பதிவு செய்த நாள்
15 ஜன2018
01:52

வங்கி கடன் பெறும் போது குறைந்த வட்டி விகிதம் தவிர கடனுக்கான நிபந்தனைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை பரிசீலிக்க வேண்டும்.
வீட்டுக்கடன், வாகன கடன் என எந்த வகையான கடன் பெறுவதாக இருந்தாலும், வாடிக்கையாளர்கள் கடன் தொடர்பான அனைத்து முக்கியமான அம்சங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும். கடன் பெறுவதற்கான தேவை, கடனை திருப்பி அளிக்கும் ஆற்றல், நிதி சூழல் ஆகிய அம்சங்களை மனதில் கொள்வதோடு, கடன் தொடர்பான மற்ற அம்சங்களையும் பரிசீலிக்க வேண்டும்.
பொதுவாக கடன் பெறுவதை தீர்மானிக்கும் போது, வட்டி விகிதத்தை அனைவரும் தவறாமல் கவனிக்கின்றனர். எந்த வங்கியில் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் பெறலாம் என்றும் பரிசீலிக்கின்றனர். ஆனால், குறைந்த வட்டி விகிதம் தவிர, கடனுக்கான ஒட்டுமொத்த செலவு என்பதை பரிசீலிப்பது முக்கியம்.
வருடாந்திர விகிதம்
வங்கிகள் அளிக்கும் வருடாந்திர சதவீத விகிதம் (ஏ.பிஆர்.,) இந்த கட்டணங்கள் மற்றும் அம்சங்களை உள்ளடக்கியதாக இருக்கும். வங்கியிடம் இருந்து இந்த விகிதத்தை தெரிந்து கொள்ள வேண்டும். இந்த விகிதத்தை வாடிக்கையாளரே எளிதாக கணக்கிடவும் முடியும். முதலில் மாதத்தவணை தொகையை, கடனுக்கான மொத்த காலத்துடன் (மாதங்கள்) பெருக்கி கொள்ள வேண்டும். இதில் இருந்து அசல் தொகையை கழித்தால், கடனுக்காக செலுத்த வேண்டிய வட்டி தொகை வரும். இதை, கடனுக்கான ஆண்டுகளால் வகுத்தால் வட்டி விகிதம் தெரிய வரும். இந்த விகிதத்தை கடன் தொகையால் வகுத்தால், வருடாந்திர வட்டி விகிததத்தை அறிந்து கொள்ளலாம்.
இந்த விகிதத்தை கொண்டு வங்கிகள் அளிக்கும் கடனை ஒப்பிடும் போது, வட்டி விகிதம் மட்டும் அல்லாமல், கட்டணங்கள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய ஒப்பீட்டை மேற்கொள்ள முடியும்.செயல்முறை கட்டணம், தொழில்நுட்ப கட்டணம், நிர்வாக கட்டணம், சட்ட கட்டணம், முன்கூட்டியே செலுத்தும் கட்டணம், அபராதங்கள் என பல வகையான கட்டணங்கள் இருக்கின்றன. இவற்றை கணக்கில் எடுத்துக்கொள்ளும் போது கடனுக்கான செலவு அதிகமாக இருக்கும்.
எனவே, பொருந்தக்கூடிய அனைத்து கட்டணங்களையும் முன்கூட்டியே தெரிந்து கொள்ள வேண்டும். மாதத்தவணையை உரிய காலத்தில் செலுத்த தவறினால், விதிக்கப்படக்கூடிய அபராத தொகையையும் அறியவேண்டும்.
நிபந்தனைகள்
மேலும் கடனை தேர்வு செய்யும் போது மாறும் வட்டி விகிதமா? மாறாத நிலையான வட்டி விகிதமா எனும் அம்சமும் பரவலாக பரிசீலிக்கப்படுகிறது. மாறும் வட்டி விகிதம் எனில், வட்டி விகித போக்கிற்கு ஏற்ப கடனுக்கான வட்டி விகிதமும் அமையும். வட்டி விகித போக்கை கணிப்பது எளிதல்ல என்பதால், ஒருவர் தன் நிதி சூழலுக்கு ஏற்ப முடிவு செய்ய வேண்டும். அதே போல வட்டி விகிதம் மாற்றி அமைக்கப்படுவது தொடர்பான விவரங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
வங்கிகள் அளிப்பதாக சொல்லும் ஜீரோ இ.எம்.ஐ., செயல்முறை கட்டணம் தள்ளுபடி தொடர்பான பொடி எழுத்து நிபந்தனைகளை கவனிக்க வேண்டும்.கடனுக்கான ஈர்ப்புடைய விஷயங்களை மட்டும் கவனத்தில் கொள்ளாமல், ஒட்டுமொத்த நோக்கில் செலவு குறைந்ததாக உள்ள கடன் வாய்ப்பை தேர்வு செய்வது நல்லது.
இதற்காக ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிகளில் விசாரித்து பார்க்க வேண்டும். முக்கியமாக கடன் விண்ணப்ப விபரங்கள் முழுவதையும் பொறுமையாக படித்துப் பார்த்து புரிந்து கொள்வது அவசியம்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|