பதிவு செய்த நாள்
19 மார்2018
08:07

பஞ்சாப் நேஷனல் பேங்கில் மோசடி நடந்தவுடன், பல விமர்சனங்கள் எழுந்தன. அதில் ஒன்று, மத்திய ரிசர்வ் வங்கி இதை முன்னதாகவே உணர்ந்து, தடுக்கத் தவறியது ஏன் என்ற கேள்வி தான்.
ஆர்.பி.ஐ.,யின் கவர்னரான உர்ஜித் படேல், இதுபற்றி வாயே திறக்காமல் இருந்தார். கடைசியாக அவர் வாய் திறந்து பேசியது, மேலும் விமர்சனங்களுக்கே இட்டுச் சென்றுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பின், ஆர்.பி.ஐ., கவர்னராக நியமனம் செய்யப்பட்டவர் உர்ஜித் படேல். பொதுவாக அமைதி யானவர்; ஓராண்டில் அதிகபட்சம் ஐந்து, ஆறு முறை பேசினாலே அதிகம். அத்தகைய மனிதர், கடந்த வாரம் வாயைத் திறந்தார்.
அதுவும் அவர் மீது வைக்கப்பட்ட விமர்சனத்துக்குப் பதில் அளிப்பதற்காக. ஊடகங்களும் நிதித்துறை வல்லுனர்களும் தொடர்ச்சியாக, ஆர்.பி.ஐ., மீது விமர்சனம் வைத்துக்கொண்டே இருந்தனர். பொதுத்துறை வங்கிகளில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி, பல மோசடிகள் அரங்கேறின. சமீபத்தில், நிரவ் மோடி, 14 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஏமாற்றிவிட்டு, வெளிநாடு போய்விட்டார். பல ஆண்டுகளாக, இத்தகைய ஏமாற்றுக்காரர்கள், நாட்டையும் சட்டத்தையும் ஏமாற்றிவிட்டுத் தப்பிவிடும் புள்ளிவிபரம் நம்மை எரிச்சலடைய வைக்கின்றன.
இந்நிலையில், நிதி அமைச்சர் அருண் ஜெட்லியும், ஆர்.பி.ஐ., மீது பாய்ந்தார். அவர்களுடைய கண்காணிப்பு குறையுடையதாக இருப்பதாகத் தெரிவித்தார்.இதுவரை அனைத்து விமர்சனங்களுக்கும் பேசாதிருந்த உர்ஜித், உடனே வெகுண்டார். தங்கள் பக்கம் இருக்கும் நியாயங்களை, சமீபத்தில் ஒரு கல்லுாரி நிகழ்ச்சியில் அடுக்கடுக்காக எடுத்து வைத்தார்.
விளக்கம்:
அதாவது, ஆர்.பி.ஐ.,யால் தனியார் துறை வங்கிகளைக் கட்டுப்படுத்த முடியும்; ஆனால், பொதுத் துறை வங்கிகளை கட்டுப்படுத்த முடியாது என்றார் உர்ஜித். அதற்கு அவர் சொன்ன காரணம், பொதுத் துறை வங்கிகள் முழுமையாக, ஆர்.பி.ஐ.,யின் கட்டுப்பாட்டில் இல்லை. அந்த வங்கிகள் மத்திய நிதி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன. இரட்டைத் தலைமை உள்ளதால், தங்களால் ஒன்றுமே செய்ய முடியவில்லை என்றார்.
மேலும், ஆர்.பி.ஐ.,யால் பொதுத் துறை வங்கிகளின் இயக்குனர்களையோ நிர்வாகத்தையோ அகற்ற முடியாது; அந்த நிர்வாகக் குழுக்களின் முடிவுகளை விலக்கிவைத்துவிட்டு மேலே செயல்பட முடியாது; அதன் தலைவரையோ, நிர்வாக இயக்குனரையோ பதவி நீக்கம் செய்ய முடியாது.
வேறு வங்கிகளோடு இணைக்க முடியாது; அந்த வங்கிகள் பல நடவடிக்கைகளில் ஈடுபட, ஆர்.பி.ஐ., அனுமதி தேவையில்லை, அதனால், பல வங்கிச் செயல்பாடுகளின் அனுமதியை ரத்துசெய்யவும் முடியாது; அதே போல், அந்த வங்கிகளை திவாலானதாக அறிவித்து நடவடிக்கை மேற்கொள்ளவும் முடியாது என, பெரிய பட்டியலே வாசித்தார் உர்ஜித்.
அதாவது, என்னுடைய கட்டுப்பாட்டுக்குள் பொதுத் துறை நிறுவனங்கள் முழுமையாக வராதபோது, என்னை அதன் தவறுகளுக்கெல்லாம் ஏன் பொறுப்பேற்கச் சொல்கிறீர்கள் என, மறைமுகமாகக் கேட்கிறார். மேலும், இத்தகைய அதிகாரங்கள் அத்தனையையும் எனக்குக் கொடுங்கள், நான் எல்லாவற்றையும் சீர்செய்து காட்டுகிறேன் என்பது தான் அவரது கோரிக்கை. வெளிப்பார்வைக்கு இந்தக் கோரிக்கை நியாயமாகத் தெரியலாம். இதில் பல பிரச்னைகள் உள்ளன.
பிரச்னை:
ஒரே இடத்தில் அதிகாரம் குவிவது என்றுமே நல்லதல்ல. இரட்டைத் தலைமை என்பது இன்று நேற்றல்ல... ஆர்.பி.ஐ., உதயமான காலத்தில் இருந்து இருப்பது தானே. நிதி நிர்வாகத்தை ஆர்.பி.ஐ.,யும், மக்களுடைய தேவைகளை உணர்ந்து அதற்கேற்ப திட்டங்களை வகுப்பதற்கு அரசின் நிதித் துறையும் இருப்பது இந்திய ஜனநாயகத்தின் வலுவான அம்சங்களில் ஒன்று. இத்தனை அதிகாரங்களும் கொடுத்தால் தான் நடவடிக்கை எடுப்பேன் என்று சொல்வதும் ஏற்புடையது அல்ல. வங்கித்துறையிலேயே உச்சபட்ச அதிகாரம் கொண்ட பதவி, ஆர்.பி.ஐ., கவர்னர் பதவி. மேலும், ஆர்.பி.ஐ.,க்குப் போதுமான சுயேச்சைத் தன்மையும் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு உள்ள அதிகாரங்களை முறையாகப் பயன்படுத்தினீர்களா என்ற கேள்விக்கு உர்ஜித் தரும் பதில்கள் ஏற்கத்தக்கதல்ல.
சரியாகச் சொல்வதென்றால், தன் அதிகாரங்களுக்கு உட்பட்டு, இத்தனை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டேன் என்பதைப் பட்டியலிட்டு, தன் தரப்பு நியாயத்தை அவர் நிறுவியிருந்தால், அது ஏற்கத்தக்கதாக இருந்திருக்கும். அதைவிடுத்து, தனக்கு அதிகாரம் போதாது என பேசுவது உண்மையில் வேடிக்கை. அதுவும் இத்தனை மாதங்களாகப் பேசாதவர், தன் மீது ஒரு விமர்சனம் என்றவுடன் பேசுகிறார். பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போது, மக்கள் அனுபவிக்கும் துன்பங்களைப் பார்த்து, அதை குறைப்பதற்கான விளக்கங்களையோ, செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளையோ பற்றி ஒரு வார்த்தை பேசாதவர். அப்போது, நிதித்துறைச் செயலர் சக்திகாந்த தாஸ் தான் ஊடகங்களின் அத்தனை கேள்விகளுக்கும் முகம் கொடுத்தவர்; உர்ஜித் அல்ல.
போதுமான அதிகாரம்:
உர்ஜித் படேலின் கருத்துகளுக்கு பதில் சொல்லும் விதமாக, முன்னாள் ஆர்.பி.ஐ., தலைவர் சி.ரங்கராஜன் தெரிவித்திருப்பது கவனத்துக்குரியது. ‘‘வங்கிகளைக் கண்காணிப்பதற்கு, ஆர்.பி.ஐ.,க்குப் போதிய அதிகாரம் உள்ளது. ‘‘ஆனால், பொதுத் துறை நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு மத்திய அரசோடு கலந்தாலோசிப்பதும் அவசியம்” என்ற அவரது கருத்து வலிமையானது.
ஆர்.பி.ஐ.,யும் நிதித் துறையும் எதிரும் புதிருமாக இல்லாமல் இணக்கமாக கைகோத்து நடப்பதே நாட்டுக்கு நல்லது. அல்லது இருவரும் தத்தமது மரியாதைக்குரிய எல்லைகளில் நின்றுகொண்டு, அவரவர் பணிகளைச் செவ்வனே செய்வதே ஏற்கத்தக்கது.இன்னொரு விஷயத்தையும் உர்ஜித் படேல் கவனிக்கத் தவறிவிட்டார். தன்னைத் தற்காத்துக் கொள்வதற்காக பேசியவர், தன் பேச்சினால், பொதுமக்கள் மத்தியில் பொதுத் துறை வங்கிகளைப் பற்றி இருக்கும் அபிப்பிராயங்கள் முற்றிலும் சரிந்துவிடும் என்பதை ஏன் மறந்தாரோ தெரியவில்லை.
பொதுத் துறை வங்கிகள் இவரது கட்டுப்பாட்டுக்குள் இல்லை என்றால், யாருடைய கட்டுப்பாட்டுக்குள் அவை வருகின்றன; ஏதேனும் ஒன்று நடந்தால், அவற்றில் சேமிப்புகளை வைத்துள்ள கோடானுகோடி மக்களுக்கு யார் ஜவாப்தாரி?உண்மையில், உர்ஜித் படேலின் பேச்சு, தன் பொறுப்புகளைத் தட்டிக்கழிப்பதாகவே இருக்கிறது. எத்தனை மேடுபள்ளங்கள் இருந்தாலும், ஸ்டியரிங்கை வலுவாகப் பிடித்து, வங்கித் துறை எனும் வாகனத்தைச் சீராகச் செலுத்தவேண்டியதே, ஆர்.பி.ஐ., கவர்னரின் வேலை. அதிலிருந்து பின்வாங்குவது, ஓட்டுனருக்கு மட்டுமல்ல, வாகனத்துக்குமே கேடு விளைவிக்கும்.
-ஆர்.வெங்கடேஷ், பத்திரிகையாளர்
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|