பதிவு செய்த நாள்
01 டிச2017
23:56

புதுடில்லி:‘‘இந்த நுாற்றாண்டின் மத்தியில், அமெரிக்கா, சீனாவை விஞ்சிய வளமுள்ள நாடாக, இந்தியா உருவெடுக்கும்,’’ என, ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர், முகேஷ் அம்பானி நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
அவர், வர்த்தக கருத்தரங்கு ஒன்றில் மேலும் பேசியதாவது:கடந்த, 2004ல், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 50 ஆயிரம் கோடி டாலராக இருந்தது. அப்போது, ‘அடுத்த, 20 ஆண்டுகளில், மொத்த உள்நாட்டு உற்பத்தி, 5 லட்சம் கோடி டாலராக உயரும்’ என, தெரிவித்தேன். அது, நிகழ்வதற்கான சூழல் தோன்றி உள்ளது. நான் கூறியதற்கு முன்பாகவே, அதாவது, 2024க்குள், இந்த வளர்ச்சி சாத்தியமாகும்.இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, தற்போது, 2.50 லட்சம் கோடி டாலராக உயர்ந்துள்ளது. இதில், உலகளவில், இந்தியா, ஆறாவது இடத்தில் உள்ளது.
இந்த வளர்ச்சியை, 7 லட்சம் கோடி டாலராக, மூன்று மடங்கு உயர்த்தி, உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளில், மூன்றாவது இடத்திற்கு இந்தியாவால் முன்னேற முடியாதா? நம்மால் முடியும்.வரும், 2030ல், 10 லட்சம் கோடி டாலராக உயர்த்தி, நம் நாட்டிற்கும், சீனா மற்றும் அமெரிக்காவிற்கும் உள்ள இடைவெளியை குறைக்க முடியாதா? நம்மால் முடியும்.
அடுத்த, 30 ஆண்டுகளில், இதை, இந்தியாவால் சாதிக்க முடியும். 21ம் நுாற்றாண்டின் மத்தியில், சீனாவை விட இந்தியா வளர்ச்சியில் விஞ்சும்.
உலக நாடுகளின் பார்வையில், இன்னும் கவர்ச்சிகரமான நாடாக விளங்கும்.இந்தியா, இதர நாடுகளில் இருந்து, மேம்பட்ட வகையில், வித்தியாசமான வளர்ச்சி பாதையை, உலகிற்கு அடையாளம் காட்டும். இதன் மூலம், பரவலான, சரி விகித வளர்ச்சி சாத்தியமாகும்.இவ்வாறு அவர் கூறினார்.
நாடும், நுகர்வோரும் முக்கியம்
‘ஆர்ஜியோ’ அறிமுகத்திற்கு பின், சர்வதேச பிராட்பேண்டு சந்தையில், இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது. ஆர்ஜியோ சேவையால், நுகர்வோர் பயன் பெற்றனரா; அதனால், நாடு முன்னேற்றம் காண்கிறதா என்பதை தான் பார்க்க வேண்டும். அதை விடுத்து, ஆர்ஜியோவால் இழப்பு ஏற்பட்டுள்ளதாக, மொபைல் போன் சேவை நிறுவனங்கள் புலம்பக் கூடாது. சுனில் மிட்டல் என் நண்பர் தான். ஆனால் வியாபாரம் என்பது, லாப, நஷ்டம் என்ற இரு அம்சங்களையும் கொண்டதை, அவர் புரிந்து கொள்ள வேண்டும்.
முகேஷ் அம்பானி, ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|