பதிவு செய்த நாள்
11 அக்2017
05:20

புதுடில்லி : ஐ.டி., துறையில், ‘ஆட்டோமேஷன்’ தொழில்நுட்ப பயன்பாடு பெருகி வருவதால், அடுத்த, 6 – 12 மாதங்களில், வேலைவாய்ப்பு குறையும் என, ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.
ஐ.டி., என, சுருக்கமாக அழைக்கப்படும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் வேலைவாய்ப்பு குறித்து, எக்ஸ்பெரிஸ், ஐ.டி., நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை: இந்திய, ஐ.டி., துறையில், இதுவரை இல்லாத வகையில், முன்னணி நிறுவனங்கள், அதிகமானோரை பணியில் இருந்து விடுவிக்க திட்டமிட்டு உள்ளன. இந்த நடவடிக்கை, அடுத்த, 6 – 12 மாதங்கள் நீடிக்கும் என, தெரிகிறது. ‘ஆட்டோமேஷன்’ எனப்படும், தன்னிச்சையாக செயல்படும் சாப்ட்வேர் பயன்பாடு, மின்னணு தொழில்நுட்ப பரவலாக்கம் ஆகியவையே, இதற்கு காரணம். அதனால், ஐ.டி., வல்லுனர்கள், அதிக தேவைப்பாடு உள்ள, நவீன தொழில்நுட்பங்களில், தங்கள் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
குறிப்பாக, ‘எஸ்.ஏ.ஏ.எஸ், இ.ஆர்.பி., ஆர்டிபிஷியல் இன்டெலிஜன்ஸ்’ போன்ற, அதிவேகத்துடன், மிகத் துல்லியமாக செயல்படக்கூடிய தொழில்நுட்பங்களில், போதிய பயிற்சி பெற வேண்டும். இந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதால், நிறுவனங்களின் செலவு பெருமளவு குறையும். அதனால், இத்தகைய தொழில்நுட்பங்களில், நிபுணத்துவம் உள்ளவர்களுக்கான வேலைவாய்ப்பு, அடுத்த இரு ஆண்டுகளுக்கு நீடிக்கும். அதே சமயம், உயர் பொறுப்பில் உள்ளவர்களுக்கான பணி வாய்ப்பு குறையும். அத்தகையோரை வெளியேற்றி, ஏற்கனவே, நவீன தொழில்நுட்பங்களில் போதிய திறன் கொண்ட, புதியவர்களை நியமிக்க விரும்புவதாக, ஆய்வில் பங்கேற்ற பெரும்பான்மை நிறுவனங்கள் கூறியுள்ளன.
பணியில் சேர்த்து, தொழில்நுட்ப பயிற்சி அளிப்பதை விட, முன்கூட்டியே பயிற்சி பெற்ற புதியவர்களை நியமிக்கவே, நிறுவனங்கள் விரும்புகின்றன. அவை, சந்தையில் அறிமுகமாகும், புதிய தொழில்நுட்பங்களை உடனுக்குடன் அணுகும் திறன் கொண்டவர்களுக்கே, பணி வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கின்றன.ஐ.டி., துறையில், தொழில்நுட்ப நிபுணத்துவம் உள்ள புதியவர்களை, பணிக்கு அமர்த்தும் புதிய போக்கு உருவாகி உள்ளது. இந்திய, ஐ.டி., துறையில், ஒட்டுமொத்த வேலைவாய்ப்பு சாதகமாக உள்ள போதிலும், திறன் உள்ளோரையும், திறனை மேம்படுத்திக் கொள்வோரையும் இலக்காகக் கொண்டே, நிறுவனங்களின், புதிய வேலைவாய்ப்பு திட்டங்கள் உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
பிரகாசமான வாய்ப்பு:
‘சாப்ட்வேர் ஒரு சேவை’ என்பதன் சுருக்கமே, ‘எஸ்.ஏ.ஏ.எஸ்.,’ அல்லது ‘சாஸ்’ எனப்படுகிறது. இதில், ஐ.டி., நிறுவனங்கள், விரும்பும் போது, தேவையான சாப்ட்வேர் சேவையை, குறிப்பிட்ட கட்டணத்தில் பெறலாம். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப சாப்ட்வேர்கள், மனிதனுக்கு ஒப்பாக சிந்தித்து, பல மடங்கு விரைவாக கட்டளைகளை முடிக்க கூடியவை. நிறுவனச் செயல்பாடுகள் முழுவதையும் திட்டமிட்டு செயல்படுத்த, மேகக் கணினி தொழில்நுட்பம் சார்ந்த, இ.ஆர்.பி., சாப்ட்வேர் உதவுகிறது. இத்துறைகளில் நிபுணத்துவம் உள்ளோருக்கு, வேலைவாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
-மன்மீத் சிங், தலைவர், எக்ஸ்பெரிஸ் ஐ.டி.,
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|