பதிவு செய்த நாள்
09 மார்2018
01:44

புதுடில்லி : சிறிய கார்கள், இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றுக்கான, மூன்றாம் நபர் காப்பீட்டு பாலிசியின் பிரீமியத்தை, காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையமான, 'இரிடா' குறைத்து உள்ளது.
இந்த ஆணையம், ஏப்ரலில் துவங்கும், 2018 --19ம் நிதியாண்டிற்கு, பொது காப்பீட்டு நிறுவனங்களின், வாகன மூன்றாம் நபர் காப்பீட்டு பாலிசிக்கான பிரீமியத் தொகையை நிர்ணயித்து உள்ளது.
இது தொடர்பான வரைவறிக்கை, 'இரிடா' வலைதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. பொதுமக்கள், வாகன மூன்றாம் நபர் காப்பீட்டு பிரீமியம் தொடர்பான, இந்த வரைவறிக்கை குறித்து, 22க்குள், தங்கள் கருத்துக்களை பதிவிடலாம் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. இக்கருத்துக்களை பரிசீலித்து, அதன்படி செய்யப்படும் மாற்றங்களுடன், புதிய பிரீமியம் நடைமுறைக்கு வரும்.வரைவறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
ஏப்., 1 முதல், 'இ - ரிக் ஷா' எனப்படும், மின் ஆட்டோ ரிக் ஷாக்களுக்கு, மூன்றாம் நபர் காப்பீட்டிற்கான பிரீமியம், 1,440 ரூபாயில் இருந்து, 1,685 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. இன்ஜின் திறன், 1,000 'சிசி'க்கு குறைவான, சிறிய கார்களுக்கான காப்பீட்டு பிரீமியம், 2,055 ரூபாயில் இருந்து, 1,850 ரூபாயாக குறைக்கப்பட்டு உள்ளது.
தற்போது, 1,000 'சிசி' இன்ஜின் திறனுக்கு மேற்பட்ட கார்களுக்கான பிரீமியத்தில், மாற்றம் ஏதுமில்லை. இருசக்கர வாகனங்களில், 75 'சிசி'க்கு குறைவான திறன் உள்ளவற்றுக்கு, பிரீமியம், 569 ரூபாயில் இருந்து, 427 ரூபாயாக குறைக்கப்பட்டு உள்ளது. 75 - -150 'சிசி' திறன் வரையிலான,சாதாரண இருசக்கர வாகனங்களின் பிரீமியம் மாற்றமின்றி நீடிக்கும்.
அதே சமயம், 350 'சிசி'க்கு மேற்பட்ட, 'சூப்பர் பைக்' வாகனங்களுக்கு, பிரீமியம், இரு மடங்கு உயர்த்தப்பட்டு, 2,323 ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாற்பது டன்னுக்கு மேற்பட்ட சரக்குகளை கையாளும் வர்த்தக வாகனங்களுக்கு, மூன்றாம் நபர் காப்பீட்டு பிரீமியம், 33,024 ரூபாயில் இருந்து, 39,299 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. பழங்கால கார்களுக்கு,சான்றிதழ் அடிப்படையில்,பிரீமியத்தில், 50 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படும்.
பயணியரை ஏற்றிச் செல்லும், சில வகை, நான்கு சக்கர வாகனங்களுக்கான பிரீமியத்தை குறைப்பது குறித்து பரிசீலிக்கப்படுகிறது. வேளாண் துறையில் பயன்படும், 6 எச்.பி., டிராக்டர்களுக்கு, காப்பீட்டு பிரீமியம், 653 ரூபாயில் இருந்து, 816 ரூபாயாக உயர்த்த திட்டமிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|