பதிவு செய்த நாள்
26 பிப்2018
04:42
கடந்த வாரம், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டியில், சரிவுடன் வர்த்தகம் நடைபெற்றது. இருப்பினும், வார இறுதி நாட்களில் சரிவில் இருந்து, ஏறத்தாழ, 200 புள்ளிகள் வரை உயர்ந்து, சிறிய சரிவில், 104.79 புள்ளிகளுடன் வியாபாரம் முடிவுற்றது. இந்த வாரம், சில முக்கிய பொருளாதார காரணிகள் வெளியாக உள்ளன. இவற்றின் முடிவுகள், சந்தையின் போக்கை நிர்ணயிக்கும். இதில், வரும் புதன் அன்று, இந்தியாவின், மூன்றாம் காலாண்டு, ஜி.டி.பி., விபரம் வர உள்ளது. இதில், 6.3ல் இருந்து, 6.7 சதவீதமாக வளர்ச்சி இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஜி.எஸ்.டி., வரி விதிப்பிற்கு பின், ஆறு மாதங்களில், 6 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. வியாழன் அன்று, பிப்ரவரி மாதத்தின் வாகன விற்பனை விபரம் வெளிவர உள்ளது.மாருதி சுசூகி, டாடா மோட்டார்ஸ் ஆகியவற்றின் கார் விற்பனை, ஜனவரியை விட, பிப்ரவரியில் அதிகம் இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. கனரக வாகன விற்பனையும் அதிகரித்திருக்கும் என, தெரிகிறது.ஜனவரியில், இரு சக்கர வாகன விற்பனை, 30 – -35 சதவீதம் வரை வளர்ச்சி கண்டிருந்தது. இருப்பினும், பிப்ரவரியில், இவ்வளர்ச்சி, 30 சதவீதம் தான் இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இவை தவிர, பி.எம்.ஐ., எனப்படும், தொழில் மற்றும் சேவை துறை வளர்ச்சி விகித குறியீடு குறித்த அறிவிப்பும் வெளியாக உள்ளது. வெள்ளியன்று, ஹோலி பண்டிகையை முன்னிட்டு, சந்தைகளுக்கு விடுமுறையாகும். திரிபுரா மாநில தேர்தல் முடிவு, சனிக்கிழமை வெளியாக உள்ளது. இதனால் ஏற்படும் மாற்றங்கள், அடுத்த வாரம் சந்தையில் எதிரொலிக்கும்.அமெரிக்க ரிசர்வ் வங்கி, இந்தாண்டு எத்தனை முறை வட்டி விகிதத்தை உயர்த்தக் கூடும் என்பது பற்றி, சர்வதேச சந்தையில் விவாதம் நடைபெறுகிறது. மூன்று முறை வட்டி விகிதம் உயர்த்தப்படலாம் என்ற கருத்து, பரவலாக உள்ளது.அடுத்த மாதம், 20, -21ம் தேதிகளில், வட்டி விகித கூட்டம் நடைபெற உள்ளது. அமெரிக்க அரசின் கருவூல ஆதாயம் உயர்ந்து வருகிறது. இந்த ஆதாயம், 3 சதவீதத்திற்கு மேல் உயர்ந்தால், மீண்டும் பங்குச் சந்தைகள் சரிய வாய்ப்புள்ளது. தற்போது, ஆதாய அளவு, 2.94 சதவீதமாக உள்ளது. புதன் அன்று, அமெரிக்க ரிசர்வ் வங்கியின் புதிய தலைவர் பொறுப்பேற்க உள்ளார். நிப்டி ரெசிஸ்டன்ட், 10,640 – - 10,735; சப்போர்ட், 10,345 ஆகும்.
கமாடிட்டி சந்தை
கச்சா எண்ணெய் விலை, இரு வாரங்களாக அதிகரித்து வருகிறது. லிபியா நாட்டின் எண்ணெய் உற்பத்தி, தொழில் நுட்ப கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்காலிகமாக, தினசரி உற்பத்தி, 70 ஆயிரம் பேரல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.இதன் காரணமாக, கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. கடந்த வாரம், அமெரிக்காவின் கச்சா எண்ணெய் இருப்பு குறித்த தகவல் வெளியானது. அதில், கச்சா எண்ணெய் இருப்பு அளவு, 1.6 மில்லியன் பேரல்கள் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இது, 1.8 மில்லியன் பேரல்களாக அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இவ்விரு நிகழ்வுகளால், கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. ஒபெக் உறுப்பு நாடுகள் தங்களது மொத்த உற்பத்தியை, 1.8 மில்லியன் பேரல்கள் குறைத்துள்ளன. இதை, இந்தாண்டு டிசம்பர் வரை நீட்டித்திருப்பது குறிப்பிடத்தக்கது.இருப்பினும், பெருகி வரும் அமெரிக்காவின் எண்ணெய் உற்பத்தி, ஒபெக் நாடுகளுக்கு சவாலாக அமைந்துள்ளது. பேக்கர் ஹக்ஸ் நிறுவனத்தின் கணக்குப்படி, செயல்பாட்டில் உள்ள எண்ணெய் குழாய்களின் எண்ணிக்கை, 799 ஆக உயர்ந்துள்ளது. தினசரி உற்பத்தியானது, 10.24 மில்லியன் பேரல்களாகும்.கடந்த வியாழன் அன்று, சவுதி அரேபியாவின் எண்ணெய் வளத் துறை அமைச்சர், உலகின் எண்ணெய் இருப்பு அளவு தற்போது குறைந்து கொண்டு வருவதாக கூறி இருந்தார். கச்சா எண்ணெய் இருப்பு அளவு குறைந்தால், ஏதேனும் ஒரு அசாதாரண சூழல் நிகழுமாயின், சந்தையில் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என, சந்தையில் அச்சம் ஏற்பட்டது. இதையடுத்து, கச்சா எண்ணெய் விலை உயர்வை கண்டது. ஜனவரியில், 1 பேரல் கச்சா எண்ணெய் விலை, 66.65 டாலர் வரை உயர்ந்தது. அதன் பின் ஏற்பட்ட சரிவால், 1 பேரல் விலை, 58 டாலர் வரை தாழ்ந்தது. தற்போது உயர்ந்து, 1 பேரல், 63.60 டாலராக உள்ளது.
தங்கம்
கடந்த வாரம், சர்வதேச சந்தையிலும், பொருள் வாணிப சந்தையிலும், தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் சரிவில் வர்த்தகமாயின. அமெரிக்க நாணயத்தின் மதிப்பு உயர்வதன் காரணமாகவும், அரசு கருவூல பத்திரங்களின் ஆதாயம் உயரும் என்ற எதிர்பார்ப்பும், தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் சரிவை ஏற்படுத்தின. மூன்று ஆண்டுகளாக, 10 ஆண்டு கால பத்திரங்களின் ஆதாயம், 2.5 சதவீதத்திற்கும் கீழாக இருந்து வந்தது. இது, கடந்த வாரம், 2.94 சதவீதமாக உயர்ந்து, உச்சத்தை எட்டியது. இதனால், தங்கம் மீதான முதலீட்டு ஆர்வம் குறைந்தது. மேலும், பங்குச் சந்தைகளும் சரிவை சந்தித்தன. உள்நாட்டு சந்தையிலும், நீண்ட கால பத்திரங்களான, 2024ம் ஆண்டு பாண்டு, 7.94 சதவீதம்; 2030ம் ஆண்டு பாண்டு, 8.04 சதவீதமாக உள்ளது. கடந்த புதன் அன்று வெளிவந்த, அமெரிக்க ரிசர்வ் வங்கியின் வட்டி விகித கூட்டத்தின் சுற்றறிக்கை, வரும் காலங்களில் வட்டி விகிதம் உயர்த்த வாய்ப்புள்ளதாக தெரிவிக்கிறது. இதுவும் தங்கம் விலைக்கு பாதகமாக அமைந்தது. சீன புத்தாண்டை முன்னிட்டு, கடந்த வியாழன் வரை, இரு வாரங்கள், சீன சந்தைகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. தற்போது, சீனாவில் இயல்பு நிலை வந்த சூழலில், ஆபரண தேவைக்கான தங்கம் கொள்முதல் துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நம் சந்தையில் தங்கம் விலை, ரூபாய் மதிப்பு சரிவால் உயர்ந்து காணப்படுகிறது. சமீபத்தில், ரூபாய் மதிப்பு, 63.50லிருந்து, 65 வரை சரிவை கண்டது. இதனால், தங்கம் விலை உயர்ந்துள்ளது.
செம்பு
மூன்று வாரங்களாக தொடர்ந்து சரிவில் இருந்து வந்த செம்பு விலை, கடந்த வாரம் சிறிய அளவில் மீண்டது. கடந்த ஆண்டு டிசம்பர் முதல், 10 சதவீத விலை உயர்வும், கடந்த வாரம், 35 சதவீத விலையேற்றமும் நிகழ்ந்தது. எலக்ட்ரிக் கார்கள் பயன்பாட்டிற்கு வரும் என்ற எதிர்பார்ப்பால், செம்பு தேவை அதிகரிக்கும் என, கணிக்கப்படுகிறது. இதன் காரணமாக, செம்பு விலை உயர்ந்து வருகிறது. வரும், 2020ல் இந்த வகை கார்கள் விற்பனைக்கு வரும் என, தெரிகிறது. ராய்ட்டர்ஸ் நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில், செம்பு உற்பத்தியை விட தேவை அதிகரித்து, 45 ஆயிரத்து, 500 டன் பற்றாக்குறை ஏற்படும் என, தெரியவந்துள்ளது. இதற்கு முன், 2017, நவம்பரில் நடத்திய ஆய்வில், 93 ஆயிரம் டன் தேவையை விட, உற்பத்தி அதிகமாக இருக்கும் என, தெரிய வந்தது.சீனாவில், சுற்றுச்சூழல் சீர்கேடு காரணமாக, சில செம்பு சுத்திகரிப்பு நிறுவனங்கள் மூடப்பட்டதும், விலை உயர்வுக்கு காரணமானது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|