பதிவு செய்த நாள்
02 ஏப்2018
00:35

புதிய நிதியாண்டு பிறக்கும்போது, அது பலவிதமான புதிய தேடல்களுக்கும்,
மாற்றங்களுக்கும் ஆரம்பமாக விளங்குகிறது.
நிறுவனங்கள், தங்கள் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு என்ன செய்ய வேண்டுமோ, அதைச் செய்ய முற்படுவார்கள். அரசுகள், வளர்ச்சிக்குத் தேவையான திட்டங்களையும், முடிவுகளையும் விரைவாகச் செயல்படுத்தும்.ஆட்சியாளர்கள், புதிய ஆண்டின் பட்ஜட் நிதியை, சரியாக உபயோகிக்க முற்படுவார்கள். அரசு திட்டங்கள், பொருளாதாரத்திற்குத் தேவையான வளர்ச்சி வாய்ப்புக்களை பெருக்கும்.
வர்த்தகம் கொழிக்கும்
நிறுவன வளர்ச்சி சார்ந்த புதிய எதிர்பார்ப்புகள், சந்தையில் உருவெடுக்கும். முக்கியமாக, அடுத்த ஆண்டின் வளர்ச்சி மற்றும், லாபப் பெருக்கு சார்ந்த புதிய கணிப்புகள் உருவாகும். இந்த கணிப்புகள் சந்தையில் பிரதிபலிக்கத் துவங்கும்.
லாப வளர்ச்சி சார்ந்த கணிப்புகள் கூடும்போது, சந்தை அவற்றை உற்சாகமாக வரவேற்கும். ஒருவித பாசிட்டிவ் சென்டிமென்ட் சந்தையில் புழங்கும். அதனால், முதலீட்டாளர்கள் மேலும் உற்சாகமாக பங்குகளை வாங்குவார்கள். அதிக விலை கொடுத்து வாங்கத் தயங்க மாட்டார்கள். சந்தையில் வர்த்தகம் கொழிக்கும். அன்றாடம் பங்கு வர்த்தகம் செய்வோரும் லாபம் அடைவார்கள்.
‘இன்று ஒரு பங்கை வாங்கினால் அது ஏறும்’ என்ற நம்பிக்கை, பெருவாரியானவர்கள் மனதில் தோன்றும். நற்செய்திகள் தொடர்ச்சியாக தோன்றி தழைக்கும்.அதேசமயம், சந்தையின் நிறுவன எதிர்பார்ப்புகள் குறையும்போது, ஏமாற்றங்கள் பெருகக்கூடும். எதிர்காலம் பற்றிய சந்தேகங்கள் உருவாகத் துவங்கும். இந்த சந்தேகங்கள், அச்சங்களாக உருமாறும்.
அப்போது, நிறுவனம் சார்ந்த நம்பிக்கை குறைந்து, அதன் நீட்சியாக, வளர்ச்சி கணிப்புகள் குறைத்து அளவிடப்படும். அந்த கணிப்புகள் குறையும்போது, சந்தையின் ஏமாற்றத்தை எங்கேயும் மறைக்க முடியாது. அந்த ஏமாற்றம் பங்குகளின் விலையில் மட்டுமே பிரதிபலிக்கும்.
தொடர்ந்து, ஆண்டின் பங்கு வர்த்தகம் நிறுவன வளர்ச்சி சார்ந்த கவலைகளை பிரதிபலித்து, பங்குகளின் மீது அழுத்தம் கொடுத்தவண்ணம் அமையும்.2018 –19 நிதியாண்டு, பொருளாதார வளர்ச்சிக்கு சாதகமான ஆண்டாக அமையும் என்றே எனக்குத் தோன்றினாலும், சந்தையில் எதிர்பார்ப்பு சூழல் அதற்கு சாதகமாக இல்லை.
தடுமாற்றம்
அடிப்படையில், சந்தை சென்ற ஆண்டு வளர்த்துக்கொண்டு, தக்கவைத்துள்ள நிறுவன எதிர்பார்ப்புகளே இந்த சிக்கலுக்கு காரணம். இந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியாமல், நிறுவனங்கள் தடுமாறத் துவங்கிவிட்டன.அதிக எதிர்பார்ப்புகள் எப்போதுமே ஏமாற்றத்தின் விதையாக உருவெடுக்கும் என்பது அறிந்த ஒன்று. ஆனாலும், சந்தை, ஒவ்வொரு காலகட்டத்திலும், தன் எதிர்பார்ப்புகளை கட்டவிழ்த்து ஓடவிடுகிறது.
அத்துடன் சேர்ந்து சந்தையும் கட்டுக்கோப்பிழந்து உடன் ஓடுகிறது. சிறிதுகாலம் கடந்ததும், சந்தையின் ஓட்ட வேகம், எதிர்பார்ப்புகளை எல்லாம் வெகுவாக கடந்து விடுகிறது. இதுவே கடந்த ஆண்டில் நடந்தது.இந்த நடப்பின் விளைவு, பங்கு மதிப்பீடுகளின் அபரிமிதமான வளர்ச்சி. ஆனால், இந்த ஆண்டில், முதலீட்டாளர்கள் எதிர்கொள்ளப் போகும் சவால்களுக்கான விதை, கடந்த ஆண்டின் பங்கு ஓட்டத்தில் விதைக்கப்பட்டு விட்டது.
இப்போது, சந்தையில் எழுந்துள்ள அச்சங்கள், தொடர்ந்து வளரக் கூடும்.நிறுவன எதிர்பார்ப்புகள் அடுத்த சில மாதங்களில் தெளிவும் நம்பிக்கையும் தந்தாலொழிய, சந்தையின் அச்சங்கள் பெருகுவது நிற்காது. அன்னியமுதலீட்டு நிறுவனங்கள், இந்தச் சூழலை முன்கூட்டியே கணித்துவிட்டன.
உள்நாட்டு முதலீட்டாளர்களின் தேவைக்கு அதிகமான உற்சாக வெளிப்பாடு, தொடர்ந்து நிலைக்குமா என்பது ஐயமே. அதுவே சந்தையின் அச்சமும் கூட.
ஷ்யாம் சேகர், முதலீட்டு ஆலோசகர் பங்குச்சந்தை
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|