பதிவு செய்த நாள்
15 ஆக2017
23:55

புதுடில்லி : மக்கள் பயன்பாட்டிற்கான, சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய், தங்க ஆபரணங்கள் போன்ற, 153 பொருட்களுக்கு, ‘இ – வே பில்’ தயாரித்து அளிப்பதில் இருந்து விலக்களிக்க, ஜி.எஸ்.டி., கவுன்சில் ஒப்புதல் வழங்கி உள்ளது.
ஜூலை, 1ல், நாடு முழுவதும், ஜி.எஸ்.டி., நடைமுறை அமலாகியது. இதன் மூலம், பல முனை வரிகள் நீங்கி, ஒரே வரி விதிப்பு முறை நடைமுறைக்கு வந்துள்ளது.இந்த வரி விதிப்பு முறையில், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட மதிப்பில், சரக்குகளை கொண்டு செல்வதற்கு, ‘இ – வே பில்’ கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதன்படி, பொருட்கள் தயாரிப்பு, வினியோகம், போக்குவரத்திற்கு பயன்படும் வாகனம், விற்பனை உள்ளிட்ட விபரங்களை, கணினியில் பதிவேற்றி, ‘இ – வே பில்’லை தயாரிக்க வேண்டும்.
இதை, சரக்கு போக்குவரத்தின் போது கையோடு எடுத்துச் சென்று, வழியில் சோதனை மேற்கொள்ளும் வரி அதிகாரிகளிடம் காட்ட வேண்டும். வரி ஏய்ப்பை தடுக்கும் இந்த, ‘இ – வே பில்’ திட்டத்திற்கான சாப்ட்வேர் உருவாக்கும் பணியில், தேசிய தகவல் ஆவண மையம் ஈடுபட்டுள்ளது. அக்டோபரில் இப்பணிகள் முடிவடைந்து, ‘இ – வே பில்’ நடைமுறை அமலுக்கு வரும் என, தெரிகிறது.
இது குறித்து, நிதியமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடந்த, 5ம் தேதி, டில்லியில், ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில், மக்கள் பொதுவாக பயன்படுத்தும், 153 பொருட்களின் போக்குவரத்திற்கு, ‘இ – வே பில்’ அளிப்பதில் இருந்து விலக்களிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்படி, சமையல் எரிவாயு, ஆபரணங்கள், கரன்சி, தபால்கள் உள்ளிட்டவற்றை கொண்டு செல்ல, ‘இ – வே பில்’ தேவையில்லை. இத்துடன், மோட்டார் பொருத்தாத வாகனங்களில் கொண்டு செல்லப்படும் பொருட்களுக்கும், விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
இது, சர்வதேச துறைமுகங்களில் இருந்து, சுங்க சோதனைக்காக, உள்ளூர் துறைமுகங்களுக்கு கொண்டு செல்லும் சரக்குகளுக்கும், ஒரு மாநிலத்தில், 10 கி.மீ., துாரத்திற்குள் நடைபெறும் சரக்கு போக்குவரத்திற்கும் பொருந்தும். இவ்வாறு அவர் கூறினார்.
விலக்கு அளிக்கப்பட்டுள்ள பொருட்கள்:
வீட்டு பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு, பொது வினியோக திட்டத்திற்கான மண்ணெண்ணெய், தபால் பைகள், கரன்சிகள், நகைகள், உபயோகித்த தனி நபர் மற்றும் வீட்டு பயன்பாட்டு பொருட்கள், கால்நடைகள், பன்றி, மீன், காய்கறிகள், பழங்கள், பால், தேன், விதைகள், தானியங்கள் மற்றும் மாவு வகைகள், பூஜை பொருட்கள், காது கேட்பு கருவிகள், தலைமுடி, விந்தணு மற்றும் உறைய வைக்கப்பட்ட விந்தணு, ஆணுறை, கருத்தடை மாத்திரைகள், வெற்றிலை, கள்ளு, கச்சா பட்டு, காதி துணி, மண் பானை, களிமண் விளக்குகள் உள்ளிட்டவை. மொத்தம், 153 பொருட்களை கொண்டு செல்வதற்கு முன், ‘இ – வே பில்’ தயாரித்து எடுத்துச் செல்வதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|