பதிவு செய்த நாள்
16 ஏப்2018
00:27

விவசாயம் அழிவுப் பாதையில் செல்கிறதா அல்லது பெரும் மாற்றத்தின் முனையில் இருக்கிறதா?
பொருளாதார மற்றும் முதலீட்டு பார்வையில் இருந்து விடை தேடுவோம் வாருங்கள்.நாடு தழுவிய விவசாய உற்பத்தி குறியீடுகள் ஊக்கமளிக்கும் வகையில் அமைவதை, நாம் தெளிவாக பார்க்கிறோம். விவசாயி தன் பணியை தொடர்ந்து சிறக்கச் செய்வதை உறுதியாக சொல்லலாம்.
அடிப்படையில், விவசாய உற்பத்தி திறன் பெருகி வருகிறது. ஆனால், உற்பத்தி திறன் பெருகும் அளவு, விளைபொருட்களின் சந்தை விரிவடையவோ, அமைப்பு சார்ந்து இயங்கவோ தவறி இருக்கிறது என்பதே உண்மை.இதனால், விலை சரிவுகள் தொடர்ந்து விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. ஆனால், பற்றாக்குறை சூழலில் விலைவாசிகள் உச்சம் தொட்டாலும், அதன் பலன் விவசாயியை அடைவதில்லை.
ஆனால், ஆண்டுக்கு ஆண்டு ஏற்படும் விலை சரிவின் முழு தாக்கத்தையும் விவசாயி சந்திக்க நேர்கிறது.இதற்கு தீர்வாக, மாநில அரசுகள் தொடர்ந்து கடன் தள்ளுபடிகள் அளிக்கின்றன. இது, விவசாயத்திற்கு எந்த நெடுங்கால நன்மையும் ஏற்படுத்தாது என்பதே வருந்தத்தக்க உண்மை.
காய்கறி மற்றும் பருப்பு வகைகள் உற்பத்திக்கு தக்க விலை கொடுக்க சந்தை தொடர்ந்து மறுப்பதற்கு, ஒரு நெடுங்கால தீர்வு ஏற்பட வேண்டும். பதப்படுத்தும் தொழில்கள் நிறுவுதல், ஒப்பந்த உற்பத்தி செய்தல் மற்றும் குளிர் சேமிப்பு வசதிகள் அமைத்தல் ஆகியவை நெடுங்கால தீர்வுகள். நகர சமூகங்கள் தொடர்ந்து விவசாயத்தின் அமைப்புசாரா இயக்கத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, வெறும் நீலிக்கண்ணீர் வடிக்கும் போக்கை முடிவுக்கு கொண்டு வர வேண்டியுள்ளது.
விவசாயத்தை பயிர் வாரியாக அமைப்பு சார்ந்த இயக்கத்திற்கு கொண்டு வருவதே, இதற்கு நெடுங்கால தீர்வு.இதற்கு பல முன்னோடிகள் இருக்கின்றன. பால் உற்பத்தி பெருகினாலும், அது விவசாயிகளுக்கு பலன் தரும் வளர்ச்சியாக அமைந்ததை நாம் அறிவோம், இதேபோல, கரும்பு, பாசுமதி அரிசி மற்றும் பருத்தி சாகுபடியிலும் உற்பத்தி திறன் சார்ந்த பலன்களை தொடர்ந்து நாம் வட மாநிலங்களிலும், குஜராத்திலும் காண்கிறோம்.
விவசாயிகள் இதன் மூலம் பெரும்பயன் அடைந்துள்ளனர் என்பது மறுக்க முடியாதது. ஆனால், அதிகம் உற்பத்தி செய்ததற்கான ஊக்க லாபம் அவர்களை சென்றடையும் பொருளாதார சூழல் ஏற்பட வேண்டும். இதில், அரசு வழிகாட்டுதல் நிச்சயம் பலன் ஏற்படுத்தும். இந்த திசையில் பல மாநில அரசுகள் செல்கின்றன.
மதிப்பு கூட்டலுக்கான பல முதலீடுகளை அரசு தொடர்ந்து உருவாக வழிவகுக்கிறது. அரசின் பங்கு மாற்றத்திற்கு வழி வகுப்பது தான். இதற்கு, இந்த துறை சார்ந்து ஏற்பட்டு இருக்கும் சாதகமான மாற்றங்களே சான்று. அரசு தொடர்ந்து இந்த நகர்வுகளை விரைவுபடுத்த முயற்சிக்க வேண்டும். இடைத்தரகர்களின் பங்கை, விவசாயத்தின் எல்லா தடங்களில் இருந்தும் அகற்ற வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. விதை மற்றும் உர விற்பனை, பயிர் சேவை தொழில்கள், அனைத்து மானியங்களும் நேரடியாக விவசாயிக்கு செலுத்துவது போன்ற அவசர நகர்வுகள் தேவை.
இவற்றை மத்திய – மாநில அரசுகள் தொடர்ந்து செய்ய உள்ளன. அடுத்த ஐந்து ஆண்டுகளில், தொழில்மயம் நோக்கி பயணிக்கப் போகும் விவசாயம், இந்தியாவின் மிக முக்கியவளர்ச்சி இயந்திரமாக அமையும். விவசாய வளர்ச்சி சூழல் நோக்கி நாம் போகிறோம். இதன் முதலீட்டு பலன்கள், பங்குச் சந்தையில் பல வடிவங்களில் ஏற்படும் என்பது உறுதி.
ஷ்யாம் சேகர், முதலீட்டு ஆலோசகர்
பங்குச் சந்தை
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|