பதிவு செய்த நாள்
09 அக்2017
23:50

புதுடில்லி : ‘‘நடப்பு, ௨௦௧௭ – 18ம் நிதியாண்டின், மூன்று மற்றும் நான்காம் காலாண்டில், ஜி.டி.பி., எனப்படும், மொத்த உள்நாட்டு உற்பத்தி, 7 சதவீதமாக உயரும்,’’ என, ரிசர்வ் வங்கி கவர்னர், உர்ஜித் படேல் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
கடந்த, 4ம் தேதி, ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை வெளியிடப்பட்டது. அதில், வேளாண் மற்றும் துணை துறைகளின், உற்பத்தி மதிப்பு வளர்ச்சி மற்றும் கரீப் பருவ உணவு தானிய உற்பத்தி குறையும் என்ற மதிப்பீட்டால், நடப்பு நிதியாண்டின், ஜி.டி.பி., 7.3லிருந்து, 6.7 சதவீதமாக குறைத்து நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், ‘நடப்பு மற்றும் நான்காவது காலாண்டில், ஜி.டி.பி., உயரும்’ என, உர்ஜித் படேல் கூறியிருப்பது, பொருளாதார வல்லுனர்களிடையே, வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
இத்தகைய நிலைப்பாடு குறித்து, உர்ஜித் படேல் அளித்த பேட்டி: நடப்பு நிதியாண்டின், ஏப்., – ஜூன் வரையிலான, முதல் காலாண்டில், ஜி.டி.பி., 5.7 சதவீதமாக குறைந்து உள்ளது. இதை, ஜி.எஸ்.டி., முறைக்கு மாறுவதை முன்னிட்ட தாக்கமாகவே கருத வேண்டும். இந்த பாதிப்பில் இருந்து, நாடு மீள்வதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. குறிப்பாக, வாகனம் மற்றும் இருசக்கர வாகனங்கள் விற்பனை சூடுபிடித்துள்ளது.
‘நிக்கி’ நிறுவனம் வெளியிட்ட, சேவைகள் துறைக்கான வளர்ச்சி குறியீடு, ஆகஸ்டில் இருந்ததை விட, செப்டம்பரில், 3 சதவீதம் அதிகரித்துள்ளது. அது போல, தொழில் துறையில், முக்கிய எட்டு துறைகளின் உற்பத்தி வளர்ச்சி குறியீடு, 2016 ஆக., மாதத்தை விட, இந்தாண்டு ஆகஸ்டில், 4.9 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த விபரங்களின் அடிப்படையில், நடப்பு, அக்., – டிச., வரையிலான, மூன்றாம் காலாண்டிலும், 2018 ஜன., – மார்ச் வரையிலான, நான்காம் காலாண்டிலும், ஜி.டி.பி., 7 சதவீதத்தை தாண்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான, ‘ரெப்போ’ வட்டியை குறைக்காமல், 6 சதவீதமாகவே நீட்டித்திருப்பது குறித்து, மாறுபட்ட கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன. ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழுவிற்கு, நாட்டின் வளர்ச்சியில் எப்போதும், அதிக அக்கறையும், கவனமும் உள்ளது. அதே சமயம், வட்டியை குறைப்பதால் ஏற்படும் பணவீக்கத்தில் தான், ஜி.டி.பி., வளர்ச்சி காண வேண்டும் என்பதை ஏற்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
பணவீக்க இலக்கு உயர்வு:
ரிசர்வ் வங்கி, நடப்பு நிதியாண்டிற்கான பண வீக்கத்தை, 4 சதவீதத்திற்குள் வைக்க இலக்கு நிர்ணயித்து இருந்தது. இந்நிலையில், கடந்த வாரம் வெளியிடப்பட்ட, ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கை அறிவிப்பில், ‘ஜி.எஸ்.டி.,யின் தாக்கம், உணவு தானிய உற்பத்தி குறையும் என்ற மதிப்பீடு போன்றவற்றால், இரண்டாவது அரையாண்டில், நாட்டின் பணவீக்கம், 4.2 – 4.6 சதவீதமாக உயரும்’ என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|