பதிவு செய்த நாள்
13 ஜன2018
00:16

புதுடில்லி:‘‘சீனாவில் இருந்து வெளியேறும் அமெரிக்க நிறுவனங்களை ஈர்த்து, மாற்று முதலீட்டு மையமாக உருவெடுக்கும் வாய்ப்பு, இந்தியாவுக்கு கிடைத்துள்ளது,’’ என, அமெரிக்க துாதர், கென்னத் ஜஸ்டர் தெரிவித்து உள்ளார்.
இவர், இந்தியாவிற்கான துாதராக பொறுப்பேற்ற பின், முதன்முறையாக ஆற்றிய உரை:அமெரிக்க அரசு, ‘அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை’ என்ற கொள்கையை கொண்டுள்ளது. அது போல, ‘மேக் இன் இந்தியா’ என, உள்நாட்டு தொழில் ஊக்குவிப்பு கொள்கையை, மத்திய அரசு கடைபிடிக்கிறது. இக்கொள்கைகளை இணக்கமற்றவையாக கருதவியலாது. பரஸ்பர முதலீடு மேற்கொண்டால், இரு நாடுகளும் பயன் பெறும்.
நெருக்கடி
அவற்றின் பொருளாதாரம், வர்த்தகம் அதிகரிக்கும். இது, புதிய தொழில்நுட்பங்களில் கூட்டிணைவுக்கும், வேலைவாய்ப்புகள் உருவாகவும் துணை புரியும்.இந்தியா – அமெரிக்கா இடையே, பாதுகாப்பு துறையில் நீடித்து வரும் பரஸ்பர நல்லுறவு, பொருளாதாரத்திலும் விரிவாக்கம் காண வேண்டும். அதற்கான தருணம், தற்போது வந்துள்ளது.ஆசிய பிராந்தியத்தில், மிகப்பெரிய சந்தையை கொண்டுள்ள சீனாவில், அமெரிக்க நிறுவனங்கள் பல்வேறு நெருக்கடிகளை சந்திக்கின்றன.
சில நிறுவனங்கள், சீனாவில் வர்த்தக நடவடிக்கைகளை குறைத்து, மாற்று சந்தைகளை தேடத் துவங்கி உள்ளன. இந்த நல்ல வாய்ப்பை, இந்தியா பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.வர்த்தகம் மற்றும் முதலீடுகளை ஈர்ப்பதன் மூலம், இந்திய – பசுபிக் பிராந்தியத்தில், அமெரிக்காவின் வர்த்தகத்திற்கு, மாற்று மையமாக உருவெடுக்கும் வாய்ப்பு, இந்தியாவிற்கு உள்ளது.பிரதமர் மோடி அரசின் பொருளாதார சீர்த்திருத்த செயல்பாடுகளால், வலிமையான, வெளிப்படையான, ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தை உருவாகி உள்ளது. இதனால் இந்தியா, நிலையான, நீண்ட கால வளர்ச்சியை காணும்.
தொடரும் சீர்திருத்தங்களும், வணிகத்தை தாராளமயமாக்கும் நடவடிக்கைகளும், இந்திய பொருட்களுக்கு, சர்வதேச சந்தையில் கூடுதலான வர்த்தகத்தை வழங்கி, வேலைவாய்ப்பை அதிகரிக்க துணை நிற்கும்.
கவலை
அமெரிக்க – இந்திய சந்தைகளை பொறுத்தவரை, சரக்கு மற்றும் சேவை துறைகளில், இன்னும் எண்ணற்ற பரஸ்பர வர்த்தக வாய்ப்புகள் உள்ளன.உலக வங்கி, சுலபமாக தொழில் செய்யும் நாடுகளின் வரிசையில், இந்தியாவை வெகுவாக உயர்த்தி உள்ளது.அது போல, அமெரிக்காவில், வலிமையாக உள்ள, அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பு சூழல், முதலீடுகளை அதிகரிக்கவும், புதிய தொழில்நுட்ப அறிவை, பிற நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளவும் உதவுகிறது.எனினும், அமெரிக்கா உடனான, இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை கவலை அளிக்கிறது. வர்த்தகம் மற்றும் முதலீடு தொடர்பான பிரச்னைகளுக்கு, இந்தியா உடன் இணைந்து தீர்வு காண, அமெரிக்கா தயாராக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
பரஸ்பர வர்த்தகம்
இந்தியா – அமெரிக்கா இடையிலான பரஸ்பர வர்த்தகம், 2001ல், 2,000 கோடி டாலராக இருந்தது. இது, 2016ல், 11,500 கோடி டாலராக உயர்ந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|