பதிவு செய்த நாள்
24 ஜன2018
01:04

டாவோஸ் : சைபர் பாதுகாப்பு, பருவநிலை மாற்றம் போன்ற பிரச்னைகளையும் மீறி, முதலீடுகளை ஈர்க்கும் நாடுகளின் பட்டியலில், இந்தியா, ஜப்பானை விஞ்சி, 5வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.
பிரைஸ் வாட்டர் ஹவுஸ் கூப்பர் நிறுவனம், ஆண்டுதோறும், சர்வதேச நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் தெரிவிக்கும் கருத்துக்களின் அடிப்படையில், முதலீட்டிற்கு உகந்த நாடுகளின் பட்டியலை வெளியிடுகிறது. இதன்படி, இந்தாண்டுக்கான பட்டியல், சுவிஸ் நாட்டின், டாவோஸ் நகரில்,உலக பொருளாதார மாநாட்டில் வெளியிடப்பட்டது.
இந்த பட்டியலில், சர்வதேச நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளில், 46 சதவீதம் பேரின் ஆதரவுடன், அமெரிக்கா முதலிடத்தை பிடித்துள்ளது. 33 சதவீதம் பேர் ஆதரவுடன், சீனா இரண்டாவது இடத்தையும், ஜெர்மனி, 20 சதவீத ஆதரவுடன், மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன. பிரிட்டன், 15 சதவீதம் பேரின் ஆதரவுடன், நான்காவது இடத்தை பிடித்துள்ளது. ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி உள்ள இந்தியாவுக்கு, 9 சதவீதத்தினரின் ஆதரவு கிட்டியுள்ளது. கடந்த ஆண்டு, இந்தியா, 6வது இடத்திலும், ஜப்பான், 5வது இடத்திலும் இருந்தன.
இது குறித்து, பிரைஸ் வாட்டர் ஹவுஸ் கூப்பர்இந்தியா நிறுவனத்தின் தலைவர், ஷியாமல் முகர்ஜி கூறியதாவது: உறுதியான கட்டமைப்பை ஏற்படுத்தக் கூடிய சீர்திருத்தங்களால், ஓராண்டாக, இந்தியாவின் செயல்பாடு மேம்பட்டு உள்ளது. ஆய்வில் பங்கேற்ற, பெரும்பான்மையான தலைமை செயல் அதிகாரிகள், தங்கள் நிறுவனத்தின் வளர்ச்சி குறித்து, மிகுந்த நம்பிக்கை தெரிவித்து உள்ளனர். அடிப்படை கட்டமைப்பு வசதி, தயாரிப்பு மற்றும் திறன் வளர்ப்பு போன்ற பிரிவுகளில் உள்ள பிரச்னைகளுக்கு, தீர்வு காணும் நடவடிக்கைகளை, மத்திய அரசு எடுத்துள்ளது.
அதே சமயம், ‘சைபர் கிரைம்’ எனப்படும், கணினி சார்ந்த மோசடி, பருவநிலை மாற்றம் போன்ற புதிய அச்சுறுத்தல்கள் உள்ளதாக, ஆய்வில் பங்கேற்றோரில், 40 சதவீதம் பேர் கூறியுள்ளனர். பயங்கரவாத செயல்கள் குறித்து, 41 சதவீதம் பேர் கவலை தெரிவித்து உள்ளனர். திறமையான வல்லுனர்களின் பற்றாக்குறை மற்றும் ஜனரஞ்சக செயல் திட்டங்களின் தாக்கம் குறித்த கவலை உள்ளதாக, முறையே, 38 சதவீதம் மற்றும், 35 சதவீதம் பேர் கூறியுள்ளனர். அதிக கட்டுப்பாடுகள் தான், 42 சதவீத தலைமை செயல் அதிகாரிகளுக்கு, பிரதான கவலையாக உள்ளது. 36 சதவீதம் பேருக்கு, வரி விகித உயர்வு பிரச்னையாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய தலைவலி:
ஆசிய பசிபிக் மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளின் வர்த்தகத்தில், முக்கிய ஐந்து அச்சுறுத்தல்களில், பருவநிலை மாற்றமும், சுற்றுச்சூழல் பாதிப்பும் இடம் பிடித்துள்ளன. குறிப்பாக, எரிசக்தி, பொறியியல், கட்டுமானம், போக்குவரத்து மற்றும் சரக்கு போக்குவரத்து துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு, இப்பிரச்னை முக்கிய தலைவலியாக உள்ளது.
-பிரைஸ் வாட்டர் ஹவுஸ் கூப்பர் ஆய்வறிக்கை
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|