பதிவு செய்த நாள்
26 பிப்2018
04:43

ஒரே மாதத்தில் பல மியூச்சுவல் பண்டு திட்டங்களில் நிகழ்ந்திருக்கும் மதிப்பு சரிவு, சந்தையின் குறியீடான நிப்டியின் வீழ்ச்சியை விட அதிகமாக அமைந்துள்ளது. சில திட்டங்கள், குறியீட்டை விட குறைவாகவே சரிந்துள்ளன.இந்த சரிவுகளின் தாக்கம் எத்தகையது? நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்ன? பொதுவாக சரிவுகளும், ஏற்றங்களும் சந்தையில் தவிர்க்க முடியாதவை என்பதை ஏற்றாலும், இந்த மாற்றங்களை கவனமாக ஆய்வு செய்ய வேண்டும். முக்கியமாக, சரிவை வகைப்படுத்துவது அவசியம். நிதி மேலாளரின் முதலீட்டு தேர்வுகள் மிக கவனமாகவும், இழப்பை தவிர்க்கும் நோக்கோடும் எடுக்கப்பட்டிருந்தால், அதன் தாக்கம் ஒரு வகை. அதனால், நெடுங்கால நன்மை ஏற்படக்கூடும்.தொடர்ந்து பண வரத்து அதிகம் இருப்பதால், அதே பங்குகளை தொடர்ந்து வாங்கி, அவற்றில் விலைச் சரிவை தவிர்க்கும் வண்ணம் நிதி மேலாளர்கள் முதலீடு செய்தால், அதன் தாக்கம் இரண்டாம் வகை. முதல் வகை தாக்கம், முதலீட்டாளரின் நலம் காக்கும் வகையில் அமையும். ஆனால் இரண்டாம் வகை தாக்கம், குறுகிய காலத்தில் முதலீட்டாளர்களுக்கு நன்மை செய்தாலும், நெடுங்கால போக்கில் நட்டம் ஏற்படுத்தக்கூடும். அடிப்படையில், ஒரு பங்கின் மதிப்பை சரிவில் இருந்து காப்பது, அந்த நிறுவனத்தின் வளர்ச்சி மட்டுமே. இந்த புரிதல் சில நேரங்களில் நிதி மேலாளர்களால் புறக்கணிக்கப்பட்டு விடுவதே கடந்த கால வரலாறு. அப்படி செய்யும் போது, அதுவே பிற்காலத்தில் முதலீட்டாளர்களுக்கு நட்டமும், வலியும் ஏற்படுத்தியுள்ளதை அனைவரும் அறிவோம். அடிப்படையில், தொடர் விலைச் சரிவுகள் முதலீட்டு கொள்கைகள் சார்ந்து பல கேள்விகளை எழுப்புவது தவிர்க்க முடியாதது. தொடர்ந்து மதிப்பு இழக்கும் பல மியூச்சுவல் பண்டு திட்டங்களின் முதலீட்டு தேர்வுகள் மற்றும் நிதி ஒதுக்கீட்டு முறைகள் சார்ந்த கவலைகள் தவிர்க்க முடியாதவை. தற்போது, அத்தகைய சூழல் ஏற்படவில்லை என்றாலும், முதலீட்டாளர்களும், ஆலோசகர்களும் பங்கு திட்டங்களின் முதலீடுகளை தொடர்ந்து அதிக கவனத்துடன் அணுக வேண்டும். வருங்கால ஆபத்துகளை தவிர்ப்பதற்கு முன்னுரிமை கொடுப்பது, ஒவ்வொரு முதலீட்டாளரின் கடமை. ஆலோசகர்களும் அதிக கவனம் செலுத்தி, முதலீட்டாளர் நலம் பேண வேண்டிய நேரம் இது. சென்ற ஆண்டு அதிக லாபம் ஏற்படுத்திய பல திட்டங்களில் இந்த ஆண்டு நட்டம் ஏற்படலாம். இவற்றில் இருந்து முதலீட்டாளர்களை வெளியேறச் செய்வது அவசியம். தொடர்ந்து பங்கு நிதி தேர்வுகளை பெரு நிறுவனங்கள் சார்ந்து அமைத்துக் கொண்டால், பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பும்போது, முதலீட்டாளர்கள் அதிகம் பலன் அடைவர். சிறு மற்றும் குறு நிறுவனங்களில் முதலீடு செய்யும் திட்டங்களில் இருந்து வெளியேறுவதற்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். லாபம் காப்பதன் முக்கியத்துவத்தை உணர்ந்து நடக்க வேண்டிய நேரத்தில், மேலும் லாபம் தேடுவதை தவிர்ப்பது மிக அவசியம். அத்தகைய தருணங்களில், முதலீட்டு தேர்வுகளை மிக சாதுர்யமாகவும், கவனமாகவும் எடுக்க வேண்டும். கடந்த கால லாபங்களை சார்ந்து மட்டுமே மியூச்சுவல் பண்டு முதலீட்டு முடிவுகளை எடுக்கும் போக்கை கடந்து செல்ல வேண்டும். முதலீட்டு முடிவுகள் நட்டம் ஏற்படுத்தாத வண்ணம் அமைவதன் முக்கியத்துவத்தை உணர்ந்து நடக்க வேண்டிய காலம் இது. அப்படி உணர்ந்து நடந்து கொள்வோர், வருங்காலத்தில் வருந்தும் சூழலை தவிர்ப்பது உறுதி.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|