பதிவு செய்த நாள்
16 ஏப்2018
00:31

‘ஏர் இந்தியா’ நிறுவன பங்குகளில் பெரும்பகுதியை விற்பனை செய்ய, மத்திய அரசு முடிவெடுத்து, விளம்பரம் கொடுத்துள்ளது. ஆனால், இந்தியாவின் பிரதான விமான சேவை நிறுவனத்தை வாங்குவதற்கு ஆர்வம் காட்டுவதில், பெரும் தயக்கம் நிலவுகிறது.
என்ன பிரச்னை?
ஏர் இந்தியா நிறுவனம், 54 ஆயிரத்து, 400 கோடி ரூபாய் கடனில் இயங்குகிறது. இதை தொடர்ந்து நடத்துவதில் எந்தவித பலனும் இல்லை என்ற முடிவுக்கு வந்த அரசாங்கம், பங்குகளை விற்பனை செய்யத் திட்டமிட்டது.அதன்படி, ஏர் இந்தியாவின், 76 சதவீத பங்குகளையும், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின், 100 சதவீத பங்குகளையும், ஏர் இந்தியா சாட்ஸ் நிறுவனத்தின், 50 சதவீத பங்குகளையும், மொத்தமாக விற்பனை செய்வதற்கு விளம்பரம் கொடுத்துள்ளது.
இதை வாங்க விரும்புபவர்கள் முதலில் பதிவு செய்து, மே, 14க்குள் தங்கள் விருப்பத்தை தெரிவிக்க வேண்டும். அதிலிருந்து சிறப்பான ஒரு நிறுவனத்தை தேர்வு செய்து, அதனிடம், ஏர் இந்தியா பங்குகள், செப்டம்பருக்குள் விற்பனை செய்யப்படும்.
ஏர் இந்தியா என்றவுடனேயே, எல்லாரும் வியப்பது உறுதி. ஆனால், தொழில் என்று வந்துவிட்டால், தற்போதைய அதன் லாப, நஷ்டம் என்ன? வாங்கினால் தொடர்ந்து நடத்த முடியுமா? எவ்வளவு கடன்களைச் சுமக்க வேண்டும்? கண்ணுக்கெட்டிய துாரத்தில் லாபம் தென்படுகிறதா என, யோசிப்பதும் உறுதி. அதுதான், இப்போது நடந்துள்ளது.
யார் வில்லன்?
யாரெல்லாம், ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்குவதற்கு ஆர்வம் காட்டுவர் என்று நினைத்தனரோ, அவர்கள் அனைவரும், ‘ஜகா’ வாங்குகின்றனர். மிக முக்கியமாக, ‘இண்டிகோ, ஜெட் ஏர்வேஸ், டாடா குழுமம், எமிரெட்ஸ்’ ஆகியவை பின்வாங்கி விட்டன. ‘ஸ்பைஸ்ஜெட்’டைக் கேட்டால், ‘எங்களைப் பொறுத்தவரை, ஏர் இந்தியா மிகச் சிறிய நிறுவனம், அதனால், வேண்டாம்’ என்று சொல்லிவிட்டது.
பகிரங்கமாக இந்த நிறுவனங்கள், ஏர் இந்தியாவை வாங்குவதற்கு தயங்க காரணம் என்ன? அரசாங்கம் முன்வைத்துள்ள பல்வேறு கட்டுப்பாடுகள் தான் இங்கே வில்லன்.ஏர் இந்தியாவை வாங்கும் நிறுவனம், அதை அப்படியே அடுத்த மூன்றாண்டுகளுக்கு பெயரை மாற்றாமல் வைத்துக்கொள்ள வேண்டும். அதாவது வாங்கக்கூடிய விமான நிறுவனம், அதை தன்னோடுமுழுமையாக உடனடியாகஇணைத்துக்கொள்ள முடியாது.
அதன் அத்தனை பணியாளர்களையும், அதாவது, 11 ஆயிரத்து, 214 பணியாளர்களையும் வேலைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். இதற்கும் மேல், 33 ஆயிரத்து, 392 கோடி ரூபாய் கடனுக்கும் பொறுப்பேற்க வேண்டும்.
சிக்கல்
இங்கே தான் ஒவ்வொரு பிரச்னையாக வெளியே வருகிறது.‘இண்டிகோ’ நிறுவனதலைவ ரான, ஆதித்யா கோஷ், ‘ஏர் இந்தியாவின் அனைத்து விமான சேவைகளையும் வாங்கி நிர்வகிக்கும் அளவுக்கு எங்களுக்குத் தகுதி இல்லை!’ என, கூறியது கவனத்திற்குரியது.அதாவது, மொத்த நிறுவனத்திலும் எங்களுக்கு விருப்பமில்லை என்பது இதற்கு அர்த்தம். இண்டிகோ, வெளிநாடுகளுக்குப் பறப்பதற்கான உரிமத்தை தான் விரும்புகிறதே தவிர, உள்நாட்டு விமான சேவைகளை அல்ல.
வேறு சில சிக்கல்களும் எழுப்பப்படுகின்றன. ஏர் இந்தியா நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை வாங்கினால், அதற்குச் சொந்தமான இடங்களோ, கலைப் பொருட்களோ, வேறு உரிமங்களோ கிடைக்குமா? என்றால், அதற்கு பதில், இல்லை என்பதே.கடனுக்கான உத்தரவாதத்தை தருவதற்கு, ஏர் இந்தியா (அதாவது அரசாங்கம்)ஏதேனும் உதவி செய்யவும் வாய்ப்பில்லை. மிச்சமுள்ள, 24 சதவீதத்தை அரசாங்கம் ஏன் வைத்துக்கொள்ள வேண்டும்? அப்படியானால், அரசாங்கம் சார்பாக, நிர்வாகக் குழுவில் உறுப்பினரை நியமிக்குமா? நியமிக்கலாம். அது தொல்லையாச்சே!கத்திரிக்காய் கடைத்தெருவுக்கு வந்துவிட்டால், அதன் விலையைச் சந்தை தான் தீர்மானிக்கும். அதுதான், ஏர் இந்தியா விஷயத்திலும் நடக்கிறது.
அடி மாட்டு விலை
ஏர் இந்தியா பணியாளர்களின் நலனைக் காப்பாற்ற வேண்டும் என்று நினைக்கும் அரசாங்கம், ஒரு சில அம்சங்களை ஏற்றுள்ளது. உதாரணமாக, விருப்ப ஓய்வுத் திட்டம், பணியாளர்களுக்கான பங்குகளை வழங்குதல் ஆகியவற்றோடு நிலுவையிலுள்ள சம்பளப் பாக்கிகளுக்காக, 1,300 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என, தெரிவித்துள்ளது.
மேலும், ஓய்வுபெற்ற பணியாளர்களின் மருத்துவச் செலவுகள், அவர்களுடைய இலவச விமானப் பயணத்துக்கான செலவுகளையும் அரசே ஏற்க, சம்மதித்துள்ளது.இப்படியெல்லாம் பொறுப்புகளை ஏற்றாலும், ஏர் இந்தியா இன்னும் கவர்ச்சிகரமாக இல்லை. அரசாங்க நிறுவனம், அதுவும் நஷ்டத்தில் தத்தளிக்கும் நிறுவனம், அரசாங்கத்தாலேயே கைவிடப்பட்ட நிறுவனம், அதைப் போய் யாராவது கூடுதல் விலை கொடுத்து வாங்குவரா என்ன?
முடிந்தவரை மட்டம் தட்டி, அடிமாட்டு விலைக்கு வாங்கிப் போடுவது தானே சரி என்று, கார்ப்பரேட் நியாயம் எல்லார் கண்ணையும் மறைக்கிறது. அதனால், முடிந்தவரை இழுத்தடிக்கும் படலம் தொடர்வதாக ஒரு பேச்சு.இதை தான், காங்கிரஸ் கட்சியின் மணீஷ் திவாரியும் சொல்கிறார்; ஏர் இந்தியா பணியாளர்கள் சங்கமும் சொல்கிறது. இப்படி ஒரு கோணம் இருப்பதை முற்றிலும் புறக்கணித்துவிட முடியாது.
இன்னொரு வாதமும் உண்டு. நாங்கெல்லாம், ‘சிறுக கட்டிப் பெருக வாழ’ நினைக்கும் விமான நிறுவனங்கள். ‘யானை கட்டி போர் அடிக்க’ நாங்கள் என்ன அரசாங்கமா? அந்த விதமான அளப்பரிய வளங்களோ, வசதிகளோ எங்களிடம் இல்லையே என்ற பேச்சும் உலா வருகிறது. இதையும் புறக்கணிக்க முடியாது.
என்ன தீர்வு?
அப்படியானால் என்ன தான் தீர்வு? கடன் தொகையான 33 ஆயிரத்து, 392 கோடியை, அரசாங்கம் தள்ளுபடி செய்ய வேண்டும். பணியாளர்களை வைத்துக்கொள்ள வேண்டும் என, வற்புறுத்தக் கூடாது, நிர்வாகத்தில் தலையிடக் கூடாது என்பதோடு, ஏர் இந்தியா மொத்தத்தையும் ஒரே சொத்தாக விற்காமல், அதை பல்வேறு பகுதிகளாகப் பிரித்து விற்பனை செய்தால் தான், வாங்குவதற்கு முன்வருவர் என்கின்றனர், பொருளாதார நிபுணர்கள்.கையை விட்டுப் போனால் போதும் என்று, அரசாங்கமும் இத்தகைய நெருக்கடிகளுக்கு வளைந்து கொடுக்கக்கூடிய வாய்ப்பே அதிகம்.
ஆசை ஆசையாக வளர்க்கப்பட்ட பொதுத்துறை நிறுவனம் என்ற பெருங்கனவு, நிர்வாகச் சீர்கேடு என்னும், தீயில் கருகப் போகிறது. ஒற்றைக் கைமடித்து, பணிவாக சலாம் போடும் அழகு மகாராஜாவை இனி காணவே முடியாதோ?
ஆர்.வெங்கடேஷ்
பத்திரிகையாளர்
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|