பதிவு செய்த நாள்
26 செப்2017
00:18

கோல்கட்டா : ‘‘தற்போதைய வங்கி அதிகாரிகளுக்கு, புதிய சவால்களை சமாளிக்கும் திறன் குறைவாக உள்ளது,’’ என, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தலைவர்,அருந்ததி பட்டாச்சார்யா தெரிவித்து உள்ளார்.
அவர், கோல்கட்டாவில், வங்கி அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கும், எஸ்.பி.ஐ., நிர்வாக மேலாண்மை மையத்தை திறந்து வைத்து, மேலும் பேசியதாவது: வங்கி அதிகாரிகளுக்கு, நிர்வாகத்தில் கடைப்பிடிக்க வேண்டிய நன்னெறிகள் குறித்து, சிறிதளவில் தான் பயிற்சி அளிக்கப்படுகிறது. இடர்ப்பாடுகளை புரிந்து கொள்ளவும், முன்கூட்டியே கணிக்கவும், போதிய பயிற்சி கிடைப்பதில்லை. அதனால், சவால்களை சமாளிக்க முடிவதில்லை.
மனிதருக்கு மாற்றான, இயந்திர தொழில்நுட்பங்களின் சாதக, பாதக அம்சங்கள் குறித்த புரிதலும், அதிகாரிகளுக்கு தேவை. மக்கள் வாழ்வின், மிக உணர்வுபூர்வ அம்சங்களில் ஒன்றான, பணத்தை நாம் கையாண்டு வருகிறோம். இந்த மிகப்பெரிய பணியை, மேலும் மேம்படுத்த, பயிற்சி அவசியம்.அடுத்து, அடிக்கடி மாறும் ஒழுங்குமுறை சட்ட விதிகள் குறித்தும் தெரிந்திருக்க வேண்டும். இல்லாதபட்சத்தில், எண்ணற்ற இடர்ப்பாடுகளை சந்திக்க நேரும்.
உரிய முறையில், நிர்வாக மேலாண்மையில் பயிற்சி மேற்கொள்பவரே, நாளைய தலைவராக உயர்வார். வெறும், வங்கி நடைமுறைகளை மட்டும் அறிந்து கொள்வது உதவாது. வங்கிகளாக மாறி, கடன் வழங்கும் நிறுவனங்களின் செயல்பாடுகள், கேள்விப்படாத வகையில் உள்ளன. போதிய பயிற்சி இன்றி செய்யும் பணிகளில், நன்னெறிகள் எப்படி கடைப்பிடிக்கப்படும் என்பது புரியவில்லை.
ஒவ்வொரு வாடிக்கையாளரின் நிதிப் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான, பொது நிர்வாக பயிற்சி போதிய அளவிற்கு இல்லை. இந்த குறைபாடுகளுக்கு, வங்கி துறையில், முதலிடத்தில் உள்ள நாம் தான், தீர்வு கண்டு வழிகாட்ட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|