பதிவு செய்த நாள்
06 ஏப்2018
02:50
புதுடில்லி:கடந்த மார்ச்சில், சேவைகள் துறை சிறப்பான வளர்ச்சி கண்டுள்ளது; ஏழு ஆண்டுகள் இல்லாத வகையில், வேலைவாய்ப்பு வளர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.
இது குறித்து, நிக்கி – மார்க்கிட் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை:நாட்டின் சேவைகள் துறை வளர்ச்சியை குறிக்கும், ‘என்.எம்.எஸ்.பி.எம்.ஐ.,’ குறியீடு, மார்ச்சில், 50.3 புள்ளிகளாக உயர்ந்துள்ளது.இது, பிப்ரவரியில், 47.8 புள்ளிகள் என்ற அளவில், பின்னடைவை கண்டிருந்தது. ஜனவரியில், சேவைகள் துறை குறியீடு, 51.7 புள்ளிகளாக இருந்தது. இக்குறியீடு, 50 புள்ளிகளுக்கு மேல் இருந்தால், அது வளர்ச்சியை குறிக்கும்.
கடந்த நிதியாண்டின், ஜனவரி – மார்ச் வரையிலான நான்காவது காலாண்டில், சேவைகள் துறையின் வளர்ச்சி, ஸ்திரமாக இருந்தது.தேவைகள் அதிகரித்ததால், நிறுவனங்களுக்கு புதிய, ‘ஆர்டர்’கள் குவிந்தன. இதையடுத்து, அவை, அதிக அளவில் பணியாளர்களை நியமித்தன. ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, 2011 ஜூன் மாதத்திற்கு பின், இந்தாண்டு மார்ச்சில் தான், சேவை நிறுவனங்களின் வேலைவாய்ப்பு வளர்ச்சி விகிதம், மிகவும் அதிகரித்துள்ளது.
மத்திய அரசு மேற்கொண்டு வரும் பொருளாதார சீர்திருத்தங்களால், வேலைவாய்ப்புகள் பெருகி வருகின்றன.அதேசமயம், சேவை நிறுவனங்களின் மூலப்பொருட்கள் செலவினம், தொடர்ந்து அதிகரித்து வருகிறது.சேவை நிறுவனங்களுக்கு, 2017, செப்டம்பர் முதல், புதிய ஆர்டர்கள் அதிகம் கிடைத்து வருகின்றன. அதனால், அவை, இந்தாண்டு ஜனவரி வரை, அதிக அளவில் ஆட்களை பணிக்கு தேர்வு செய்தன.
பிப்ரவரியில், இத்துறையில் தொய்வு ஏற்பட்டதால், நிறுவனங்களின் பணியாளர் நியமனம் குறைந்தது. இதன் விளைவாக, வேலைவாய்ப்பு வளர்ச்சியை குறிக்கும் குறியீடும் சரிவடைந்தது.இந்நிலையில், மீண்டும் மார்ச்சில், சேவைகள் துறை உற்பத்தியில் வளர்ச்சி கண்டுள்ளது; வேலைவாய்ப்பும் அதிகரித்துள்ளது.
சேவை நிறுவனங்களின் பணியாளர் நியமனம், சராசரிக்கும் அதிகமாக உள்ளதால், வரும் மாதங்களில், இத்துறை வளர்ச்சியில், மேலும் முன்னேற்றம் இருக்கும் என, தெரிகிறது.இந்தாண்டு பிப்ரவரியில், தயாரிப்பு மற்றும் சேவைகள் துறை வளர்ச்சியை குறிக்கும், நிக்கி இந்தியா காம்போசிட், பி.எம்.ஐ.ஓ.ஐ., குறியீடு, 49.7 புள்ளிகளாக பின்னடைவை கண்டிருந்தது. இது, மார்ச்சில், 50.8 புள்ளிகளாக வளர்ச்சி கண்டுள்ளது.மார்ச்சில், சேவைகள் துறை, பின்னடைவில் இருந்து வளர்ச்சி நோக்கி முன்னேறி இருப்பது, நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி பரவலாகி வருவதை காட்டுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
எவை எவை?
இந்திய சேவைகள் துறையில், தகவல் தொழில்நுட்பம், வியாபாரம், ஓட்டல், சுற்றுலா, போக்குவரத்து, நிதி, காப்பீடு, ரியல் எஸ்டேட், வர்த்தகம், கட்டுமானம் உள்ளிட்ட துறைகள் சார்ந்த சேவைகள் அடங்கியுள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|