பதிவு செய்த நாள்
31 அக்2017
05:26

புதுடில்லி, அக். 31–மும்பை, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில், ஓராண்டில், ரியல் எஸ்டேட் துறையில், இரு மடங்கு முதலீடுகள் அதிகரித்திருப்பது, ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.இது குறித்து, ‘குஷ்மன் அண்டு வேக்பீல்டு’ நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை:உலகளவில், 400 நகரங்களில், ஜூன் இறுதி வரையிலான ஓராண்டில், ரியல் எஸ்டேட் துறையில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள், 4 சதவீதம் உயர்ந்து, 1.50 லட்சம் கோடி டாலராக அதிகரித்துள்ளது. இதில், இந்தியாவில்,மும்பை, புனே, பெங்களூரு, டில்லி மற்றும் தலைநகர் பிராந்தியம், சென்னை, ஐதராபாத் ஆகிய, ஆறு நகரங்களில் மேற்கொண்ட முதலீடு, 100 சதவீதம் உயர்ந்து, 287 கோடி டாலராக அதிகரித்து உள்ளது.இந்திய ரியல் எஸ்டேட் துறையில், அதிகளவில், அதாவது, 175 கோடி டாலர் முதலீடுகளை ஈர்த்து, மும்பை, முதலிடத்தில் உள்ளது. உலகளவில், 2016ல், 149வது இடத்தில் இருந்த மும்பை, இந்தாண்டு, 81வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட ஆறு நகரங்களில், ரியல் எஸ்டேட் துறை முதலீடுகளில், வட அமெரிக்கா, 55 சதவீத பங்களிப்பை கொண்டு உள்ளது. ஐரோப்பிய நாடுகளின் பங்கு, 14 சதவீதமாக உள்ளது. அதே சமயம், உள்நாட்டு முதலீடுகள் குறைந்துள்ளன.தற்போதைய பொருளாதார வளர்ச்சிக்கான காரணிகள், வளர்ந்த நாடுகளுக்கு சாதகமாக உள்ளன. இந்நிலையிலும், இந்திய நகரங்களில், ரியல் எஸ்டேட் துறை, எதிர்பார்ப்பிற்கும் மேலாக, நடுத்தர காலம் முதல், நீண்ட காலம் வரை, சிறப்பான வளர்ச்சி வாய்ப்பை கொண்டுள்ள காரணத்தால், முதலீடுகள் அதிகரித்துள்ளன.இதற்கு, மத்திய அரசு மேற்கொண்டு வரும் சீர்திருத்தங்கள்; வலுவானபொருளாதார ஊக்குவிப்பு காரணிகள்; முதலீடுகள் மீது, அதிக வருவாய் கிடைப்பது; நவீனமயமாகி வரும் வர்த்தகச் சூழல் உள்ளிட்ட, பல அம்சங்களையும் குறிப்பிடலாம்.மும்பை, டில்லி மற்றும் தலைநகர் பிராந்தியம், பெங்களூரு ஆகிய வளர்ந்த நகரங்கள், ரியல் எஸ்டேட் முதலீடுகளில், பெரும்பங்கை ஈர்த்துள்ளன. அதே சமயம், சென்னை, ஐதராபாத், புனே நகரங்களிலும், முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. இதற்கு, வாகனங்கள், பொறியியல் இயந்திரங்கள்,நுகர்வோர் சாதனங்கள், மருந்து பொருட்கள் ஆகியவற்றின், மைய தயாரிப்பு கேந்திரங்களாக, இந்நகரங்கள் உருவெடுத்து வருவது தான், முக்கிய காரணம்.இதுதவிர, நாட்டின் பொருளாதார சூழல், ஸ்திரமான அரசு ஆகியவையும், முதலீட்டாளர்களுக்கு, நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளன. அவர்கள், முதலீடுகளுக்கு பாதுகாப்பான நாடாக, இந்தியாவை கருதுகின்றனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
நியூயார்க் முதலிடம்உலகளவில், 2016 – -17 ஜூலை – ஜூன் வரையிலான, ஓராண்டில், ரியல் எஸ்டேட் துறையில், 5,100 கோடி டாலர் முதலீடுகளை ஈர்த்து, நியூயார்க் நகரம் முதலிடத்தை பிடித்துள்ளது. அடுத்த இடங்களில், லாஸ் ஏஞ்செல்ஸ், சான் பிரான்சிஸ்கோ நகரங்கள் உள்ளன. ஆசியாவில், அதிக முதலீட்டை ஈர்த்த வகையில், ஹாங்காங், 1,840 கோடி டாலருடன், 8வது இடத்தை பிடித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|