு வருமானம், 10 லட்சம் ரூபாய்க்கு குறைவாக இருந்தாலும், நீங்கள் பதிவு செய்யப்பட்ட நபர் எனும் காரணத்தால், திருமண மண்டபத்தை வாடகைக்கு விடும் போது, ஜி.எஸ்.டி., வசூல் செய்து, அரசுக்கு செலுத்த வேண்டும். நீங்கள், சி.ஜி.எஸ்.டி., 9 சதவீதமும், எஸ்.ஜி.எஸ்.டி., 9 சதவீதமும் வசூல் செய்ய வேண்டும்.
பதிவு செய்யப்படாத நபர், வெளி மாநிலத்திலிருந்து பொருட்களை வாங்குவதற்கு, ஜி.எஸ்.டி., சட்டத்தில் தடை உள்ளதா? ஏனெனில், பதிவு செய்தால் மட்டுமே பொருட்களை அனுப்புவதாக, வெளி மாநில விற்பனையாளர்கள் கூறுகின்றனர். இதற்கு, தங்களின் விளக்கம் தேவை.– சோமேஷ், ராசிபுரம்அப்படி எந்த தடையும், ஜி.எஸ்.டி., சட்டத்தில் இல்லை. பதிவு செய்யாத நபர்கள், வெளி மாநிலத்திற்கு விற்பனை செய்வதில் தடை உள்ளதே தவிர, பொருட்களை வாங்குவதற்கு எந்த தடையும் இல்லை. நீங்கள், உங்கள் வெளி மாநில வழங்குனருக்கு விளக்கி, தாராளமாக பொருட்களை கொள்முதல் செய்யலாம். இதனால், அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை.
சார், உங்களுடைய, ‘கேள்விகள் ஆயிரம்’ பகுதி மிகவும் எளிமையாகவும், பயனுள்ளதாகவும் உள்ளது. அதற்கு நன்றி. நாங்கள், ‘கொரியர்’ நிறுவனம் நடத்தி வருகிறோம். அதற்கு, ஜி.எஸ்.டி., பதிவு பெற்று விட்டோம். தற்போது, பாதுகாப்பு மற்றும் வேலைவாய்ப்பு சேவைகள் துவங்க உள்ளோம். இதற்கு தனியாக, ஜி.எஸ்.டி., பதிவு பெற வேண்டுமா; இதற்கு எவ்வளவு சதவீத வரி வரும்?– கார்த்திகேயன், கோவைதங்களின் பாராட்டுதலுக்கு நன்றி. நீங்கள் புதிய சேவைக்காக, தனியாக புதிய பதிவு பெற வேண்டிய அவசியமில்லை. உங்களிடம் உள்ள, ஜி.எஸ்.டி., பதிவு எண்ணை வைத்துக் கொண்டு, பாதுகாப்பு மற்றும் வேலைவாய்ப்பு சேவைகளை வழங்கலாம். அதற்கு, ‘பில்’ செய்யும் போது, 18 சதவீதம் வரி விதிக்க வேண்டும்.
-ஜி.சேகர், எப்.சி.ஏ., ஆடிட்டர்
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|