பதிவு செய்த நாள்
19 மார்2018
08:05

பொருளாதார குறியீடுகள், எதிர்கால வளர்ச்சி சார்ந்து நமக்குச் சொல்லும் செய்தி என்ன; குறியீடுகள் தொடர்ந்து நன்றாக இருந்தும், சந்தையில் பிரதிபலிப்பு ஏற்படாதது ஏன்; வருங்கால பொருளாதார எதிர்பார்ப்புகளை, பங்குச் சந்தை எப்படி உள்வாங்கிக் கொள்கிறது; வரும் காலங்களில் சந்தைக்கும், பொருளாதாரத்திற்கும் இடைவெளி ஏற்படுமா; அப்படி ஏற்படுமாயின் எப்படி எதிர்கொள்வது?
அடிப்படையில், இந்திய பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பி வருகிறது என்பதை நாம் உறுதியாக நம்பலாம். பொருளாதார குறியீடுகள் அதை தெளிவாக அறிவுறுத்துகின்றன.பொருளாதார வளர்ச்சி விகிதம், தொழில் உற்பத்தி வளர்ச்சி விகிதம், விவசாய உற்பத்தி வளர்ச்சி விகிதம், ஜி.எஸ்.டி., வரி வளர்ச்சி விகிதம், ஏற்றுமதி வளர்ச்சி விகிதம் என, பெருவாரியான குறியீடுகள், சாதகமான பொருளாதார சூழல் உருவாகுவதை உறுதி செய்கின்றன.
குழப்பம்:
குறியீடுகள் சாதகமாக இருந்தும், சந்தை காணும் கலக்கமும், தயக்கமும் முதலீட்டாளர்களை குழப்பியுள்ளன. ஆனால், பல காலமாக சந்தையில் உள்ளோருக்கு, தற்போதைய சந்தை சூழல் புதிதல்ல. சந்தைக்கு என, ஒரு தெளிவான போக்கும், நடப்பும் எப்போதுமே உண்டு. சந்தை எதிர்பார்ப்பின் அடிப்படையில் இயங்கும் மனப்போக்கு கொண்டது.வருங்காலம் பற்றி பெரும் உற்சாகமும், அதிக எதிர்பார்ப்பும் ஏற்கனவே இருந்ததை முதலில் உணர வேண்டும். சந்தை இந்த எதிர்பார்ப்பையும் உற்சாகத்தையும் நன்றாகவே பிரதிபலித்ததை நாம் அறிவோம். கடந்த ஆண்டு, பங்குகளின் மதிப்பு கண்ட பெரும் உயர்வு, சந்தையின் எதிர்பார்ப்புகளை பிரதிபலித்தன.
சந்தையின் குறியீடான, நிப்டியில், நிதி நிறுவனங்களின் பங்கு, 35 சதவீதத்தை கடந்துள்ளது. இது முதலீட்டாளர்களின் அமோக பொருளாதார நம்பிக்கையின் வெளிப்பாடே ஆகும். எதிர்கால நம்பிக்கையை முன்பே வெளிக்காட்டும் சந்தை, எதிர்கால அச்சங்களையும் அதே வழியில் தான் வெளிப்படுத்தும். அந்த அச்சம் தோன்றுவது சூழல் சார்ந்தது.சந்தையின் ஒரு தரப்பு எடுக்கும் தீர்க்கமான பங்கு விற்பனை முடிவுகள், மற்றவர்களின் மனதில் அச்சத்தை தோற்றுவிக்கும். இது நிதானமாக துவங்கி வேகம் பிடிக்கும் போக்கு கொண்டது.
தொடர்ந்து வரும் நிகழ்வுகள் சார்ந்து, முதலீட்டாளர்களின் அச்சம் வளர்ந்துவிடக் கூடும். இரு வகையான நிகழ்வுகளை நாம் தெளிவாக எதிர்பார்க்கலாம். ஒன்று, உள்நாட்டு அரசியல் சூழல் சார்ந்த அச்சங்கள். இன்னொன்று, அமெரிக்க சந்தையில் ஏற்படக்கூடிய வீழ்ச்சி. ஆக, நம் பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பினாலும், சந்தை மாற்றுப் பாதையில் போகலாம். இதனால், பொருளாதாரத்திற்கும், சந்தைக்கும் இடைவெளி ஏற்படலாம். அந்த இடைவெளி, உள்நாட்டு அரசியல் சூழல் தெளிவாகும் வரை தொடரும்.
எதிர்கால வளர்ச்சி:
இந்த கால இடைவெளி, நமக்கு முதலீட்டு வாய்ப்புகளை ஏற்படுத்தும். அந்த வாய்ப்புக்கு நம்மை இப்போதே தயார்படுத்திக் கொள்ள வேண்டும். கடந்த காலத்தில் வெற்றியடைந்த முதலீடுகளை, வருங்கால சூழலோடு பொருத்திப் பார்த்து, தகுந்த மாற்றங்களை அந்த கால இடைவெளியில் செய்ய வேண்டும். எதிர்கால வளர்ச்சி சூழலுக்கு ஏற்ப, முதலீட்டு திட்டங்கள் மற்றும் தேர்வுகள் அமைய வேண்டும். பொருளாதார நன்மைகள் மீண்டும் சந்தையில் பிரதிபலிக்கும் போது, பயனடையும் பங்குகளை நாம் சொந்தம் கொள்ள வேண்டும். நம் சந்தைகள் தொடர்ந்து வளரும் என்பது உறுதி என்றாலும், இடைக்கால தடுமாற்றங்களை சந்திக்கும். அதற்கு நாம் தயாராக வேண்டிய நேரம் இது.
-ஷ்யாம் சேகர், முதலீட்டு ஆலோசகர்
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|