பதிவு செய்த நாள்
25 ஏப்2018
00:50

புதுடில்லி : அனில் அம்பானியின், ‘ரிலையன்ஸ் நேவல் அண்டு இன்ஜினியரிங்’ நிறுவனத்தின் எதிர்காலம் குறித்து, அதன் கணக்கு தணிக்கை நிறுவனம் கேள்வி எழுப்பிஉள்ளது.
கப்பல் கட்டும் தொழிலில் ஈடுபட்டிருந்த, ‘பிபாவவ் டிபன்ஸ் அண்டு ஆப்ஷோர் இன்ஜினியரிங்’ நிறுவனத்தை, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம், 2016ல் கையகப்படுத்தியது.
இழப்பு:
இதையடுத்து, நிறுவனத்தின் பெயர், ‘ரிலையன்ஸ் டிபன்ஸ் அண்டு இன்ஜினியரிங்’ என, மாற்றப்பட்டது. அதன் பின், 2017ல், இதன் பெயர், ரிலையன்ஸ் நேவல் அண்டு இன்ஜினியரிங் ஆக மாறியது. இந்நிறுவனம், 2017 -– 18ம் நிதியாண்டின், நிதி நிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், 956 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய, 2016 -– 17ம் நிதியாண்டில், இழப்பு, 523 கோடி ரூபாயாக இருந்தது.
இதே காலத்தில், வருவாய், 564 கோடி ரூபாயில் இருந்து, 414 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. அதனால், இந்நிறுவனத்தின் எதிர்காலம் குறித்து, கணக்கு தணிக்கை நிறுவனமான, பதக் எச்.டி., அண்டு அசோசியேட்ஸ், அதன் அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளது.
கவலை:
அதில் கூறப்பட்டுள்ளதாவது: நிறுவனத்தின் இழப்பு, சொத்துகளை விட, அதிகமாக உள்ள கடன்கள், கொடுத்த கடனை திரும்ப தரக் கோரி வரும் நிறுவனங்கள், சில கடன்தாரர்கள் தொடுத்துள்ள வழக்குகள் போன்றவை கவலை அளிக்கின்றன. இது போன்ற ஸ்திரமற்ற சூழல் நிலவுவதால், வணிகத்தை தொடர்ந்து மேற்கொள்ளும் அளவிற்கு, நிறுவனத்திடம் போதிய திறன் உள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையால் நேற்று, ரிலையன்ஸ் நேவல் நிறுவனத்தின் பங்கு விலை, 13.36 சதவீதம் குறைந்து, 23.35 ரூபாயாக சரிவடைந்தது.
கப்பல் தொழிலில் சுணக்கம், பாதுகாப்பு துறை ஒப்பந்தங்களை பெறுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் போன்றவற்றால், தற்காலிகமாக நிதிச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
-ரிலையன்ஸ் நேவல் அண்டு இன்ஜினியரிங் நிறுவனம்
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|