பதிவு செய்த நாள்
16 ஏப்2018
00:23

பெரும்பாலானோர் விடுமுறை பயணங்களை தங்களது நிதி திட்டமிடலில் சேர்த்துக்கொள்வதில்லை. ஆனால், சுற்றுலா பயணங்களுக்கும் சேர்த்தே திட்டமிட வேண்டும். அதாவது, பயணங்களுக்கு என்று முன்கூட்டியே திட்டமிட்டு சேமிக்க வேண்டும். பயணத்திற்காக என கடன்படுவதை தவிர்க்கலாம் என்பதோடு, விரும்பிய பட்ஜெட்டில் சுற்றுலாவை அனுபவிக்கலாம். இதற்கான வழிகள்:
பயண நிதி: சுற்றுலா பயணம் மேற்கொள்ள என தனியே நிதியை ஏற்படுத்திக் கொள்வதில் பலவித அனுகூலங்கள் உள்ளன. கைவசம் போதிய நிதி இருந்தால், விடுமுறை கால சலுகை திட்டங்கள் வெளியாகும் போது, பதிவு செய்து பலன் பெறலாம். கடன் வாங்கும் அவசியமோ, கையில் உள்ள தொகை போதுமானதாக இருக்குமோ என்ற சந்தேகமே உண்டாக வாய்ப்பில்லை.
எப்படி சேமிப்பது: அடுத்த ஆண்டு அல்லது இரண்டு ஆண்டுகளுக்குப் பின் சுற்றுலா செல்ல, இப்போதே சேமிக்கத் துவங்க வேண்டும். குறுகிய கால சுற்றுலா எனில், சில மாதங்களுக்கு முன்பேனும் சேமிக்க வேண்டும். சுற்றுலா பயணத்திற்கான பட்ஜெட்டிற்கு ஏற்ப, மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை சேமித்து வர வேண்டும். இந்த தொகையை சேமிப்பு கணக்கிலும் வைத்திருக்கலாம் அல்லது தொடர் வைப்பு நிதி போன்றவற்றிலும் சேமிக்கலாம்.
எவ்வளவு சேமிப்பது: சுற்றுலா நிதியாக எவ்வளவு தேவை என்பது, ஒருவர் தேர்வு செய்யும் இடம் மற்றும் விடுமுறை கால அளவை பொறுத்து அமையும். அதற்கேற்ப மாதந்தோறும் ஒரு தொகையை சேமிக்க வேண்டும். கைவசம் பெரிய தொகை இருந்தால் அதை வைப்பு நிதி அல்லது ‘லிக்விட் பண்ட்’ திட்டங்களில் போட்டு வைக்கலாம். இவற்றின் மீதான பலன் கூடுதல் நிதியாக அமையும்.
செலவு கட்டுப்பாடு: சுற்றுலாவுக்கு என தனியே நிதி ஒதுக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கு, மாதந்தோறும் இதற்கென ஒரு தொகையை சேமிப்பது கஷ்டமாக இருக்கலாம். எனவே, மாதச் செலவுகளை கண்காணித்து தேவையில்லாத செலவுகளை தவிர்ப்பதன் மூலம், அந்த தொகையை சுற்றுலாவுக்காக சேமிக்கலாம். இதன் மூலம் வீட்டு பட்ஜெட்டையும் மேம்படுத்திக் கொள்ளலாம்.
பயண அனுபவம்: சுற்றுலா பயணத்தையும் ஒரு முக்கிய நிதி இலக்காக கொள்ள வேண்டும். விடுமுறை பயணத்தை வெறும் செலவாக மட்டும் பார்க்கக் கூடாது. இவை மனதில் நிற்கும் மிகச் சிறந்த அனுபவங்களாக அமையும். உண்மையில், இத்தகைய அனுபவங்களுக்காக செலவு செய்வதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என, வலியுறுத்தப்படுகிறது. பயண அனுபவம் தரும் புத்துணர்ச்சி, பணி அழுத்தத்தில் இருந்து விடுபட உதவும்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|