பதிவு செய்த நாள்
08 மார்2018
00:27

புதுடில்லி:நாட்டின் பொருளாதார வளர்ச்சி, பரவலாகி வரும் நிதிச் சேவைகள், ஜி.எஸ்.டி., உள்ளிட்ட சீர்திருத்த நடவடிக்கைகளின் அடிப்படையில், இந்தியாவின் கடன் தகுதி மதிப்பீட்டை உயர்த்த, அமெரிக்காவின், ‘பிட்ச்’ நிறுவனத்திடம், மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.
தர நிர்ணய நிறுவனமான, ‘பிட்ச்’ உலக நாடுகளின் கடன் தகுதியை மதிப்பிட்டு, அதற்கான குறியீட்டை வழங்குகிறது. சர்வதேச அளவில், முதலீடுகள் தொடர்பாக முடிவெடுக்க, இந்த குறியீடு உதவுகிறது.இதன்படி, ‘பிட்ச்’ நிறுவனம், 2006ல், இந்தியாவுக்கு, பி.பி.பி., என்ற குறியீட்டை வழங்கியது. இது, மிகக் குறைந்த முதலீட்டிற்கான குறியீடு என்ற போதிலும், ஸ்திரத்தன்மையை குறிக்கிறது.
ஆலோசனை
‘இந்த குறியீட்டை உயர்த்த வேண்டும்’ என, இந்தியா வலியுறுத்தி உள்ளது.இது தொடர்பாக, டில்லியில் நேற்று, ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், ‘பிட்ச்’ தர நிர்ணய பிரிவு இயக்குனர், தாமஸ் ரூக்மாக்கர், மத்திய பொருளாதார விவகாரங்கள் துறை செயலர், சுபாஷ் சந்திர கர்க், தலைமை பொருளாதார ஆலோசகர், அரவிந்த் சுப்ரமணியன், முதன்மை பொருளாதார ஆலோசகர், சஞ்சீவ் சன்யால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்திற்கு பின், மத்திய நிதியமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது:இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, மத்திய அரசின் சீர்திருத்தங்கள் ஆகியவை, தாமஸ் ரூக்மாக்கருடன் பகிர்ந்து கொள்ளப்பட்டன.அவர், ஜி.எஸ்.டி., செயல்பாடுகளில் உள்ள குறைபாடுகள், வங்கி மோசடி உள்ளிட்டவை குறித்து, கேள்வி எழுப்பினார்.
அதற்கு, ஜி.எஸ்.டி., நடைமுறைகளில், தற்போது ஏற்பட்டுள்ள ஸ்திரத்தன்மை குறித்தும், ‘இ – வே பில்’ மற்றும் விலைப்பட்டியல் ஒப்பீட்டு நடைமுறைகள் அமலானால், வருவாய், அடுத்த, 7 –- 8 மாதங்களில் உயரும் என, தெரிவிக்கப்பட்டது.
வருவாய்
நடப்பு நிதியாண்டில், ஜி.எஸ்.டி., மூலம், 11 மாத வருவாய் மட்டுமே கிடைக்கும் என்ற போதிலும், நிதிப் பற்றாக்குறையை, 3.5 சதவீதமாக கட்டுப்படுத்த எடுத்த முயற்சிகள் குறித்தும், ஜி.எஸ்.டி.,யால், வரி செலுத்துவோர் எண்ணிக்கை பெருகி இருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டது.வங்கி மோசடிகள் காரணமாக, பொதுத் துறை வங்கிகளை, தனியார் மயமாக்கும் திட்டம் எதுவும், தற்போது இல்லை என, தெரிவிக்கப்பட்டது.
நிதி ஒதுக்கீடுகளை குறைத்து, சிக்கனத்தை கடைபிடித்தால், அது, பணவீக்க உயர்வுக்கு வழிவகுக்கும். இதை தவிர்க்க, நிதி ஒழுங்குமுறை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.நிதி பொறுப்பு மற்றும் பட்ஜெட் நிர்வாக சட்டத்திருத்த மசோதா, நடப்பு, பார்லி., கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட உள்ளது.
இது, வரும் நிதியாண்டில், நிதிப் பற்றாக்குறையை, 3.3 சதவீதம்; 2019 – -20ல், 3.1 சதவீதம்; 2020 – -21ல், 3 சதவீதமாக குறைக்க உதவும் என, தாமஸ் ரூக்மாக்கருக்கு விளக்கப்பட்டது. இந்த புள்ளி விபரங்களின்படி, இந்தியாவின் தரக் குறியீடு உயர்த்தப்படுமா என்பது, விரைவில் தெரியவரும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|