பதிவு செய்த நாள்
26 பிப்2018
04:44

நிரவ் மோடி, ‘ரோட்டோமேக்’ பேனா என்று தொடர்ச்சியாக, ஒவ்வொரு பெரிய நிறுவனமும் பொதுத் துறை வங்கிகளை பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்து வரும் வேளையில், வங்கிகளைத் தனியார்மயப்படுத்திவிட்டால் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. இது சரியா? சாத்தியமா? பொதுமக்களுக்குப் பயன் தருமா?பிரதமரின் பொருளாதார ஆலோசகர், அரவிந்த் சுப்பிரமணியம் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார். இதை, ‘பிக்கி’ போன்ற தொழில் துறை அமைப்புகள் வரவேற்கின்றன. அதி கோத்ரெஜ் சாதக பாதகங்களை எடுத்துச் சொல்லி, வங்கிகளைத் தனியார்மயப்படுத்துவதே சரி என்கிறார். வங்கித் துறை ஊழியர் சம்மேளனம் மட்டும் வேறு குரலில் பேசுகிறது.சில யதார்த்தங்கள்முதலில் சில நிஜங்களைப் புரிந்துகொள்வோம். மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா, வங்கிகளை தேசியமயமாக்கிய காலம் துவங்கி, சமூக ரீதியான முதலீடுகளுக்கு வங்கிகள் பயன்பட்டு வந்துள்ளன.சின்னச் சின்ன நகரங்கள், கிராமங்கள் உட்பட விரிவான கட்டமைப்பை வங்கிகள் கொண்டிருந்தன. அங்குள்ள ஏழை, எளியவர்களின் தேவைகளை நிறைவேற்ற வங்கிகள் பயன்பட்டன.சமீப ஆண்டுகளில் கூட, ‘பிரதமர் ஜன்தன் யோஜனா’ திட்டத்தை அறிவித்து, பல கோடி ஜீரோ பேலன்ஸ் அக்கவுன்ட்டுகளைத் துவங்கியது, சமூக பாதுகாப்பை ஏழை, எளியவர்களுக்கு வழங்குவதற்கு தான்.வேறு விதத்தில் சொல்லவேண்டுமென்றால், அரசாங்கத்தின் கனிவு முகமாக, ஆதரவு கரமாக, தோள் கொடுக்கும் தோழனாக, வங்கிகள் செயல்பட்டன. இன்றைக்கு, இதை சோஷலிச பொருளாதார அணுகுமுறையின் சாபக்கேடாகப் பார்க்கத் துவங்கிவிட்டோம்.ஒவ்வொரு நிறுவனமும் தன்னளவில் லாபம் ஈட்ட வேண்டும். குறைந்தபட்சம் கையைக் கடிக்கக் கூடாது. அதைச் செய்யத் தவறும் நிறுவனங்கள், மக்களின் வரிப்பணத்தைக் கொள்ளையடிக்கின்றன என்ற சிந்தனை ஏற்பட்டு உள்ளது.பொதுத் துறை வங்கிகள் இன்னும் ஒரு படி மேலே போய்விட்டன. அங்கே மோசடிகள் அரங்கேறுகின்றன; அதைக் கட்டுப்படுத்த முடியவில்லை.ஒவ்வொரு முறையும் அரசாங்கம் தலையிட்டு, வங்கிகளைக் காப்பாற்ற வேண்டிய அவல நிலை. இந்தச் சூழ்நிலையில், மக்கள் நலனையும் மனதில் வைத்துக்கொண்டு என்ன செய்யலாம் என்று ஆலோசனை செய்யப்படுகிறது.வங்கிகளைத் தனியார்மயப்படுத்துவது உடனடி யோசனை. இதிலும் சாதக பாதகங்கள் உண்டு. அதைத் தனியே பேசுவோம். வேறு சில யோசனைகளை முதலில் பார்த்து விடுவோம்.இரண்டு யோசனைகள்பொதுத் துறை வங்கிகளோடு அரசாங்கத்துக்கு உள்ள நேரடி தொடர்பை விலக்க வேண்டும். அனைத்து பொதுத் துறை வங்கிகளையும் ஒருங்கிணைத்து நிர்வகிக்கும் ஒரு தனி அமைப்பை உருவாக்கி, அதன் கையில் வங்கிகளைக் கொடுத்துவிட வேண்டும். இதை, தேர்தல் ஆணையம் போன்ற ஒரு சுயேச்சையான அமைப்பாக மாற்றி, சுதந்திரமாக இயங்க அனுமதிக்க வேண்டும்.இதன் மூலம், இரண்டு விஷயங்கள் நடைபெறும். அரசாங்கத்தின் கனிவு முகமாக, இனியும் பொதுத் துறை வங்கிகள் செயல்பட வேண்டியதில்லை.அதனால், அரசியல்வாதிகளோ, இன்ன பிறரோ எந்த அழுத்தத்தையும் வங்கிகள் மீது செலுத்த முடியாது. இரண்டு, ஒவ்வொரு வங்கிக் கிளையும் எது இந்த நாட்டின் வளர்ச்சிக்கு உகந்ததோ, அதை மட்டுமே செய்யத் துணியும்; பொறுப்பு மேம்படும். எல்லாம் மேலே இருப்பவன் பார்த்துக் கொள்வான் என்று கைகழுவும் உத்தி செல்லுபடியாகாது.இப்படிச் செய்யும்போது, இத்தனை கிளைகள் வேண்டுமா, இத்தனை ஏ.டி.எம்.,கள் வேண்டுமா, எங்கேயெல்லாம் பணிகளை ஒருங்கிணைக்க முடியும்? என்ற சிந்தனை மேலோங்கும். விளைவு, படிப்படியாக வங்கிகளே ஒருங்கிணைக்கப்பட முடியும். அடுத்த ஐந்தாண்டுகளின் முடிவில், நான்கு பொதுத் துறை வங்கிகளே நிலைத்து நிற்கும். அவற்றால் திறம்பட வேலை செய்யவும் முடியும்.இன்னொரு யோசனை, பொதுத் துறை வங்கிகளை, வெறும் டெபாசிட் பெறும் வங்கிகளாக மட்டும் வைத்துக் கொள்வது. சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், அவை எந்தக் கடனையும் கொடுக்கக் கூடாது. வீட்டுக் கடனோ, வணிகக் கடனோ, பெருநிறுவனக் கடனோ, அவை அனைத்தையும் தனியார் வங்கிகளே வழங்கட்டும்.பொதுத் துறை வங்கிகள் பெறும் சேமிப்புகளை, ரிசர்வ் வங்கியிடம் கொடுத்துவிட்டு, அவற்றின் மூலமாக, தனியார் வங்கிகளுக்கு கடன் வழங்கப்படலாம். அவை தகுதி பார்த்து, தரம் பார்த்து, தேவை பார்த்து, கடன்களை வழங்கட்டும்; மீண்டும் வசூல் செய்யட்டும். கடன் தொல்லையிலிருந்து பொதுத் துறை வங்கிகளை மீட்கலாம்.இதில், தனியார் வங்கிகள் கடன்களைக் கொடுப்பதிலும், வசூல் செய்வதிலும் சிறப்பாகச் செயல்படும் என்ற நப்பாசை ஒன்று ஒளிந்திருக்கிறது. தனியார்மயம்அதி கோத்ரெஜ் சொல்வது போன்று, ‘தனியார் வங்கிகளில் மோசடிகளே இல்லை அல்லது குறைவு’ என்பது உண்மையாக இருந்தால், மேலே சொன்ன யோசனை பயனளிக்கும்.அடுத்து, நேரடியாக வங்கிகளைத் தனியார்மயமாக்குவது என்ற யோசனைக்கு வருவோம். பல வெளிநாட்டு வங்கிகள் இங்கே கிளை திறக்க காத்திருக்கின்றன. அவை லாபம் ஈட்டும் துறைகளில் மட்டுமே தம் கவனத்தைச் செலுத்தும். ஏழை, எளியவர்களின் தேவைகளை நிறைவேற்றாது என்ற விமர்சனம் தொடர்ச்சியாக முன்வைக்கப்படுகிறது. எந்த வங்கியும் அப்படி கண்ணை மூடிக்கொண்டு இருந்துவிட முடியாது. தேவை எங்கெல்லாம் இருக்கிறதோ, அவையெல்லாம் வங்கிகளுக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பு. அதனால், தனியார் வங்கிகள் இன்னும் திறம்பட இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளும்.அப்படியென்றால், அரசாங்கத்தின் கனிவு முகம் எங்கே போகும்? எப்படி அது தன் திட்டங்களை, மானியங்களை ஏழை, எளியவர்களுக்குக் கொண்டு சேர்க்கும்?மாற்று வழிஇருக்கவே இருக்கிறது இந்தியா போஸ்ட். வங்கிகளை விட, இன்னும் விரிவான நெட்வொர்க்கைக் கொண்டது அஞ்சல் துறை. அதில் ஏற்கனவே, ‘கோர் பேங்கிங் சிஸ்டம்’ நிறுவப்பட்டுவிட்டது. மக்களிடம் சென்று சேருவது இன்னும் சுலபம்.பொதுத் துறை வங்கிகள், அரசாங்கத்தின் கனிவு முகமா, ஏவல் ஆளா அல்லது சுயேச்சையான பரிவர்த்தனை அமைப்பா என்பதை அரசாங்கம் தீர்மானிக்க வேண்டும்.கனிவு முகம் தான் என்றால், மோசடிகள் தொடரவே செய்யும். மீண்டும் மீண்டும் மக்களின் வரிப்பணம் வீணாகவே செய்யும். இதனால் கிடைக்கும் புகழை விட, அவப்பெயரே அதிகம். அதை, மத்திய அரசு அனுமதிக்கலாகாது.
–ஆர்.வெங்கடேஷ் பத்திரிகையாளர்
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|