பதிவு செய்த நாள்
19 ஆக2017
07:35

பெங்களூரு : ‘இன்போசிஸ்’ நிறுவனத்தின், சி.இ.ஓ., விஷால் சிக்கா, நேற்று திடீரென்று பதவியை ராஜினாமா செய்தார். பணியில் கவனம் செலுத்த முடியாத அளவிற்கு நீடித்த இடையூறுகள் மற்றும் தடைகள் காரணமாக, இந்த முடிவை எடுத்துள்ளதாக, அவர் ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.
இன்போசிஸ் நிர்வாக இயக்குனர் மற்றும் சி.இ.ஓ., எனப்படும், தலைமை செயல் அதிகாரியாக, விஷால் சிக்கா, 2014 ஜூன், 12ல் பொறுப்பேற்றார். அவருக்கு, ஊதியம், போனஸ், ஊக்கத்தொகை உட்பட, 70 லட்சம் டாலர் என, ஆண்டுக்கு, 48 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இது, 2017க்கு, 1.10 கோடி டாலராக, அதாவது, 75 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது.
இத்தொகை, இன்போசிஸ் நிறுவனத்தின் நடுத்தர பணியாளர் பெறும் ஊதியத்தை விட, 283 மடங்கு அதிகம். இந்த வித்தியாசம், நிறுவனத்தின் கொள்கைப்படி, 50 – 60 மடங்கு தான் இருக்க வேண்டும் என, கூறப்படுகிறது. மேலும், பணியாளர்களுக்கு, 5 – 8 சதவீதமும், விஷால் சிக்காவுக்கு, 55 சதவீதம் ஊதிய உயர்வும் அளிக்க, நிர்வாகம் முடிவு செய்ததும், என்.ஆர்.நாராயணமூர்த்தி உள்ளிட்ட, இன்போசிஸ் நிறுவனர்கள் பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதையடுத்து, இயக்குனர் குழு, நிறுவனத்தின் உயர்ந்த நெறிகளையும், கொள்கைகளையும் கடைபிடிக்க தவறுவதாக, நாராயணமூர்த்தி வெளிப்படையாக தெரிவித்தார். மேலும், தன் விருப்ப ஓய்வில் சென்ற உயரதிகாரிகளுக்கு, அதிக இழப்பீடு வழங்கப்பட்டதையும் அவர் கண்டித்தார். இந்த பிரச்னை தவிர, இஸ்ரேலைச் சேர்ந்த, பனாயா நிறுவனத்தை, அதிக மதிப்பீட்டில் கையகப்படுத்தியதில், இன்போசிஸ் உயரதிகாரிகள் மறைமுகமாக பயனடைந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, இன்போசிஸ், வெளி நிறுவனம் மூலம் விசாரணை நடத்தி, ‘ஒப்பந்தத்தில் முறைகேடு ஏதுமில்லை’ என, தெரிவித்தது. ஆனால், நாராயணமூர்த்தி, ‘விசாரணை அறிக்கை விபரங்களை, பகிரங்கமாக வெளியிட வேண்டும்’ என, வலியுறுத்தினார். சமீபத்தில், ‘ஒரு நிறுவனம் வளர்ச்சி காண வேண்டுமென்றால், உயரதிகாரிகள் சம்பளத்தை குறைத்து, சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டும்’ என, தெரிவித்தார்.
இது போன்ற மோதல்கள் தீவிரமடைந்த நிலையில், விஷால் சிக்கா, நேற்று, ராஜினாமா செய்தார். அவரின் ராஜினாமாவை ஏற்ற, இன்போசிஸ் நிர்வாகம், இடைக்கால தலைமை செயல் அதிகாரியாக, யு.பி.பிரவின் ராவை நியமித்துள்ளது. இதனிடையே, விஷால் சிக்கா கூறிய கருத்துக்கு, இன்போசிஸ் மறுப்பு தெரிவித்துள்ளது.
‘வருத்தப்பட்டதில்லை’
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த விஷால் சிக்கா, தன் ராஜினாமா கடிதத்தில், ‘நிறுவனத்தில் பணியாற்றியதற்காக, ஒரு வினாடி கூட வருத்தப்பட்டதில்லை; ஆனால், பல மாதங்களாக நீடிக்கும் சர்ச்சை பேச்சுக்கள், பணியில் கவனம் செலுத்த இடையூறாக இருந்தன. ‘அதனால், மரியாதை, நம்பிக்கை, சுயாதிகாரம் உள்ள சூழலை நாடி, புதிய சவாலை சந்திக்க செல்கிறேன்’ என, தெரிவித்து உள்ளார். இவர் விலகல் காரணமாக, மும்பை பங்குச் சந்தையில், நேற்று, இன்போசிஸ் பங்கு விலை, ஒரே நாளில், 98.05 ரூபாய் குறைந்து, 923.10 ஆக சரிவடைந்தது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|