பதிவு செய்த நாள்
20 செப்2017
02:46

மும்பை : ‘‘தேசிய நெடுஞ்சாலை ஆணையம், புதிய பங்கு வெளியீட்டில் களமிறங்க, மத்திய நிதி அமைச்சகத்தின் ஒப்புதலை எதிர்நோக்கி உள்ளது,’’ என, மத்திய சாலை, நெடுஞ்சாலைகள் மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர், நிதின் கட்கரி தெரிவித்து உள்ளார்.
அவர், மும்பையில், இந்திய – அமெரிக்க வர்த்தக கூட்டமைப்பின் கூட்டத்தில், மேலும் பேசியதாவது: பொதுத் துறையைச் சேர்ந்த, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், பங்கு வெளியீட்டுக்கு ஆயத்தமாகி வருகிறது. மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள, முதலீடு மற்றும் பொது சொத்து நிர்வாகத் துறையின் அனுமதி கிடைத்த உடன், பங்கு வெளியீடு குறித்த விபரங்கள் வெளியிடப்படும்.
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு, பங்கு விற்பனை மூலம், 10 லட்சம் கோடி ரூபாய் திரட்டும் ஆற்றல் உள்ளது. போதுமான நிதி உள்ளதால், வங்கிகளை நாடாமல், இ.பி.சி., முறையில், திட்டப் பணிகளை தனியாரிடம் அளித்து, முடித்துக் கொள்ள முடியும். இந்த முறையில், மும்பை – வதோதரா இடையே, 44 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, அதிவிரைவு நெடுஞ்சாலை திட்டம் நடக்கிறது. தேசிய நெடுஞ்சாலைகளில், ஒருமுறை பணம் செலுத்தி, சுங்கச்சாவடிகள் அமைத்து, பராமரித்து, திரும்பவும் ஒப்படைக்கும் திட்டம், ஆறு மாதங்களில் துவங்கும். அடுத்த ஒரு மாதத்தில், இதற்கான, முன்னோட்ட திட்டம் துவக்கப்பட உள்ளது.
வாகன விற்பனையில், தற்போதுள்ள வளர்ச்சி நீடித்தால், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை, அரசு, 80 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், 2 லட்சம் கி.மீ., தேசிய நெடுஞ்சாலையை, கூடுதலாக அமைக்க வேண்டும். கிராமப்புறங்களை இணைக்கும் வகையில், 8 லட்சம் கோடி ரூபாய் செலவில், 30 சாலை திட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.இவற்றில், ஐந்து திட்டங்கள், அடுத்த மூன்று மாதங்களில் துவக்கப்படும். இது தொடர்பாக, ஏற்கனவே, 5.60 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான, திட்டப் பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
சொகுசு கப்பல் சுற்றுலா திட்டத்திற்கு, அரசு பல சலுகைகள் வழங்கியுள்ள போதிலும், மிகக் குறைந்த நிறுவனங்களே, அதில் ஈடுபட ஆர்வம் தெரிவித்து உள்ளன; அதற்கான காரணம் தெரியவில்லை. நாட்டின் முக்கிய, 12 பெரிய துறைமுகங்கள், கடந்த நிதியாண்டில், 5,000 கோடி ரூபாய் லாபம் ஈட்டியிருந்தன; இது, நடப்பு நிதியாண்டில், 7,000 கோடி ரூபாயாக உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
‘தவறு செய்வோரை எனக்கு பிடிக்கும்’
வங்கிகள், ஒரு திட்டத்திற்கு கடன் தருவது குறித்து முடிவெடுக்க, ஓராண்டு எடுத்துக் கொள்கின்றன. வாராக்கடனால், புதிய கடன்களை வழங்குவதிலும் மெத்தனமாக உள்ளன. இத்தகைய போக்கை, வங்கிகள் மாற்றிக் கொண்டு, திட்டங்கள் சார்ந்த உடனடி கடன் என்ற புதிய அணுகுமுறைக்கு மாற வேண்டும். தவறு செய்யும் மனிதரை எனக்கு பிடிக்கும்; ஆனால், எந்த முடிவும் எடுக்க விரும்பாத நேர்மையான மனிதரை, எனக்கு கொஞ்சம் கூட பிடிக்காது.-நிதின் கட்கரி, மத்திய அமைச்சர்
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|