பதிவு செய்த நாள்
09 செப்2017
01:40

மும்பை:பங்குச் சந்தை பட்டியலில் இடம் பெறாத, பொதுத் துறை நிறுவன பங்குகளை, காகித வடிவில் இருந்து, ‘டீமேட்’ எனப்படும், மின்னணு கணக்கிற்கு மாற்ற, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
பங்குச் சந்தை பட்டியலில் உள்ள, பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் பங்குகள், முதலீட்டாளர்களின், ‘டீமேட்’ கணக்கில், வரவு வைக்கப்படுகின்றன.இந்த மின்னணு கணக்குகளை, என்.எஸ்.டி.எல்., மற்றும் சி.டி.எஸ்.எல்., நிறுவனங்கள் பராமரிக்கின்றன. இவற்றிடம், பங்குச் சந்தை பட்டியலில் இல்லாத, பொதுத் துறை நிறுவனங்களின் காகித வடிவிலான பங்குகளை, ‘டீமேட்’ கணக்கிற்கு மாற்றி பராமரிக்கும் பொறுப்பை வழங்க, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
இது குறித்து, மத்திய அரசு உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:மத்திய நிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் கணக்குப்படி, 11.40 லட்சம் நிறுவனங்கள், நிறுவன சட்டத்தின் கீழ், வரையறுக்கப்பட்ட நிறுவனங்களாக பதிவு செய்யப்பட்டு உள்ளன. இவற்றில் உள்ள, 75,193 பொதுத் துறை நிறுவனங்களில், 67,884 நிறுவனங்கள், பங்குச் சந்தையில் இடம் பெறாமல் உள்ளன.
இந்நிறுவனங்களின் பங்குகளில், 80 சதவீதம், காகித வடிவில் உள்ளன; அவற்றை, மின்னணு பங்குகளாக மாற்ற, அமைச்சகம் திட்டமிட்டு உள்ளது.‘பொதுத் துறை நிறுவனங்கள், மின்னணு பங்குகளை மட்டுமே வழங்க வேண்டும்’ என, 2013ம் ஆண்டின் நிறுவனங்கள் சட்டம் கூறுகிறது.
அமைச்சகம், இந்த சட்ட விதிகளை, முதன்முறையாக பயன்படுத்தி, பங்குச் சந்தை பட்டியலில் இடம் பெறாத, பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை, மின்னணு பங்குகளாக மாற்ற உள்ளது. இது குறித்த அறிவிப்பு, இம்மாத இறுதியில் வெளியாகும் என, தெரிகிறது.அதற்கு முன், அமைச்சக உயரதிகாரிகள், என்.எஸ்.டி.எல்., – சி.டி.எஸ்.எல்., நிறுவனங்களின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளனர். டில்லியில், வரும், 12ல் நடைபெற உள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மின்னணு பங்கு மாற்ற நடைமுறைக்கு தயாராவது பற்றியும், அதற்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது குறித்தும், விவாதிக்கப்பட உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
இன்னும் மாறவில்லை
இந்திய பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டு உள்ள, பல ஆயிரம் நிறுவன பங்குகளின் சந்தை மதிப்பு, 134 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. அதில், 2.3 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள், இன்னும், ‘டீமேட்’ கணக்கிற்கு மாற்றப்படாமல், காகித ஆவணங்களாகவே, முதலீட்டாளர்களிடம் உள்ளன.
வங்கியை போல
வங்கி சேமிப்பு கணக்கில், பணம், ‘டிபாசிட்’ செய்யப்படுவதுபோல, நிறுவன பங்குகள், ‘டீமேட்’ கணக்கில் சேமிக்கப்படுகின்றன. இப்பங்குகளின் பரிவர்த்தனை மற்றும் பராமரிப்பை, என்.எஸ்.டி.எல்., மற்றும் சி.டி.எஸ்.எல்., நிறுவனங்கள் ஏற்றுள்ளன. இந்நிறுவனங்களின் அங்கீகாரம் பெற்ற பங்குத் தரகு நிறுவனங்கள், வங்கிகள், நிதி சேவை நிறுவனங்கள் ஆகியவற்றில், முதலீட்டாளர்கள், ‘டீமேட்’ கணக்கு துவங்கி, பங்குகளை, ‘டிபாசிட்’ செய்யலாம்; பங்கு வர்த்தகத்தில் ஈடுபடலாம்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|