பதிவு செய்த நாள்
24 ஜன2018
00:56

டாவோஸ் : ‘‘சர்வதேச நிறுவனங்களுக்கு, இந்தியாவில், ஏராளமான வர்த்தக வாய்ப்புகள் காத்திருக்கின்றன,’’ என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து உள்ளார்.
அவர், சுவிட்சர்லாந்தின், டாவோஸ் நகரில், சர்வதேச தொழிலதிபர்களுக்கு விருந்து கொடுத்தார். இதில், ஏர்பஸ் குழும தலைமை செயல் அதிகாரி, டிர்க் ஹோக், ஹிட்டாச்சி குழும தலைவர், ஹிரோகி நகாநிஷி உள்ளிட்ட, பன்னாட்டு குழுமங்களைச் சேர்ந்த, 40 பேரும், இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்கள், 20 பேரும் பங்கேற்றனர்.
இது குறித்து, வெளி விவகாரங்கள் அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், ரவீஷ் குமார் கூறியதாவது: விருந்து நிகழ்ச்சியில், ‘இந்தியா என்றால் வர்த்தகம்’ என்ற தலைப்பில், பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர், இந்தியாவில் உள்ள வளமான வர்த்தக வாய்ப்புகளையும், சுலபமாக தொழில் துவங்குவதற்கான சூழலையும் எடுத்துக் கூறி, தாராளமாக முதலீடு செய்ய வருமாறு, பன்னாட்டு தொழில் அதிபர்களை கேட்டுக் கொண்டார்.
மத்திய அரசு, பல்வேறு துறைகளில் மேற்கொண்டு வரும் சீர்திருத்தங்களையும் பட்டியலிட்டார். பன்னாட்டு நிறுவனங்களை ஈர்க்கும் நோக்கில், அன்னிய நேரடி முதலீட்டு விதிமுறைகள் மேலும் தளர்த்தப்பட்டு உள்ளதையும், அவர் சுட்டிக்காட்டினார். இந்தியா என்றாலே, அங்குள்ள எண்ணற்ற வர்த்தக வாய்ப்புகள் தான், உலகினரின் கவனத்திற்கு வரும்; இந்தியாவையும், வர்த்தகத்தையும் பிரித்துப் பார்க்க முடியாது என்றும், அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியை தொடர்ந்து, பிரதமர் மோடி, சுவிட்சர்லாந்து அதிபர், அலைன் பெர்சட்டை சந்தித்து பேசினார். அப்போது, இந்தியா – சுவிஸ் பரஸ்பர வர்த்தகத்தை உயர்த்துவது குறித்து, இருவரும் ஆக்கபூர்வமான சிந்தனைகளை பகிர்ந்து கொண்டனர். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|