பதிவு செய்த நாள்
29 செப்2017
23:42

புதுடில்லி : ‘இந்திய ரியல் எஸ்டேட் துறையில், அடுத்த எட்டு ஆண்டுகளில், கூடுதலாக, 80 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெறுவர்’ என, ‘கிரெடாய் – சி.பி.ஆர்.இ.,’ கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதன் விபரம்: புதிய ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம், ஜி.எஸ்.டி., போன்ற சீர்திருத்தங்களால், நீண்ட கால அடிப்படையில், ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. ரியல் எஸ்டேட் துறையில், 2016 நிலவரப்படி, 92 லட்சம் வேலைவாய்ப்புகள் உள்ளன; 2025ல், கூடுதலாக, 80 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகி, மொத்தம், 1.72 கோடியாக உயரும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.
இதே காலத்தில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், ரியல் எஸ்டேட் துறையின் பங்களிப்பு, இரு மடங்கு உயர்ந்து, 13 சதவீதமாக அதிகரிக்கும். நகர்ப்புறங்களில், புதிய வீடுகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது. மேலும், இரண்டு மற்றும் மூன்றாம் நிலை நகரங்களும், வேகமாக விரிவடைந்து வருகின்றன. இவை, ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சிக்கான, அடிப்படை காரணிகளாக உள்ளன.
கடந்த, 2013ல், ரியல் எஸ்டேட் துறையில், 360 கோடி சதுரடி பரப்பு பயன்பாட்டிற்கு வந்தது; இது, 2015ல், 820 கோடி சதுரடி பரப்பாக அதிகரித்துள்ளது. இந்த புள்ளி விபரத்தின்படி, நீண்ட கால அடிப்படையில், ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சி பிரகாசமாக உள்ளது எனலாம். அதே சமயம், வளர்ச்சிக்கான வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வதும், ரியல் எஸ்டேட் துறை பிரச்னைகளை தீர்க்க, உரிய கொள்கைகளை அறிமுகப்படுத்துவதும் அவசியம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
நம்பிக்கை:
இந்திய ரியல் எஸ்டேட் துறை, அமைப்பு சாராமல், பல பிரிவுகளாக சிதறிக் கிடந்தது. தற்போது, முன்னேறிய நாடுகளில் உள்ளது போல, திடமான கட்டமைப்புடன், அமைப்பு சார்ந்த துறையாக மாறி வருகிறது. ஆசிய பசிபிக் நாடுகளைச் சேர்ந்த, ரியல் எஸ்டேட் நிறுவனங்களில், 82 சதவீத இந்திய நிறுவனங்கள், அடுத்த மூன்று ஆண்டுகளில், பணியாளர் எண்ணிக்கையை உயர்த்த திட்டமிட்டு உள்ளன. இது, நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் மீதுள்ள நம்பிக்கை, ஒழுங்குமுறை சீர்திருத்தங்களை அமல்படுத்துவதில் கண்டு வரும் நிலையான முன்னேற்றம் ஆகியவற்றை பிரதிபலிக்கிறது.
-அன்ஷூமன் மேகசின் தலைவர், சி.பி.ஆர்.இ., இந்தியா – தென்கிழக்கு ஆசியா
துணை தொழில்கள்:
சாதகமான வர்த்தகச் சூழல், ஒழுங்குமுறை கட்டமைப்பு போன்றவற்றால், 2025ல், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், ரியல் எஸ்டேட் துறையின் பங்கு, இரு மடங்கும் அதிகரிக்கும். ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சியால், வேலைவாய்ப்புகள் பெருகும் என்பதுடன், இத்துறை சார்ந்த, 250 துணை தொழில்களிலும், குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.
-ஜக்சய் ஷா, தலைவர், ‘கிரெடாய்’
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|